Showing posts with label RAJ SIVA. Show all posts
Showing posts with label RAJ SIVA. Show all posts

Tuesday, October 3, 2017

சூரியனுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்?

Image may contain: one or more people, ocean, sky, twilight, outdoor, nature and waterஒளியை வெளிப்படுத்தும் ஒரு பொருளிலிருந்து ஒளியுடன் கூடவே சக்தியும் வெளிவருகிறது. இப்படி வெளிவரும் சக்தியை 'ஒளிர்வுத்தன்மை' என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் 'Luminosity'. ஒரு பொருளிலிருந்து, ஒரு செக்கனுக்கு வெளிப்படும் ஒளிச்சக்திதான் அதன் ஒளிர்வுத்தன்மையாகும். இதை 'வாட்' (Watt- W) இல் அளப்பார்கள்.
நம் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிச்சக்தி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 3.85X10^16 வாட்கள். அம்மாடியோவ். 1000 வாட் ஒளிவிளக்கைப் பார்க்கும்போதே நமக்கு நாக்கு வெளியே வந்துவிடுகிறது. "அட! சூரியன்தான் எவ்வளவு பெரியது. அதிலிருந்து பிரமாண்டமான சக்தி வருவது நாம் பிறந்ததிலிருந்து பார்த்து வருவதுதானே!" என்றுவிட்டு நகர்ந்து செல்ல நீங்கள் நினைத்தால், சற்றுப் பொறுங்கள். உங்களுக்கு நான் சொல்ல வந்த தகவல் இதுவல்ல. நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதது அது.
ஒரு மனிதன்அது, சூரியனைவிடப் பிரகாசமானவன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நீங்களோ அல்லது நானோ சூரியனைவிட உண்மையாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் காதலியிடம் சென்று, "நான் சூரியனைவிட அதிகமாக ஒளிர்கிறேன்" என்று பயப்படாமல் சொல்லுங்கள். கணவர்கள் தயவுசெய்து உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்வதைத் தவிர்க்கவும். உங்கள் பிரகாசம் எவ்வளவு என்று ஏற்கனவே அறிந்தவள் அவள். எனவே வேண்டாம்.
சூரியன் ஒளிர்கிறது. அது ஒளிர்வதால், அதற்கு ஒளிர்வுத்தன்மை இருக்கிறது என்பது சரி. மனிதனுக்கு எப்படி ஒளிர்வுத்தன்மை வரமுடியும்? அதுவும் சூரியனைவிட அதிகமாக? கரடி விடுவதற்கும் ஒரு அளவு கணக்கு இருக்கிறதல்லவா? ஆனால், இது கரடி அல்ல, உண்மை. நம்புங்கள்.
ஒரு பொருலிலிருந்து தானாகவே வெப்பமும், சக்தியும் உருவாகி வெளியேறுமானால் அதைக் 'கருவுடல் கதிர்வீச்சு' (Black body radiation) என்பார்கள். இந்த வகையில் சூரியனைப் போலவே, நம் உடலும் சக்தியை உள்ளிருந்து உருவாக்கி வெளியேற்ற்றிவரும் ஒரு உலைதான். சக்தியை உருவாக்கும் உலைகளை மனிதன் வெவ்வேறு வடிவங்களில் செயற்கையாக வடிவமைத்துத் தனத்துத் தேவையான மின்சாரம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கிறான். ஆனால், தானே சக்தியை உருவாக்கும் ஒரு உலையாக இருக்கிறான் என்பது இயற்கையின் பேராச்சரியம். இப்போது, அந்த மனித உலையை சூரியனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பது அதைவிடப் பேராச்சரியம்.
சூரியனின் மையக்கோளத்திலிருந்து (Core) உருவாகும் கதிரியக்கச் சக்தி, அதன் மேற்பரப்பையடைந்து, சூரியக் குடும்பத்தின் சுற்றுவட்டாரத்திற்கு பரவுகிறது. சூரியனின் மையக்கோளத்தின் வெப்பநிலை 15 மில்லியன் சதம பாகையாகும் (°C). அங்கிருந்து உருவாகும் கதிரியக்கச் சக்தி, மெல்ல மெல்ல வெளிநோக்கி அனுப்பப்பட்டு, ஒளிவெளிவரும் படலத்தில் (Photosphere) அதன் வெப்பநிலை 5500 சதம பாகையாக வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அது மேலும் சூரியனின் வெளிமண்டலத்தில் (Atmosphere) 4320 சதம பாகையாகி விடுகிறது. இருந்தாலும் இந்த வெப்பநிலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், மனிதனின் உடல் வெப்பநிலை, வெறும் 37.5 சதம பாகையே! இந்த 37.5 சதம பாகை எங்கே? சூரியனின் 5500 சதம பாகை எங்கே? எப்படி மனிதனைச் சூரியனுடன் ஒப்பிட முடியும்? சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையை, அதன் மேற்பரப்பின் அளவுடன் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு சதுர சதம மீட்டருக்குச் சூரிய மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலை, மனிதனின் ஒரு சதுர சதம மீட்டர் மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலையின் 121,000 (ஒரு இலட்சத்து இருபத்தோராயிரம்) மடங்கு அதிகமாகும். சூரியனின் மேற்பரப்புக் கிட்டத்தட்ட 6.1X10^22 சதம மீட்டர் ஆகும். இந்த மேற்பரப்பிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் (Luminosity) அளவு, 4X10^33 ergs/second. இந்த அளவுகள், அலகுகளைப் பார்த்துப் பயந்துவிட வேண்டாம். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டும்தான். மனிதனின் உடல் மேற்பரப்பை அண்ணளவாக 25000 சதம மீட்டர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் அளவு 1.3X10^10 ergs/second ஆகும். இது பலப்பல மடங்குகள் சிறியதாகும். அப்படியென்றால், சூரியனைவிட மனிதன் எப்படி அதிக ஒளிர்வுத்தன்மையை வெளிவிட முடியும்? சத்தியமே இல்லையல்லவா? அப்படியென்றால், உண்மையிலேயே நான் மேலே சொன்னது கரடி(பொய்)தானா? இல்லை. மனித உடலை அவ்வளவு சுலபமாக நீங்கள் கணக்கிட முடியாது. அது சூரியனைவிட அதிக சக்தியை வெளியிடுவது உண்மைதான்.
எந்த இடத்தில், எந்த விதத்தில் மனிதன் சூரியனைவிடப் பெரியவனாகிறான் தெரியுமா? அவனது கனவளவைக் (Volume) கொண்டு. உண்மையில் அளக்கப்பட வேண்டியதும் கனவளவுதானேயொழிய, மேற்பரப்பு அல்ல. சூரியனின் கனவளவைக் கணித்துக் கொண்டால், அது 1.4X10^33 கன சதம மீட்டர். இதன்படி, ஒவ்வொரு கன சதம மீட்டருக்கும், சூரியனால் வெளிவிடப்படும் ஒளிர்வுத்தன்மை, வெறும் 2.8 ergs/second ஆகிவிடுகிறது. இப்போது, மனிதனின் ஒளிர்வுத்தன்மை அளவிட்டால், ஒரு கன சதம மீட்டருக்கு 170,000 ergs/second (ஒரு இலட்சத்து எழுபதாயிரம்) என்னும் மிகப்பெரிய அளவாகிறது. இந்த அளவு, சூரியனைவிடப் பல மடங்குகள் அதிகம். அதாவது அறுபதாயிரம் மடங்குகள் அதிகம்.
ஒரு மனிதன், தன் முழு உருவத்தையும், சூரியனின் முழு உருவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தானானால், அவன் சூரியனைவிட 60,000 மடங்குகள் அதிகமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். இது கதையல்ல. நிஜம்.

Sunday, March 5, 2017

HYDROCARBON - ஹைட்ரோகார்பன்




ஹைட்ரோகார்பன் என்பது ஒருவகைப் பொருளை மட்டும் குறிப்பது அல்ல. அது பல பொருட்களுக்கான பொதுச்சொல். ரொம்பச் சுலபமாகச் சொன்னால், ஹைட்ரஜனும் (H), கார்பனும் (C) இணைந்து தோன்றும் கூட்டுப்பொருள். இங்கு பொருள் என்பது வாயுவையும் அப்பப்போ திரவத்தையும் குறிக்கின்றது.

இன்று தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனைப் பலர் வில்லத்தன்மை கொண்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் அது ரோஜா அரவிந்தசாமியா, போகன் அரவிந்தசாமியா, இல்லை தனியொருவன் அரவிந்தசாமியா என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. அதைத் தீர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதற்கான சிறு விளக்கம் இது. ஹை.கா நல்லதா, கெட்டதா என்பதையும், அதன் அரசியலையும் நான் இங்கு பேசப்போவதில்லை.

