Thursday, August 20, 2015

பாஸ்போர்ட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

பாஸ்போர்ட் என்பது என்ன? 
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. எனவே இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?  என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

பாஸ்போர்ட்டின் வகைகள்:
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார  நோக்கத்திற்காக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் என நான்குவிதமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதற்கான தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது.  இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிக்கப்படும்.

கட்டண விவரம்:
பாஸ்போர்ட் பெறுவதில் ஆர்டினரி (Ordinary), தட்கல் (Tatkal) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
10 வருடத்திற்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1000 ரூ
10 வருடத்திற்கான 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 2500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 3000 ரூ
முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், கணவன்/மனைவி பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்கு – 1000ரூ
கட்டண விவரங்களை http://passport.gov.in/cpv/FeeStructure.htm இத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

 பாஸ்போர்ட் பெற எங்கே விண்ணப்பிப்பது?
புதியதாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா Passport Seva Kendra (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். விண்ணப்பப்படிவத்தை இந்த தளத்திற்கு சென்றும் பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்பாயின்மெண்ட் வாங்குவதற்கும் ஒரு நேரம் உள்ளது. http://passportindia.gov.in/AppOnlineProject/online/appointment இத்தளத்தில் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன்படுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் பெற அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகியன தேவை.
  1. அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக ஒருவருடத்திற்கு முன்னர் செலுத்திய மற்றும் கடைசியாக செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம். இவையெல்லாம் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும். மேற்கூறியவற்றில் இரண்டு சான்றுகள் அவசியம் கொடுக்க வேண்டும்.
  2. பிறந்த தேதிச் சான்றுக்குக் கீழ்கூறுவனவற்றில் ஏதேனும் ஒன்று: (அ) விண்ணப்பதாரர் 26.01.89 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்புச் சான்றிதழ். (ஆ) பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் (இ) கெஜட்டடு (நோட்டரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வழங்கப்படும் சான்று.

வேறு சான்றிதழ்கள்:

    1. 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை எடுத்துச் செல்லவும்.
    2. உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
    3. பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்,
    4. மேலும்  திருமணச் சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
    5. பழைய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
    6. எட்டாம் வகுப்புக்குக் குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம்.  26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
பாஸ்போர்ட் தொலைந்து போனால்: பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதனுடன் தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் ஒன்றும் மற்றும் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இதற்கும் கொடுக்க வேண்டும்.
 ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: 
http://passportindia.gov.in/AppOnlineProject/pdf/
New_Online_Appointment_Booking_Process.pdf
  இத்தளத்திற்கு சென்று
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய: http://passportindia.gov.in/AppOnlineProject/statusTracker/
trackStatusInpNew
இத்தளத்திற்கு சென்று கேட்கும் விவரங்களைக் கொடுத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு:

  • அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களைத் தொடர்பு கொள்வதற்கு http://passportindia.gov.in/ AppOnlineProject/locatePSK/locatePFCInp இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.
  • பாஸ்போர்ட் சேவை மையத் தொலைபேசி எண்: 1800-258-1800
  • மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://passportindia.gov.in இத்தளத்திற்க்குச் செல்லவும்.

இவள் பாரதி
 நன்றி – புதிய தலைமுறை
 

பாஸ்போர்ட் தொடர்பான கேள்வி-பதில் !

பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன்.


 
1. என் மகனுக்கு வயது 21. இவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க நடைமுறைகள் என்ன?
வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளம் (http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink) மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பம் சமர்பிக்கவும். இணைய தளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி செலான் மூலமாகவோ பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தாரருக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும்..

அ. இருப்பிட சான்றிதழ் (அட்ரஸ் புரூப்)
 
ஆ. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
 
இ. கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (10 ம் வகுப்பு  அல்லது 12 ம் வகுப்பு  அல்லது  பட்டப் படிப்புக்கான சான்றிதழ்)
 
மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும், இந்த நகல்களின் அசல் ஆவணங்களையும் சரி பார்க்க  கொண்டு வர வேண்டும்.
 
2. என் வயது 69. என் மகன் இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்டான். அவனோடு நானும் சென்று செட்டிலாக திட்டமிட்டிருக்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை. இப்போது எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று சொல்கிறார்கள். உண்மையா?

இதில் எந்த சிரமும் இல்லை. முந்தைய கேள்விக்கான பதிலில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பம் செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 258 1800 - ஐ தொடர்பு கொள்ளவும். தமிழிலும் பதில் பெறலாம்.

3. பாஸ்போர்ட் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்கள், அதற்கான லிங்கை கொடுக்க முடியுமா? http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
4. நான் பாஸ்போர்ட்க்காக விண்ணப்பித்து போலீஸ் வெரிஃபிகேஷனுக்காக கடந்த 5 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸ் வெரிஃபிகேஷன் எத்தனை நாட்களுக்குள் நடைபெறும்?
 
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களின் ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்படும். பொதுவாக 5 முதல் 10 நாட்களில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருக்கும்.
 
5. கடந்த மாதம் என் பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். நான் அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன். இப்போது என்ன செய்யலாம். மீண்டும் ஒரு புதிய பாஸ்போர்ட்டை வாங்கலாமா?
 
