Thursday, October 13, 2016

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் பழமையான கல்லறை


சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 113 முன்னோர்களின் உடல்கள் களிமண் தொட்டிகளுக்குள் அடக்கம் செய்து பதப்படுத்தப்பட்டுள்ளன.

இதை கண்டுபிடித்த சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் முன்னோர்களின் செயலை வியந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மண்பாண்டங்களில் வைத்து புதைக்கும் சடங்கு சீனாவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் முக்கியத்துவமாக நினைக்கின்றனர்.

அந்த கல்லறையில் குழந்தைகள் உடல்கள் மட்டுமே இந்த முறையில் புதைக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர்களுடைய உடல் மட்டுமே பருவ வயதுடையதாக இருந்தன.
வடக்கு சீனாவில், ஹெபெய் மாகாணத்தில் ஹாங்குவா நகரில் இந்த கல்லறைப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு களிமண் பாண்டாங்களை உடல்களுக்கு உறைபோல செய்து புதைத்துள்ளனர்.

ஒவ்வொரு உடலுக்கும் இரண்டு அல்லது மூன்று மண்பாண்டங்களை பயன்படுத்தியுள்ளனர். அந்த மண்பாண்டங்களில் ஒரு இடத்தில் மட்டும் சிறு துளையும் போட்டுள்ளனர்.
அது அவர்களுடை ஆன்மா அந்த துளைவழியாக வந்து போகும் என்ற நம்பிக்கையாம். இது உலகில் இதுவரை எங்கும் காணப்படாத ஒரு ஈமச்சடங்கு முறையாகும்.

தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த மே மாதம் 6 கல்லறைகள் மட்டுமே கண்டுபிடித்தனர். பிறகு, 100க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கலாம் என கூறியிருந்தனர். விரிவான ஆய்வில் இப்போது 113 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சீன வரலாற்று ஆசிரியர்கள், கூறும்போது, இந்த கலாச்சாரம் கி.மு. 202 ல் மேற்கத்திய பகுதியில் வாழ்ந்த ஹான் வம்சத்துக்கு உரியது என கணித்துள்ளனர்.

2000 ஆண்டுகளை கடந்தும் அதில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெட்டுப்போகாமல் காணப்படுவது. அவர்களிடம் சிறந்த அறிவியல் அறிவே இருந்திருப்பதை உணர்த்துகிறது.

Friday, October 7, 2016

கெட்டுப்போன முட்டையில் கெட்டிக்காரத்தனம்



நான் மதுரை மாவட்டம், கருமாத்தூர் - கலுங்குபட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. என்னுடைய பெயர் காசிமாயன். 

நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன.

அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன. அதில் இரண்டு முட்டைகளை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். 

இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன.

மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன். இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு வயது முடிந்துவிட்டது போலும். அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும்  முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.

இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

நான் இந்த முறையினை அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெற்ற விதைத் தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டேன். அப்பொழுது எனக்கு தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள (ARS - Agricultural Research Station) வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ரெங்கநாயகி அவர்கள் கற்றுத்தந்தார்கள். இந்த அருமையான பயிற்சியினை ஏற்பாடு செய்து கொடுத்த அருள் ஆனந்தர் கல்லூரிக்கு நன்றி

- காசிமாயன்,
கருமாத்தூர் - கலுங்குபட்டி,
மதுரை  மாவட்டம்.