ஹை.கா என்றால் தனியொரு பொருள் இல்லையென்று மேலே கூறினேன். ஹைட்ரஜனும், கார்பனும் பல விதங்களில், பல படிநிலைகளில் ஒன்று சேர்கின்றன. அப்படி விதவிதமாக அவை ஒன்று சேரும்போது, வெவ்வேறு மூலக்கூறுகள் தோன்றுகின்றன. அவை எல்லாமே ஹை.கார்பன்கள்தான். சொல்லப் போனால், ஆயிரக்கணக்கான ஹை.கா இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மீதேன். தமிழ்நாட்டில் மீதேன் எடுக்கும் திட்டம், ஹை.கா எடுக்கும் திட்டம் என வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலுள்ள உள்ளடி அரசியல்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இங்கு பேசமுடியாது.

கார்பன் என்பது ஆறு எலெக்ட்ரான்களைக் கொண்ட ஒரு தனிமம். அதில் நான்கு எலெக்ட்ரான்களை யாருடனாவது பகிர்ந்துகொண்டு பதவிசா குடும்பம் நடத்த நினைக்கும். ஹைட்ரஜன் காதலியை அதற்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால், தன் நான்கு கரங்களையும் கொண்டு நான்கு ஹைட்ரஜன்களை அணைத்துக் கொள்ளும். ஹை.கா இல் ரொம்ப எளிமையான மூலகம், ஒரு கார்பனையும், நான்கு ஹைட்ரஜனையும் கொண்ட மூலக்கூறுதான்.

இதன் பெயர்தான் மீதேன் (Methane - CH4).

ஒரு கார்பன், மூன்று ஹைட்ரஜன்களையும் நான்காவதாக வேறொரு கார்பனையும் கூட்டுச் சேர்ந்து கொள்வதும் உண்டு. அப்போது மேலதிகமாக இரண்டு ஹைட்ரஜன்களும் அவற்றுடன் சேர்கின்றன. அப்படி இரண்டு கார்பன்களுடன் ஆறு ஹைட்ரஜன்கள் ஒன்று சேந்து உருவாவதை ஈதேன் (Ethane - C2H6) என்பார்கள். இதுபோல படிப்படியாக ஒரு கார்பனும், இரண்டு ஹைட்ரஜன்களும் தொடர்ச்சியாகச் சேர்ந்துகொண்டு புதிய மூலகங்களை உருவாக்குகின்றன அவை புரொபேன் (Propane - C3H8), பூடேன் (Butane - C4H10), பெண்டேன் (Pentane - C5H12), ஹெக்ஸ்டேன் (Hexane - C6H14) என்று வரிசையாகப் போய்க்கொண்டேயிருக்கும். இவையனைத்தும் கார்பனின் நான்கு எலெக்ட்ரான்களையும் தனித்தனி ஒற்றை இணைப்புகளாகக் கொண்டவை. இந்தவகை ஒற்றை இணைப்பு ஹை.கார்பன்களை அல்கேன் (Alkane) என்று வகைப்படுத்துகிறார்கள். அத்துடன் இவை சாட்சுரேட்டட் (Saturated) ஹைட்ரோ கார்பன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

கார்பன்கள் தனித்தனி ஒற்றை இணைப்புகளுடன் (Single Bond) இல்லாமல், இரட்டை இணைப்புகளுடனும் (Double Bond), மூன்று இணைப்புகளுடனும் (Triple Bond) தங்களுக்குள் சேர்ந்துகொள்கின்றன. இரட்டை இணைப்புடன் உருவாகும் ஹை.கார்பன்கள் அல்கீன் (Alkene) என்றும், மூன்று இணைப்புகளுடன் உள்ளவை அல்கைன் (Alkyne) என்றும் அழைக்கப்படுகின்றன. அத்துடன், சைக்ளோ அல்கேன் (Cycloalkane), அல்கடீன் (Alkadiene) என்னும் தொகுதிகளும் உண்டு. இவற்றை அன்சாட்சுரேட்டட் ஹைட்ரோகார்பன்கள் (Unsaturated) என்கிறார்கள்.


இவையெல்லாமே ஹைட்ரோ கார்பன்கள்தான்.


பொதுவாக ஹை.கா என்றால் மக்கிப்போகும், உக்கிப்போகும் கழிவுப்பொருட்களிலிருந்து உருவாகும் வாயுக்கள். உயிரினங்கள், மரங்கள் ஆகியவை நிலத்தில் புதைந்து அவைகள் சிதைவதால் உருவாகுபவை.
 
எத்தனையோ ஹைட்ரோ கார்பன்கள் இயற்கையில் கிடைக்க, அவற்றின் விளக்கங்கள் இல்லாமல் பொதுவாக ஹை.கா திட்டம் என்பதும், மீதேன் திட்டம் என்று சொல்வதும் எதையோ நமக்கு உணர்த்தவே செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஹை.கார்பனின் உபயோகங்களும், பயன்பாட்டு பெறுநிலையும் நல்லவையே! ஆனால் அவற்றை எப்படிப் பெறப்போகிறோம் என்பதில் தெளிவான விளக்கம் கிடைக்க வேண்டும்.

இரகசிய திட்டங்கள் போல நடைமுறைக்கு கொண்டுவந்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் அரசியல் ஏன் நடைபெறுகிறது என்றே புரியவில்லை.

Thanks
-ராஜ்சிவா-

Sunday, December 4, 2016

அறிவியல் பார்வையில் ராஜ்சிவா வின் வணக்கங்கள்



கழுத்தில் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அறுவை சிறிதோ, பெரிதோ நலமாக இருக்கிறேன். கவலைப்பட எதுவுமில்லை. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உங்கள் அன்றாட வாழ்க்கையின் நிகழ்விகளில் சிறு துரும்பைக்கூட இந்தப் பக்கமோ அந்தப்பக்கமோ மாற்றி வைத்துவிடப் போவதில்லை. எந்தவொரு ஐநூறு ரூபாய் நோட்டையும் மாற்றித் தரப்போவதுமில்லை. அதனால், அதில் சுவாரஷ்யமான செய்தி எதுவுமில்லை. ஆனால், நான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதால் ஆச்சரியமான தகவலொன்றைத் தெரிந்து கொண்டேன். தகவல் என்று வந்துவிட்டால், 'நான் சும்மாவே இருப்பதில்லை' என்று உங்களுக்குத்தான் தெரியுமே! 

ஆபரேசன் முடிந்த மறுதினம், நான் இருந்த அறைக்கு பிசியோதெரப்பிஸ்ட் ஒருவர் வந்தார். ஆபரேசன் செய்யப்பட்ட என் கழுத்தின் முள்ளந்தண்டுகள் பலமடைவதற்கும், தலையின் பின் பகுதியிலமைந்த, ‘மெடுல்லா ஒப்லாங்கட்டாவுக்குச்’ (Medulla Oblongatta) செல்லும் அனைத்து நரம்புகளும் மீட்டப்படுவதற்கும், பயிற்சியொன்றைத் தினமும் நான் செய்துவர வேண்டும் என்று கூறி, அதை எனக்குச் சொல்லித் தரப்போவதாகவும சொன்னார். இந்த ஒப்லாங்கட்டாவை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆம்! அதேதான். "என்னாச்சு......?".

அந்த பிசியோதெரப்பிஸ்ட் ஐந்துவிதமான பயிற்சிகளைச் சொல்லித் தந்துவிட்டு, ஆறாவதாக, அந்த முக்கியமான பயிற்சியைச் சொல்லித்தர ஆரம்பித்தார். "இதுதான் சமீபத்தில் மிகச்சிறந்த பயிற்சியாக ஜேர்மனில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் செய்ய வேண்டும். அத்துடன் காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்யவேண்டும்“ என்றும் சொல்லி வைத்தார்.

“கண்களை மூடி, ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கச் சொன்னார். இரண்டு கைகளையும் நெஞ்சின் இரு பக்கத்திற்கும் நன்றாக நீட்டச் சொன்னார். தோள்கள் நிமிர்ந்த நிலையில் இருக்க, முழங்கைகளை மெல்ல மடித்து இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரச் சொன்னார். விரல்கள் நிமிர்ந்த நிலையில், உள்ளங் கைகளை ஒன்றுடன் ஒன்று முட்டும்படி இறுக்கமாய் அழுத்தி வைத்திருக்கச் சொன்னார். "உங்களால் இப்போது தோள்கள், கைகள். பின்கழுத்துப் போன்ற பகுதிகளில் ஒரு இறுக்கத்தை உணர முடிகிறதா?" எனக் கேட்டார். நானும், "ஆம்!" என்றேன். "இப்படி இருக்கும் போது உங்கள் கைத்தசைகள் கொடுக்கும் அழுத்தத்தால், நரம்புகள் மீட்டப்பட்டு, முள்ளந்தண்டு ஆரோக்கியமாவதோடு, ஞாபகசக்தியும் நெருடப்படுகிறது” என்றார்.

மெதுவாக மூச்சை வெளியே விட்ட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தேன். நான் அவரையும், அவர் என்னையும் கைகூப்பி வணக்கம் செய்தபடி நின்றுகொண்டிருந்தோம்.

அவர் சொல்லித் தந்த அந்த அற்புதமான பயிற்சி வேறொன்றுமில்லை. காலம் காலமாக நாம் செய்யும் வணக்க முறைதான். 

-ராஜ்சிவா-

Thursday, September 1, 2016

கிராவிட்டேசனல் வேவ்ஸ்!

பலர் கேட்டுக்கொண்டதன்படி, 'ஈர்ப்பலைகள்' என்று சொல்லப்படும் ' பற்றிய கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். கட்டுரை விளக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சற்றே நீளமாகிவிட்டது. மன்னிக்க.
-ராஜ்சிவா-

ஐன்ஸ்டைன் என்னும் ஆச்சரிய மனிதன்

     உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும். 

     “அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”

     சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.

     கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது. 

     முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.

     இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் திணிவின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே! பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான திணிவினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது. 

     சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது. 

     அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் திணிவினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக திணிவுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன. 

     அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் திணிவையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக்  கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும். அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும்.      'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO -  Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது. 

     2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில்,  'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.        

     ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன. 

     லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள். 

     1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'

     இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம். 

     பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.

     முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான்.  இறுதியாக ஒன்று:
     'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம். 

-ராஜ்சிவா-

Friday, July 1, 2016

டெலிபோர்ட்டேசன் Teleportation

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) படத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விண்வெளியி அலையும் நம் எதிர்காலச் சந்ததியினரின் கதை அது. அதில், வரும் விண்கலத்தில் பயணம் செய்துகொண்டு இருப்பவர்கள், ஒரு குழாய் போன்ற வடிவமுள்ள ஒரு பகுதிக்குச் சென்று,  ‘டெலிபோர்ட்டேசன்’ (Teleportation) மூலமாக வேறு இடத்துக்குச் செல்வார்கள். நவீன இயற்பியலில் 'டெலிபோர்ட்டேசன்', சாத்தியமான ஒன்றுதான். இந்தச் சாத்தியங்களை, அணுத்துகள்களில் பரிசோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளார்கள். ஃபோட்டான் துகள்களை, டெலிபோர்ட்டேசன் மூலமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், ஒரு முழுமையான பொருளையோ அல்லது மனிதனையோ அப்படி அனுப்புவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதிலும், ஒரு மனிதனை முழுமையாக, ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்துக்கு அனுப்புவதென்பதை இப்போதுள்ள அறிவியலின்படி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ‘ஃபாக்ஸ்’ (Fax) இயந்திரம் மூலமாக, ஒரு காகிதத்தில் உள்ளவற்றை மின்செய்தியாகக் கடத்தி, இன்னுமொரு இடத்தில் பெறுவதுபோல, டெலிபோர்ட்டேசன் மூலமாக மனிதனையும் அனுப்புவது என்பது சிக்கலான ஒரு விசயம் (ஃபாக்ஸ் இயந்திரத்தை, புரிய வேண்டுமென்பதற்காக ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்).

மனிதனை டெலிபோர்ட்டேசனில் அனுப்ப வேண்டுமாயின், அவன் மூளையிலுள்ள எண்ணங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். மனிதன் அணுத்துகளால் ஆக்கப்பட்டிருப்பதால், அவனை அனுப்புவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவனது எண்ணங்கள், அணுத்துகள்கள் கிடையாது. அவற்றைப் படியெடுக்கும் முறையும் இங்கு அவசியமானது.

ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு அனுப்பப்படும் மனிதனின் ஞாபகங்கள் இல்லாவிட்டால், அவனை அதே நபர் என்று சொல்ல முடியாதல்லவா? இது அறிவியலில் சிக்கலான பிரச்சனையாகவே இப்போது பார்க்கப்படுகிறது.

இன்றிருக்கும் சூழ்நிலையில் சாத்தியமே இல்லாத இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது.

ரஷ்யா சமீபத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருகிறது. அதன்படி, ஒரு புதுத் திட்டத்தை 2.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவில் ரஷ்யா செய்ய இருக்கிறது. 'ஸ்டார் ட்ரெக்' படத்தில் வருவது போலவே ஒரு 'டெலிபோர்ட்டேசன்' கருவியை உருவாக்குவதுதான் ரஷ்யாவின் நோக்கம். இதற்கு 20 வருட கால அவகாசத்தையும் எல்லையாக முடிவு செய்திருக்கிறது.

இந்தத் திட்டம் மட்டும் நடைபெறுமானால், மனிதன் அறிவியலின் அடுத்த படிநிலைக்குச் சென்றுவிடுவான்.

-ராஜ்சிவா-

Thursday, August 6, 2015

விஸ்கியெல்லாம் விஸ்கியல்ல

 

 மதுவைப்பற்றித் தமிழ்ச்சமுதாயம் பேசியே தீரவேண்டிய கட்டாயத்திலுள்ள இந்தச் சமயத்தில், விஸ்கிபற்றிய என்னாலான அணில் தகவலுதவி.
"விஸ்கியெல்லாம் விஸ்கியல்ல”

இதுதான் மதுவைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் பொதுமொழி.
"பார்த்தீர்களா! நீங்கள் முழிக்கும் முழியே சரியில்லை". எனக்குத் தெரியும், நான் சொல்வது உங்களுக்குப் புரியப் போவதில்லையென்று. சரி, விளக்கமாக அதைப் பார்க்கலாம்.

‘Whisky' என்ற விஸ்கியும், ‘Whiskey' என்ற விஸ்கியும் ஒன்றேயல்ல. ஒரு விஸ்கிக்கு 'e' எழுத்து அதிகமாக இருக்கிறது. உண்மையில் ஸ்காட்லாந்தில் உருவாக்கப்படும் விஸ்கி, 'Whisky' என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் உள்ள விஸ்கிகளின் முப்பாட்டன்தான் இந்த ஸ்காட்ச் விஸ்கி. ஆனால் ஸ்கொட்லாந்து விஸ்கி தவிர்ந்த ஏனைய விஸ்கிகள், 'Whiskey' என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக ஸ்காட்லாந்திற்கு அடுத்த மாற்றாகத் தயாரிக்கபட்ட அயர்லாந்து விஸ்கிதான் முதன்முதலாக 'Whikey' என்று அழைக்கப்பட்டது. ஐதாவது ஐரிஷ் விஸ்கி.
ஏழுவிதமான விஸ்கிகள் உலகெங்கும் பரவலாக பாவனையில் உள்ளன.

1, ஸ்காட்ச் விஸ்கி (Scotch Whisky)

2, ஐரிஷ் விஸ்கி (Irish Whiskey),

3, கெண்டக்கி விஸ்கி (Kentucky) இதையே பேர்பேர்ன் விஸ்கி (Bourbon)
என்பார்கள்,

4, கனடியன் விஸ்கி (Canadian Whiskey),

5, டென்னஸ்ஸி விஸ்கி (Tennesse Whiskey),
இவை தவிர்ந்து,

6, ஜப்பானிஸ் விஸ்கி (Japanese Whiskey)

7, நியுஸிலாண்ட் விஸ்கி (New Zealand)

தடைகோரி யாரும் விண்ணப்பிக்கும் வரை மதுத் தகவல்கள் தொடரலாம்………!

-ராஜ்சிவா-

Saturday, May 30, 2015

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3


முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3




ஆரம்பப் பெருவெடிப்பின் பின்னர் அண்டத்தில் நடைபெற்ற காட்சிகளையெல்லாம் நம்மால் இப்போதும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்மால் மீண்டும் பார்க்க முடியும். "என்ன, அவைதான் நடந்து முடிந்து போனவையாயிற்றே! இறந்த காலத்தை நம்மால் எப்படிக் காண முடியும்?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனால் நிஜத்தில் எப்போதும் நாம், 'நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'. இறந்தகாலத்தை நோக்கி நம்மால் நகர முடிவதில்லையேயொழிய, நம் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ரொம்பக் குழம்பிப் போயிருப்பீர்கள். அதனால், இதைக் கொஞ்சம் விரிவாகவே நாம் பார்க்கலாம். உங்கள் நண்பனிடம் "உன் வெற்றுக் கண்களால் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?" என்று கேட்டுப் பாருங்கள். அவன் ஒரு குறித்த அளவுத் தூரத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்வான். அந்தப் பதில் சரியானது போலவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால், உண்மையில் நம் கண்களால் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறோம் தெரியுமா? பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையெல்லாம் நம் கண்களால் பார்க்கிறோம். சூரியன் தவிர்ந்து, நமக்கு மிக அருகாமையில் இருப்பது 'அல்பா செண்டாரி A', 'அல்பா செண்டாரி B' என்னும் இரட்டை நட்சத்திரங்கள். இவை பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதற்கு அப்புரம் 25 ஒளியாண்டுகள், ஐம்பது ஒளியாண்டுகள், நூறு ஒளியாண்டுகள் தூரத்திலெல்லாம் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள காலக்ஸிகளும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஒளியானது ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்யக் கூடியது. அப்படியென்றால், ஒளி ஒரு ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் என்பதை நாம் கணிப்பிடலாம். கணக்கிட்டு வருவது எத்தனை கிலோமீட்டர்களோ அதுவே ஒரு ஒளியாண்டுத் தூரம் ஆகும். இப்போது, பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் காலக்ஸிகள் எத்தனை கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்படியும் பார்க்கலாம். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து, ஒளி நம் கண்களை வந்தடைய வேண்டுமென்றால், நான்கு ஆண்டுகள் தேவை. அதாவது அந்த நட்சத்திரம் தெரிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரியும். தற்போது நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த நட்சத்திரம் 25 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குமானால், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 25 வருடத்துக்கு முன்னால் இருந்த நட்சத்திரத்தை. இன்று உள்ள நட்சத்திரத்தை அல்ல. அதாவது 25 வருடத்தின் முன்னரான இறந்த காலத்தையே அந்த நட்சத்திரத்தில் காண்கிறீர்கள். அப்படிப் பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள காலக்ஸியொன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பில்லியன் வருடத்துக்கு முன்னால் உள்ள இறந்த காலத்தைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த நட்சத்திரம் அங்கு இருக்கிறதா? அல்லது வெடித்துச் சிதறிவிட்டதா? என்று கூட உங்களுக்குத் தெரியாது. இப்போ புரிகிறதா, நீங்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. நமது சூரியன் கூட எட்டேகால் நிமிடங்களின் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. நாம் பார்க்கும்போது தெரியும் சூரியன், எட்டேகால் நிமிடங்களுக்கு முன்னரான சூரியன். சூரியனிலிருந்து ஒளி நம்மை வந்தடைய எட்டேகால் நிமிடங்கள் ஆகிறது. நாம் பார்க்கும் அனைத்தும் இப்படித்தான். ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் உங்கள் மனைவியைக் கூட, நானோ செக்கன்கள் இடைவெளிகளின் பின்னர்தான் பார்க்கிறீர்கள். அதே கணத்திலல்ல. நம் கண்களால் பார்ப்பவை எல்லாமே இறந்தகாலம்தான். இதன்படி பார்த்தால், மனிதன் கண்டுபிடித்த தொலைநோக்கிக் கருவிகள்தான், உலகின் முதன்முதலான 'கால இயந்திரம்' (Time Machine) என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொலைநோக்கிக் கருவிகளின் தொழில்நுட்பம் வார்தைகளால் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட தொலைநோக்கிக் கருவிகளில் சிலவற்றை விண்வெளிகளில் கூட மிதக்கவிட்டுள்ளார்கள். பூமியின் அட்மாஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் வெப்பக்கதிர்த் தடைகள் ஏதும் இல்லாமல் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவுகின்றது. இந்தத் தொலைநோக்கிக் கருவிகள்மூலம், பெருவெடிப்பிற்கு 480 மில்லியன் வருடத்தின் பின்னுள்ள 'குழந்தை அண்டத்தைப்' (Baby Universe) புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த அண்டங்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. யாருக்குத் தெரியும், பெருவெடிப்பின் கணத்தையும் மனிதன் ஒருநாள் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் பார்க்கவே முடியாது. நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். 



பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.



விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கிடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது. அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள். நான் ஆரம்பத்தில் கூறிய பலூனின் முதல் நிலை இதுதான்.




கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன. கரும்சக்திதான் அதிகமாக அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 


இன்றைய அறிவியலின்படி கரும்சக்தியும், கரும்பொளும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு மட்டுதான் நாம் வந்திருக்கின்றோம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேவ்வேறு எதிர்ச் செயல்களைச் செய்தாலும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பானவையா? அல்லது வெவ்வேறானவையா? என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்துமதத்தின் சிவனும், சக்தியும் போல இவை இரண்டும் இருப்பது என்னவோ நிஜம். இவை இரண்டும் கருமையாக இருப்பது அந்த நினைப்புக்குகான இன்னுமொரு பலம். இதனால் நான் இந்துமதத்தை இங்கு வலியுறுத்துகிறேன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். இந்தச் சக்திகள்பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த நம் அறிவுள்ள மூதாதையர்கள், இதை ஏதோ வகையில் குறித்துச் சொல்லியிருக்க, நாம் அதை இந்த விதத்தில் அர்தப்படுத்தியும் இருக்கலாம். எது எப்பிடியிருந்தாலும், கண்களுக்குத் தெரியாத இந்த இரு மாயசக்திகளும் இந்தப் பேரண்டத்தையே வழிநடத்திச் செல்கின்றன என்பதுதான் தற்போதய நிஜம். இப்பகுதியுடன் இந்த கட்டுரை முற்றுபெறுகிறது.


-ராஜ்சிவா-

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2


முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2



இயற்பியல் மற்றும் கணித விதிகளின்படி, மறுக்க முடியாத கோட்பாடுகளை (Theory) அமைத்து, தனக்கென ஒரு தனிவழியில் குவாண்டம் இயற்பியல் சென்றுகொண்டிருக்கிறது. குவாண்டம் இயற்பியல் நிறுவும் கோட்பாடுகள் அனைத்துமே மந்திரங்கள் நிறைந்ததொரு மாய உலகில் வசிப்பது போன்ற பிரமையையே நமக்கு ஏற்படுத்தும். நம்பவே முடியாத ஆச்சரியங்களும், வியப்புகளும், மர்மங்களும் நிறைந்தது குவாண்டம் உலகு. நாம் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருப்பதே, அண்டவெளியில் இருக்கும் கருந்துளைகளிலிருந்து வெளிவரும் ஹோலோகிராம் (Hologram) காட்சிகள்தான் என்கிறது குவாண்டம். அதுமட்டுமில்லை, 'யூனிவேர்ஸ்' (Universe) என்று சொல்லப்படும் 'ஒரே அண்டம்' என்று சொல்வதே தப்பு, நம் அண்டத்தைப் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன என்கிறது குவாண்டம். அதனை 'மல்ட்டிவேர்ஸ்' (Multiverse) என்றும் அழைக்கிறது. சமுத்திரத்தில் உள்ள நீரில் எவ்வளவு நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ, அதைவிட அதிக அளவில் அண்டங்கள் இருக்கின்றன என்கிறது. நம்முடைய அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போலப் பல அண்டங்களும் இருக்கின்றன என்கிறது. அந்த அண்டங்களிலும் நாம், இங்கு வாழ்வது போல, அங்கும் வாழ்ந்து கொண்டிருப்போம் என்கிறது. "என்ன இது சுத்தப் பேத்தலாக இருக்கிறது. இவர் ஏன் இப்படி உளறுகிறார்?" என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள். உலகில் உள்ள விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகள்தான் இவை. குவாண்டத்தின் முடிவுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லும் போதும், அவை தனித்தனியே பிரமிக்க வைக்கும் மர்மக் கதைகள்போல இருக்கும். படிக்கப் படிக்கச் சுவாரஷ்யமாக இருக்கும். ஆனால், இந்தக் கட்டுரை குவாண்டம் பற்றிச் சொல்வதற்கானதல்ல. பிறிதொரு சமயத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் குவாண்டம் பற்றி நாம் விரிவாகவே பார்க்கலாம். இப்போது, நம் கட்டுரைக்கான அளவுக்குக் குவாண்டம் என்ன சொன்னதோ அதை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.


குவார்க்குகளையும் பிரித்து, அதனுள் என்ன இருக்கின்றது என்ற ஒரு கோட்பாட்டைக் குவாண்டம் இயற்பியல் வெளியிட்டது. அந்தக் கோட்பாடுதான் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்திய 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். அறிவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட கோட்பாடு அது. அதன் தாக்கத்தை இன்றும் பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. இப்போது நாம் அதிர்விழைக் கோட்பாடுபற்றி முழுமையாகப் பார்க்காவிட்டாலும், அதன் அடிப்படையைப் பார்த்துவிடலாம். 'அதிர்விழைக் கோட்பாடு' என்ன சொல்கிறதென்றால், அணுவில் உள்ள மிகச் சிறிய குவார்க்கைப் பிரித்துப் பார்த்தால், பெரும்பாண்மையான பகுதி வெற்றிடமாக இருக்க, அதனிடையே மிகச்சிறிய இழைகள் அதிர்ந்தபடி (இசைத்தபடி) மிதந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு வீணையின் தந்திக் கம்பிகள் அதிர்வது போல, மிக நுண்ணிய இழைகள் அங்கே அதிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த 'அதிர்விழை' (String) மனிதனால் அளவிடவே முடியாத ஆகச்சிறிய அளவான 'பிளாங்க் அளவைக்' (Planck length) கொண்டது. ஒன்றுடன் 32 பூச்சியங்கள் சேர்த்தால் வரும் இலக்கத்தின் ஒரு பங்கு மில்லிமீட்டர்தான் ஒரு 'பிளாங்க் அளவு' என்கிறார்கள். அதாவது தசமப் புள்ளியுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்து வரும் எண் அது. 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) என்னும் ஜேர்மன் இயற்பியலாளரால் கண்டுபிடிக்கபட்ட ஒரு மாறிலி எண்தான் இந்த 'ப்ளாங்க் அளவு' என்று சொல்லப்படுகிறது. குவாண்டம் இயற்பியலின் செயற்பாடுகள் கூட இந்தச் சிறிய அளவீட்டுத் தளத்திலேயே ஆரம்பமாகின்றது. அண்டம் எந்த அளவுக்குப் பிரமாண்டமானதோ, அதற்கு எதிரான அளவில் குவாண்டம் மிக நுண்ணியது. ஆனால் ஆச்சரியமாக, அண்டத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் எனக் கோடானகோடி பொருட்கள் இயங்குவது போல, அணுவுக்குள் குவாண்ட அளவில் கோடானகோடி உபஅணுத்துகள்கள் (Subatomic Particles) இயங்கிக் கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அணுவுக்குள்ளும் ஒரு அண்டம் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்" என்று நம்முன்னோர்கள் இதைத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. குவாண்டம் சொல்வதைப் போல, அணுவுக்குள் இருப்பதெல்லாம் மிகமெல்லிய பிளாங்க் அளவுள்ள அதிர்விழைகள்தான் என்றால், பொருட்களோ, மனிதனோ என்று யாருமே இல்லை. எல்லாமே அதிர்விழைகள்தான். அதாவது எல்லாமே இசைதான். இந்தப் பூமியும், ஒட்டு மொத்த அண்டமும் அதிர்விழைகளால், இசையாக அதிர்ந்து கொண்டிருக்கின்றன. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமே பிரபஞ்சம் முழுவதும் பரந்திருக்கிறது என்று இந்து மதம் சொல்வதும், 'முதலில் வார்த்தை இருந்தது' என்று பைபிள் சொல்வதும் இங்குப் பொருந்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். இங்கு நான் சொல்ல வருவது, அறிவியல், ஆன்மீகத்தை சிலசமயங்களில் தொட்டுச் செல்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நம்முன்னோர்களுக்கு அறிவியலின் ஆழமான கருத்துகளை 'யாரோ' சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த 'யாரோ', யாரென்பதில்தான் அறிவியலும், ஆன்மீகமும் வேறுபட்டுக் கொள்கின்றன. இனி நாம் மீண்டும் ஆரம்பப் பெருவெடிப்புக்கு வரலாம். 





பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியானது குவார்க்குகளாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். இப்போது குவாண்டம் இயற்பியலின்படி அது மேலும் நுண்ணியதான அதிர்விழைத் துண்டுகளாகவும் இருக்கலாம். அப்படியிருக்கலாமெனில், அந்தப் புள்ளியானது குண்டூசி முனையளவானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்ப்டியிருந்தாலும், அந்தப் புள்ளி முடிவில்லாத எடையையும், முடிவில்லாத அடர்த்தியையும் கொண்டிருந்திருக்கும். அதன் எடையின் கனத்தினாலும், அடர்த்தியினாலும் உருவான பெரும் வெப்பத்தினால் நிலைகுலைந்து, திடீரென அது வெடித்திருக்கலாம். அந்தப் புள்ளி வெடித்த கணத்திலிருந்து முதல் மூன்று நிமிடங்கள்வரை மிகப்பெரிய அணுஉலையைப் போல, அங்குச் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. அங்கு நடந்தது எல்லாமே கதிர்வீச்சுகளாகத்தான் இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு உபஅணுத்துகள்களும் உருவாகத் தொடங்கின. மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ஆண்டுகளின் பின்பு முதல் எலெக்ட்ரான், ஐதரசன் அணுக்கருவுடன் இணைந்து, அண்டத்தின் முதலாவது அணுவை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் உருவாகத் தொடங்கின. இவையனைத்துமே பெருவெடிப்பின் மூலம் உருவான, பெருவிரிவின் வேகத்துடனே நடந்து கொண்டிருந்தன. பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத்தொடங்கிய அண்டம் இன்றுவரை விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.




பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார். மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள். ஆனால், அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிபினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைதான் நான் ஆரம்பத்தில் சொன்ன பலூனின் இரண்டாவது நிலை. "எப்படி அண்டம் வெடித்து விரிந்து பெரிதாகியதோ, அதேபோலச் சிறுத்துச் சுருங்கி மீண்டும் புள்ளியாகும்" என்பதுதான் இயல்பு. ஆனால், நடந்ததோ வேறு. நம்பவே முடியாத ஆச்சரியம். இன்றுவரை உலகில் உள்ள அனைத்து அறிவியலாளர்களையும் பிரமிப்புக்குள் வைத்திருக்கும் விடை தெரியாத மர்மம் அது.



- தொடரும்

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 1


முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 1


உங்கள் உள்ளங்கையில் பொத்தி வைத்தபடி, சுருங்கிய நிலையில் ஒரு பலூன் இருக்கிறது. அதை எடுத்து ஊதுகிறீர்கள். நிறையக் காற்று ஊதக்கூடிய பலூனாக இருந்தாலும், ஓரளவு பெரிதாகிய பின்னர் ஊதுவதை நிறுத்திவிடுகிறீர்கள். அதற்குமேல் ஊதினால் வெடித்துவிடலாமென்ற பயம் காரணமாகவோ அல்லது ஊதிய பருமன் போதுமென்று நினைத்ததாலோ, ஊதுவதை நிறுத்திவிட்டிருப்பீர்கள். சரி, இப்போது அந்தப் பலூனுக்கு என்ன நடக்கும்? அந்தப் பலூன் அந்தப் பருமனிலேயே நிலையாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அதன் வாயை இறுக்கக் கட்டிவிடுவீர்கள். பலூனின் பருமன் மாறாமல் நிலையாக அப்படியே இருக்கும். இதுதான் வழமையும் கூட. ஆனால், இதைவிட வேறு இரண்டுவிதமான சம்பவங்களும் அந்தப் பலூனுக்கு நடக்கலாம். ஒன்று, அந்தப் பலூனை உங்களால் முடிந்தளவு ஊதிக்கொண்டே போவது. அது பருமனாகிப் பருமனாகி, ஒருநிலையில் காற்றின் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறும். இரண்டாவது, ஊதியது போதும் என்ற நிலையில் பலூனிலிருந்து வாயை எடுக்க, அதில் ஊதப்பட்ட காற்று, படிப்படியாக வெளியேறிச் சுருங்கியதொரு பலுனாகப் பழைய நிலைக்கு மாறும். இந்த மூன்று சம்பவங்களையும் கொண்ட செயற்பாடுகளைப் பலூன் உள்ளடக்கியிருக்கிறது. இதைப் பற்றிச் சொல்லும்போது, சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், விரிவடையும் பேரண்டத்திற்கே இது உதாரணமாகச் சொல்லப்படுகிறது. விரிவடையும் பேரண்டம் மர்மங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டது. "அண்டம் விரிவடைவதில் ஆச்சரியம் இருக்கலாம். அதிலென்ன மர்மம் இருக்கப் போகிறது?" என்று நீங்கள் நினைப்பீர்கள். அது என்ன மர்மமென்று சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். அதுமட்டுமல்ல, அந்த மர்மம் ஏதோ ஒரு வகையில் ஆன்மீகத்தையும் தொட்டுச் செல்வது இன்னுமொரு ஆச்சரியம். அந்த மர்மம் என்னவென்று நாம் இப்போது பார்க்கலாம். அதற்கு முன்னர், பேரண்டம் என்னும் சுருங்கிய நிலையில் இருந்த பலூன், எப்படிப் பெரியதொரு பலூனாக ஊதப்பட்டது என்பதைப் பார்த்துவிடலாம்.



'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்யமுடியுமா? இந்தக் கேள்வியே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா? சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே! பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா? ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது. இன்றிலிருந்து கிட்டத்தட்ட 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலை இருந்திருக்கிறது. அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.




13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அதனாலேயே பல விஞ்ஞானிகள் இதைப் 'பெருவெடிப்பு' என்று சொல்வதற்குப் பதில் 'பெருவிரிவு' (Expansion) என்கிறார்கள். வெடிக்கும் கணத்தில் அந்த இடத்திலிருந்த வெப்பநிலை என்ன தெரியுமா? ஒன்றுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்தால் எவ்வளவு பெரிய இலக்கம் வருமோ, அந்தளவு சதமபாகை (°C) வெப்பநிலை அங்கேயிருந்தது. நம்பவே முடியாத வெப்பநிலை. திடீரென வெப்பநிலை உயர்ந்து, சடுதியாக வெடித்து, விரிவடைந்த அண்டம் அதே வேகத்தில் குளிரடையவும் ஆரம்பித்தது. வெடித்த ஒன்றரை நிமிடத்தில் வெப்பநிலை பில்லியன் சதமபாகையாகக் குறைந்துபோனது. தொடர்ந்து 56,000 வருடங்களின் பின்னர் 8700°C ஆகக் குறைந்தது. இன்றும் அண்டம் முழுவதும் அந்த வெப்பநிலை பரந்துபோய் இருக்கிறது. இன்று அதன் வெப்பநிலை -270°C ஆகக் குறைந்திருக்கிறது. பேரண்டம் இப்படித்தான் உருவாகியது என்று அறிவியல் சொல்லும்போது, பலரால் நம்ப முடியாமல் இருக்கிறது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களையும், கோள்களையும் கொண்ட இந்தப் பேரண்டம், ஒரு சிறுபுள்ளியாக எப்படிச் சுருங்கியிருந்திருக்க முடியும் என்ற கேள்வி சந்தேகமாக அவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அறிவியல் இந்தச் சந்தேகங்களைச் சுலபமாகத் தீர்த்துவைக்க முயன்றாலும், சிக்கலான அறிவியல் விளக்கங்களைப் புரிந்துகொள்ளச் சிலரால் முடிவதில்லை. அந்த விளக்கம் என்னவென்று நாமும் பார்த்துவிடலாம். தமிழால், எந்தச் சிக்கலான அறிவியலையும் இலகுவாகப் புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. 







 உங்களுக்கு முன், நூறு கிலோ எடையுள்ள சதுரமான இரும்புத்துண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இரும்புத்துண்டு, இரும்பு அணுக்களால் உருவானது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இரும்புத் துண்டை உடைத்துச் சிதைத்து வரும் மிகமிகச்சிறிய துகளைத்தான் 'இரும்பு அணு' (Fe) என்கிறோம். செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி அழகியதொரு வீடு கட்டுவது போல, கோடிக்கணக்கான இரும்பு அணுக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த இரும்புத்துண்டு. நாம் அதில் ஒரு இரும்பு அணுவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு அணுவில், அணுக்கருவும் (Nucleus), அதைச் சுற்றியபடி எலக்ட்ரான்களும் (Electron) இருக்கும். சரி, அந்த அணுவை ஒரு கிரிக்கெட் மைதானமளவு பெரியது என்று இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள். அபடியெனில், அதன் அணுக்கரு அந்த மைதானத்தின் நடுவே கிடக்கும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவாகத்தான் இருக்கும். ஒரு அணுவின் பருமனில் கோடி மடங்கைவிடச் சிறியதாகவே அணுக்கரு இருக்கும். அணுக்கருவுக்கும் எலெக்ட்ரான்களுக்குமிடையில் இருப்பது மிகப்பெரிய வெற்றிடம். எலெக்ட்ரான்களுக்கு எடை கிடையாது. அதனால், அணுவின் எடை அணுக்கருவிலேயே இருக்கிறது. இப்போது இந்த உதாரணத்தின்படி பாருங்கள். ஒரு கிரிக்கெட் மைதானத்தின் மொத்த எடையும், அதன் மையத்தில் உள்ள கிரிக்கெட் பந்தில்தான் உள்ளது. அதாவது ஒரு அணுவின் எடை என்பது அந்த அணுவின் கோடி மடங்கு சிறிய அணுக்கருவில்தான் இருக்கிறது. இப்போது, மேலே சொல்லப்பட்ட நூறு கிலோ இரும்புத்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேச்சுக்கு அந்த நூறு கிலோ இரும்புத்துண்டில் மொத்தமாக ஒரு கோடி இரும்பு அணுக்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (மீண்டும் சொல்கிறேன் ஒரு பேச்சுக்குத்தான்). இரும்புத்துண்டின் மொத்த எடையும், கோடி இரும்பு அணுக்களில்தான் இருக்கும். அதாவது, கோடி இரும்பு அணுக்கருக்களில் இருக்கும். இப்போது நாம் அந்தக் கோடி அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தோமென்றால், ஒரு குண்டூசி முனையளவைவிடச் சிறியதாகவே இருக்கும். ஆனால் அந்தக் குண்டூசி முனையளவிருக்கும் அணுக்களை நம் கைகளால் தூக்கவே முடியாது. காரணம் அது நூறு கிலோ எடையுள்ளதாக இருக்கும். அதோடு மிகவும் அடர்த்தியானதாகவும் இருக்கும். இப்போது, அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் எடுத்து, அவற்றில் உள்ள எலெக்ட்ரானை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது, எஞ்சுவது கைமுனையளவு அணுக்கருக்களாகத்தான் இருக்குமென்பது புரிகிறதா? ஆனால், அறிவியல் தன் விளக்கத்தை இத்துடன் முடித்துவிடவில்லை. அது அணுக்கருக்களையும் பிரித்து, அங்கு உள்ளவை அனைத்தையும் மேலும் கண்டு கொள்ள முயன்றது. 



நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொருளைப் பிரித்தால் வரும் மிகச்சிறிய பகுதியை 'அணு' (Atom) என்று கண்டுபிடித்தார்கள். அணுவைப் பிரிக்கவே முடியாதென்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் அணுவைப் பிளந்து, அதனுள் அணுக்கருவும், இலத்திரனும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். பின்னர் அணுக்கருவுக்குள் புரோட்டான் (Proton) என்னும் துகளும், நியூட்ரான் (Neutron) என்னும் துகளும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், அறிவியலின் தாகம் அத்தோடு தீர்ந்துவிடவில்லை. அந்தப் புரோட்டானையும், நியூட்ரானையும் கூடப் பிரித்துப் பார்த்தது அறிவியல். புரோட்டான், நியூட்ரான் ஆகிய இரண்டுமே குவார்க் (Quark) என்றழைக்க்கப்படும் மிகநுண்ணிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கிறன என்று சமீபத்தில் கண்டுபிடித்தார்கள். குவார்க்குகளில் இதுவரை ஆறுவகைக் குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புரோட்டானிலும், நியூட்ரானிலும் இரண்டு வகையான குவார்க்குகளே இருக்கின்றன. அவை 'மேல்க்குவார்க்' (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றன. ஒரு புரோட்டானில் இரண்டு மேல்க்குவார்க்குகளும், ஒரு கீழ்க்குவார்க்குமாக மொத்தமாக மூன்று குவார்க்குகள் காணப்படுகின்றன. இதுவே தலைகீழாக, நியூட்ரானில் இரண்டு கீழ்க்குவார்க்குகளும், ஒரு மேல்க்குவார்க்கும் காணப்படுகிறது. பூமியிலிருக்கும் பொருட்கள் யாவும் அணுக்களால் உருவானவை என்று நமக்குத் தெரியும். அதனால் இப்போது நாம் பொருட்களெல்லாம் குவார்க்குகளாலானவை என்று சொன்னால் தப்பேயில்லை. ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது அணுக்கருவென்பதாலும், அதனுள் புரோட்டானும், நியூட்ரானும் இருப்பதாலும், ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது குவார்க்குகள்தான் என்னும் முடிவுக்கு நாம் வரலாம். இந்தக் குவார்க்குகளின் பருமன் என்ன தெரியுமா? ஒன்றிற்கு அருகே 17 பூச்சியங்களுடன் வரும் இலக்கத்தின் ஒருபங்கு, மில்லிமீட்டர். அதாவது 0.00000000000000001மிமீ நுண்ணளவுடையது. 800 கிலோமீட்டர் வட்டமான நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தை, ஒரு அணுவாக நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு தமிழ் எழுத்தின் அளவுதான், ஒரு குவார்க்கின் அளவாக இருக்கும். குவார்க் என்பது எந்த அளவு சிறியது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குவார்க்குகளையும் ஒன்று சேர்த்தால், பிக்பாங்க் பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியின் சிறிய அளவை உங்களால் இப்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எல்லாக் குவார்க்குகளும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு புள்ளியாகிப் பெருவெடிப்பாக வெடித்தது என்றுதான் அறிவியல் சொல்கிறது. இந்த இடத்தில்தான் நவீன அறிவியல் 'குவாண்டம்' (Quantum) என்னும் புதியதொரு பரிமாணத்தை எடுத்தது. குவாண்டம் அணுவின் அடிவேரையே ஆராயத் தொடங்கியது. 



- தொடரும்

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 7)




சமீபத்தில் 'எனக்குள் ஒருவன்' என்றொரு படம் பார்த்தேன். அதில் சித்தார்த் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழுக்குப் புதுமையானதொரு கதையைச் சொல்லும் படமது. அந்தக் கதையின் கரு இதுதான். ஏழையாக, அழகில்லாமல் இருக்கும் ஒருவன், தான் காணும் கனவில் அழகிய, பணக்காரனாக வருகிறான். நிஜத்தில் இருப்பதை விட, என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ, அப்படியெல்லாம் கனவில் வருகிறான். ஒரே மனிதன் இருவேறு தளங்களில், வெவ்வேறு மனிதனாகக் காட்சி தருகிறான். ஆனால், படத்தின் முடிவில்தான் தெரிகிறது, நடந்தவை எல்லாமே தலைகீழானவையென்று. நிழல் நிஜமாகவும், நிஜம் நிழலாகவும் முடிவில் மாறிவிடுகிறது. ரொம்பக் குழப்புகிறேனா? படத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒருமுறை பார்த்துவிடுங்கள். நான் சொல்ல வருவது அப்போது புரியும். அதுசரி, அந்தப் படத்தைப்பற்றி இங்கு எதற்குச் சொல்கிறேனென்றுதானே யோசிக்கிறீர்கள். சொல்கிறேன். லியர்னாடோ டா வின்சி நிஜமான 'மொனா லிசா' ஓவியத்தைக் கி.பி.1503ம் ஆண்டளவுகளில் வரைந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த மொனா லிசா ஓவியம் தற்சமயம் பாரிஸில் இருக்கும் 'லூவ்ரெ' (Louvre) கண்காட்சியகத்தில் இருக்கிறது. அதனால் நிஜமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மொனா லிசா ஓவியத்தை 'லூவ்ரெ மொன லிசா' என்று இனிச் சொல்லிக் கொள்வோம். இதுவரை உலகமெங்கும் தனியாளாக நின்று வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்த 'லூவ்ரெ மொனா லிசா'விற்குப் போட்டியாக முளைத்தது ஒரு புது 'மொனா லிசா'. உலகமே அதிசயத்தில் துள்ளிக் குதித்தது. ஏற்கனவே, 'டா வின்சி' ஒரு மர்ம மனிதராக ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருவதோடு, அவரின் பல ஓவியங்களும் மர்மங்கள் நிறைந்தவையென்று பார்க்கப்பட்டுவரும் வேளையில், இப்படியொரு புதுத் திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அச்சு அசலாக இரண்டும் ஒரே மொனா லிசாவாக இருந்ததால், ஒருவேளை அது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியாக இருக்கலாமென்றும் சந்தேகப்பட்டார்கள். அப்புறம் இது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியல்ல, மொனா லிசா ஓவியத்தின் இரட்டை என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்படியொரு இரட்டை (Twin) மொனா லிசா ஓவியத்துக்கு இருப்பதை யாரும் அதுவரைஅறிந்திருக்கவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்குக் கூட இந்தச் செய்தி புதிதாகத்தான் இருக்குமென நம்புகிறேன். 



லூவ்ரெ மொனா லிசாவின் இரட்டை மொனா லிசா என்று சொலப்படும் ஓவியம், சில நூற்றாண்டு காலமாக யாரும் தீண்டாத ஓவியமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும் தேசியக் கண்காட்சிச்சாலையில் (The Prado, Spain's national museum) இருந்து வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் டா வின்சியின் ஓவியங்களைப் பலர் நகலாக வரைந்திருக்கிறார்கள். அவற்றில் மொனா லிசாவின் ஓவியத்தையும் நகலெடுத்துப் பல ஓவியங்கள் இருக்கின்றன. நிஜமான ஓவியம் இருக்கும்போது, நகல்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அந்த நகல்களும் திறமையான ஓவியர்களாலேயே வரையப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல், அவை முந்நூறு, நானூறு ஆண்டுகள் பழமையானவை. ஆனாலும் அவை நகலென்பதாலேயே அதிகக் கவனம் கொடுக்கப்படாமல் வைக்கப்படுகின்றன. மொனா லிசாவின் நகல் ஓவியங்களை, பிராடோ தேசியக் கண்காட்சிச்சாலையில், தனியாகப் பாதுகாத்து வந்தனர். மிகச்சமீபத்தில், நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பழைய ஓவியங்களுக்கு 'எக்ஸ் கதிர்' (X Ray), 'புற ஊதாக்கதிர்' (Ultra Violet), 'அகச்சிவப்புக் கதிர்' (Infrared) ஆகிய கதிர்களைச் செலுத்தி ஆராயும் முறை தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ளது. இந்தக் கதிர்ச் சோதனைகளால் ஒவ்வொரு மொனோ லிசா நகல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அவற்றில் இருந்த ஒரு மொனா லிசா ஓவியத்தில், மொனா லிசாவின் உருவம் மட்டும் தெளிவாகத் தெரிய, உருவத்தைச் சுற்றியுள்ள பின்னணியில் கருப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. கருப்புநிறப் பின்னணி பூசப்பட்டிருந்தது ஏனோ வித்தியாசமான உணர்வைக் கொடுக்க, அதை நன்றாக ஆராய்ந்து பர்த்தார்கள். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது. அந்த ஓவியத்தின் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்திப் பார்த்தபோது மிரண்டே போனார்கள். அதுவரை காணத்தவறிய ஒரு காட்சியை அவர்கள் அங்கே கண்டனர். 




அந்த மொனா லிசா ஓவியத்தில் எக்ஸ் கதிர்கள் பட்டவுடன், கருப்பு நிறத்துக்குக் கீழே வேறொரு அழகான வர்ணமயமான பின்னணி அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பின்னணிக் காட்சியைச் சரியாகக் கவனித்தபோது, நிஜமான லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தின் பின்னணி எதுவோ, அச்சு அசலாக அந்தப் பின்னணி அங்கே இருந்தது. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை அந்த ஓவியத்தை ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதாவது ஒரு அழகான ஓவியத்தின் மேல் பகுதிக்குக் கருப்பு வர்ணத்தை வேண்டுமென்றே தீட்டி உருமறைப்புச் செய்திருக்கிறார்கள். நிஜ ஓவியத்தைப் போலவேயிருக்கும் இந்த ஓவியம், யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. யார் அப்படிச் செய்திருந்தார்களென்பது பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் காணப்படவில்லை. கி.பி.1660ம் ஆண்டளவுகளில் அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் இருந்தது. அந்தக் கருப்பு வர்ணத்தை மெதுவாக சுரண்டி நீக்க முயற்சித்தபோது, அது இலகுவாகவே அந்த ஓவியத்திலிருந்து நீங்கியது. அப்புறம் என்ன. அந்தக் கருப்பு நிறம் மொத்தமாக நீக்கப்பட்டது. நீக்கிவிட்டுப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. லூவ்ரெ மொனா லிசாவை அப்படியே உரித்து வைத்ததுபோல இன்னுமொரு மொனா லிசா அங்கே காணப்பட்டாள். ஒருவேளை இதுவும் ஏனைய மொன லிசாக்களைப்போல நகல் ஓவியமாக இருக்குமோவென்ற ரீதியில் ஆராய்ந்து பார்த்தபோது, அந்த ஓவியம் லூவ்ரெ மொனா லிசாவின் நகலல்ல என்று இலகுவாகப் புரிந்து போனது. இரண்டு ஓவியங்களிலும் இருந்தது ஒரே மொனா லிசாதானென்றாலும் அவை வரையப்பட்டிருந்த பார்வைக் கோணங்களில் சற்றே மாற்றமிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஏனைய நகல்கள் அனைத்திலும் மொனா லிசாவின் பின்னணிக் காட்சிகள் வெவ்வேறான விதங்களில், மழுப்பப்பட்டவையாக இருந்தன. ஆனால் இந்த மொனா லிசாவில் இரண்டு பின்னணிக் காட்சிகளும் ஒன்றுபோல இருந்தன. இரண்டு மொனா லிசாக்களின் காலங்களை ஆராய்ந்து பார்த்தபோது, கிடைத்த பதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது.




இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் பலவித ஆராய்ச்சிகளுக்குட்படுத்திப் பார்த்தபோது, இரண்டு ஓவியங்களுமே ஒரே காலத்தில், அதுவும் ஒரே நேரத்தில் வரையப்பட்டதாகத் தெரிய வந்தது. அதாவது, லியர்னாடோ டா வின்சியே இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் வரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், லியர்னாடோ டா வின்சி, மொனா லிசாவை மாடலாக இருக்கும்படி வைத்து, அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது, டா வின்சியைப் போலவே ஓவியம் வரைவதில் திறமையுள்ள வேறொருவர், அருகில் நின்றுகொண்டு இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "லியர்னாடோ டா வின்சியே ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர், இரண்டொரு நாட்கள் கழித்து, முதலாவது ஓவியத்தைப் பார்த்து இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்கலாம்தானே!". இப்படி ஒரு சந்தேகம் அனைவருக்கும் வருவது இயல்புதான். 'அது எப்படி இரண்டு ஓவியங்களையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இருவர் அருகருகேயிருந்து வரைந்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்கு வந்தார்கள்? ஓவியங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்ததற்குப் பெரிய காரணம் இருந்தது. அதுவும் ஆச்சரியமான ஒரு காரணம்தான்.



தொடர்வதற்கு முன்னர் ஒன்று. மொனா லிசா ஓவியங்களில் இப்போது இரண்டு ஓவியங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு ஓவியங்களையும் குறிப்பிடுவதற்கான பெயர்களை நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். நிஜமான மொனா லிசா என்று கருதப்படும் ஓவியத்தை, 'லூவ்ரெ மொனா லிசா' என்று சொல்வார்களென முன்னர் சொன்னேனல்லவா? அதுபோல, இந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை 'பிராடோ மொனா லிசா' (Prado Mona Lisa) என்று அழைக்கிறார்கள். நாங்களும் இனி அப்படியே அழைத்துக் கொள்ளலாம். இனி விசயத்துக்கு வருகிறேன். இரண்டு ஓவியங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டன என்பதற்கான சான்றுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா? லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரையும்போது, எந்த எந்த இடங்களை அழித்து மீண்டும் திருத்தங்கள் செய்திருந்தாரோ, அதே இடங்களில் பிராடோ மொனா லிசா ஓவியத்திலும் அழித்துத் திருத்திய மாற்றங்கள் இருந்தன. அதாவது ஓவியம் வரையும்போது ஏற்படும் தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் திருத்தி வரையும்போது, அங்கு ஆழமான அடையாளங்களும், ஓவியங்களில் பயன்படுத்தும் மை அதிகளவில் ஒன்றுக்குமேல் ஒன்றாகப் பூசப்பட்டிருக்குமல்லவா? இவையனைத்தும் இரண்டு ஓவியங்களிலும் ஒன்றுபோல இருந்தன. லூவ்ரெ மொனா லிசாவில் அப்படிப் பல இடங்களில் டா வின்சி திருத்தங்களைச் செய்திருந்தார். அதேயளவு இடங்களில் பிராடோ மொனா லிசாவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இதுவொரு சாதாரண நிகழ்வு கிடையாது. தற்செயலாக அமையக் கூடிய நிகழ்வாகவும் இருக்க முடியாது. ஒரே இடத்திலிருந்து இருவர் ஒரே ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும்போது, அதில் தலைமையாக இருந்து வரைபவருக்கு ஏற்படும் அதிருப்தியினால் மாற்றங்கள் செய்யும்போது, அவரது சிஷ்யரானவரும் அந்த மாற்றங்களைச் செய்து வரைந்திருக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்ல முடிந்தது. அத்துடன் அந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர் நிச்சயமாக டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்க முடியுமென்ற முடிவுக்கும் வந்தார்கள். நீங்கள் பார்க்கும் அந்த பிராடோ மொனா லிசாவை நன்றாக உற்றுப் பாருங்கள். டா வின்சியே வரைந்ததாகச் சொல்லப்படும் நிஜ லூவ்ரெ மொனா லிசாவை விட, மிக அழகான தோற்றத்தில் அந்தப் பிராடோ மொனா லிசா ஜொலிப்பது தெரியும். அது மட்டுமில்லாமல், அந்த மொனா லிசாவின் உடையின் மேல் போர்த்தியிருக்கும் மெல்லிய பட்டுத் துணியினூடாக ஆடைகள் தெரிவதைத் தத்ரூபமாக வரைந்திருப்பது தெரியும். டா வின்சியைப் போலவே கைதேர்ந்த ஓவியர் ஒருவராலேயே அப்படி வரைந்திருக்க முடியும். அல்லது டா வின்சியால் மிகக்கவனமெடுத்துப் பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்க முடியும். காரணம் நிஜ மொனா லிசா ஓவியத்தை விட, இது மிகவும் அழகாகவும், இளமையாகவும் வரையப்பட்டிருக்கிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான். 



டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவர்தான் அந்த ஓவியத்தை வரைந்திருக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தால், அது அவரின் இரண்டு சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்கும். அந்த இருவரில் ஒருவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியும். முன்னர் அவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர்தான் டா வின்சியின் காதலரான 'அந்த்ரேயா சலை' (Andrea Salai) என்பவர். அவர் இல்லாத பட்சத்தில் டா வின்சியின் பிரதான சிஷ்யரான ஃபிரான்செஸ்கோ மெல்ஷி' (Francesco Melzi) ஆகவும் இருக்கலாம். திறமையின் அடிப்படையில் பார்த்தால் மெல்ஷி வரைந்திருக்கவே சாத்தியம் அதிகம் உண்டு. ஆனால், டா வின்சியின் அந்தரங்க ஓவியங்களை, அவருடன் இருந்து வரையக் கூடியவரென்று பார்த்தால் சலையாக இருக்கும் சாத்தியம் உண்டு. இரு ஓவியங்களும் மிக அருகருகே இருந்தவாறே வரையப்பட்டிருக்க வேண்டும். அதற்குக் காரணம் இரண்டு ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் பார்வைக் கோணம் (Angle of view) என்று சொன்னேனல்லவா? அந்தப் பார்வைக் கோண வித்தியாசத்தைக்கூட ஆராய்ச்சியாளர்கள் அளந்திருக்கிறார்கள். மிகச்சரியாக 2.7 அங்குலம் இடைவெளிகளிலுள்ள பார்வைக் கோணங்களில் அந்த இருவரும் நின்றுகொண்டு மொனா லிசாவை வரைந்திருக்கின்றனர். இதற்கு இன்னுமொரு முக்கிய ஆதாரம் இரண்டு படங்களிலும் காணப்படுகின்றது. மொனா லிசா உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் மேற்பகுதியின் ஒரு பக்கம், சொற்ப அளவில் பிராடோ மொனா லிசா ஓவியத்தில் தெரிகிறது. ஆனால், லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தில் அந்த நாற்காலியின் அடையாளம் தெரியவில்லை. இதிலிருந்து, லூவ்ரெ ஓவியத்தை வரைந்தவர் மொனா லிசாவுக்கு நேர் எதிரே நின்று வரைந்திருக்கிறாரென்றும், பிராடோ ஓவியத்தை வரைந்தவர் சற்று இடப்பக்கம் நின்றபடி வரைந்திருக்கிறாரெனவும் தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான் சிலருக்கு முக்கியமானதொரு சந்தேகம் தோன்றுகிறது. 


லியர்னாடோ டா வின்சி இடது கைப்பழக்கமுள்ளவர் என்பதை முன்னர் சொல்லியிருந்தேனல்லவா? அப்படியென்றால், இடது பக்கம் நின்று வரைந்தவராக லியர்னாடோ டா வின்சியாகவல்லவா இருக்கவேண்டும். இடது பக்கம் வரையும் பலகை இருக்கும்போது, அதை இடக்கையால் வரைவதுதானே இலகுவாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, நாம் தற்சமயம் நிஜமென்று நினைத்துக் கொண்டிருக்கும் லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சியின் சிஷ்யன் வரைந்திருக்க வேண்டும். பிராடோ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்க வேண்டும். உண்மை ஏன் இப்படியும் இருக்கக் கூடாது? சரியாகப் பார்த்தால், அழகாகவும், ஜொலிப்பாகவும், இளமையாகவும், தெளிவாகவும் இருப்பது பிராடோ ஓவியம்தான். அப்படிப் பார்க்கையில் அதை டா வின்சி வரைந்திருக்கத்தான் சாத்தியம் அதிகம். இதுவரை நிஜத்தை நிழலென்றும், நிழலை நிஜமென்றும் நாம் நம்பி வருகின்றோமா? இப்போது இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் 'எனக்குள் ஒருவன்' படத்தைப் பற்றி நான் ஏன் சொன்னேனென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எது எப்படியிருந்தாலும், இரண்டு ஓவியங்களிலும் டா வின்சியின் ஆளுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவரைக்கும் மகிழ்ச்சிதான். இதை மீளப்பரிசோதனை செய்யும் அளவுக்கு லுவ்ரெ மொனா லிசா ஓவியம் இல்லை. மேலதிகமான பரிசோதனைகளுக்கு அதை உட்படுத்தும்போது கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே அந்த ஓவியம் மிகவும் பழுதடைந்த நிலையிலேயேதான் காணப்படுகிறது. அதனால் அதுவே டா வின்சி வரைந்த நிஜ ஓவியமென்று நம்பிவிடுவதில் நம் யாருக்கும் பிரசனை இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் டா வின்சி ஒரு முக்கிய தேவையைக் கருதியே இரண்டுவிதமான பார்வைக் கோணங்களில் வரைந்தெடுத்திருக்கிறாரென்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது தலையே சுற்றுவது போல இருக்கும். மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை, டா வின்சி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறாரென்று, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி டா வின்சி முயற்சி செய்து பார்த்தது என்ன தெரியுமா? மனித வரலாற்றிலேயே முதன்முதலாக முப்பரிமாணத் தோற்றத்தைத் (3 Dimension) தரக்கூடிய ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்கிறார் என்பதுதான் அது.


- தொடரும்