நீங்கள் பாஸ்போர்ட் தொலைந்தற்கான போலீஸ் புகாருடன் பாஸ்போர்ட் ரீ இஸ்யூவிற்காக விண்ணப்பிக்கவும். தொலைந்த பாஸ்போர்ட் -ன் நகல் இருந்தால் இணைக்கவும். அனக்சர் எல் என்ற உறுதிமொழி பத்திரம், நோட்டரி பப்ளிக் ஒப்புதலை சமர்பிக்க வேண்டும்.
6. என் பாஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் மாதம் எக்ஸ்பெயரி ஆகிவிடும். அதன் பின் எப்படி புதுப்பிப்பது?
நீங்கள் எக்ஸ்பெயரி  தேதிக்கு ஒரு ஆண்டு முன்போ அல்லது எக்ஸ்பெயரி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணபிக்கலாம். பழைய பாஸ்போர்டை கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம்.
 
7. என் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். அடுத்த வாரம் அவரின் பாஸ்போர்ட் காலாவதியாக உள்ளது. என் தந்தையின் பாஸ்போர்ட்டை நான் இங்கிருந்து புதுப்பிக்க முடியுமா?
 
தங்களின் தந்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம். தாங்கள் இந்தியாவில் விண்ணப்பிக்க இயலாது.
 
8. என் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். நான் தற்போது சென்னையில் வேலை காரணமாக செட்டிலாகிவிட்டேன். தற்போது நான் சென்னையில் இருந்து கொண்டு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியுமா? எனக்கு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை இல்லை? வோட்டர் ஐடியும் கேரளாவில் எடுத்தது தான் இருக்கிறது?
 
தாங்கள் சென்னையில் வசிப்பதால், சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா மையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தங்களிடம் மற்ற இருப்பிட சான்றிதழ்கள் (பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு, வாட்டர் பில், கேஸ்பில், லேண்ட் லேன் போன் அல்லது போஸ்ட் பெயிட் பில், இன்கம் டாக்ஸ் அஸஸ்மென்ட் ஆர்டர், டிரைவிங் லைசென்ஸ், பிரபலமான மதிக்கத்தக்க வேலை செய்யும் கம்பெனியிடம் லெட்டர் ஹெட்டில் சர்டிபிகேட்) கொண்டு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இவைகளையும் கொண்டு விண்ணப்பிக்கவும்.
 
9. விசாவுக்கும் பாஸ்போர்ட்க்கும் என்ன வேறுபாடு?
 
பாஸ்போர்ட் பிற நாட்டிற்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டு. விசா என்பது அந்த நாட்டுக்கு எதற்காக செல்கிறோமோ அதற்கான அந்த நாட்டின் அனுமதிச் சீட்டு.
 
10. பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டணங்கள் என்னென்ன செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குள் கிடைக்கும்?
 
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.
1. இருப்பிடத்திற்கான சான்றிதழ்
2. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம் நார்மல் பாஸ்போர்ட் 36 பக்கங்கள் கொண்டது ரூ.1500/- ஆகும். 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு ரூ.500/- கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்
* தட்கல் - ரூ.3,500
* மைனர் - ரூ.1,000
*  PCC - ரூ.500/
* டேமேஜ்  / லாஸ்ட் (Damage / lost) - ரூ. 3,000
போலீஸ் விசாரணை முடித்து, எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
 
11. பாஸ்போர்ட் சேவை மையங்களின் சேவை குறித்து விளக்கி சொல்லுங்களேன்?
 
வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட்களை வழங்க, 77 பாஸ்போர்ட் சேவா மையங்களை (PSK) இந்தியா முழுவதிலும் செயல்படுத்தி வருகிறது.
 
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வரும் 11 மாவட்டங்களில் (பாண்டிச்சேரி, காரைக்கால் உள்பட) வசிக்கும் விண்ணப்பதாரரின் வசதிக்காக மூன்று சேவா மையங்கள் சென்னையில் கீழ்க்கண்ட விலாசங்களில் இயங்கி வருகிறது.
 
* பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமம் - டாக்டர் .பானுமதி ராமகிருஷ்ணா ரோடு, சாலிகிராமம், சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், அமைந்தக்கரை - நவீன்ஸ் பிரசிடியம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரம் - துரைசாமிரெட்டி தெரு, தாம்பரம். (டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை அருகில்), சென்னை.
 
இந்த மூன்று சேவா மையங்களிலும் 2450 விண்ணப்பங்கள் தினமும் பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தப் பிறகு  பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரரின் வசதிக்காக கீழ்க்கண்ட விண்ணப்பதாரர்கள் வாக்-இன் (walk-in)  அதாவது முன்பதிவு (Appointment) இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
 
* வயது முதியோர் (65 வயதுக்கு மேல்) மாற்று திறனாளிகள், PCC விண்ணப்பதாரர்கள்.
இவர்கள் பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமத்தில் விண்ணப்பிக்கலாம்.
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் -  பாஸ்போர்ட் சேவா மையம் அமைந்தகரையில் விண்ணப்பிக்கலாம்..
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், PCC விண்ணப்பதாரர்கள் - பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரத்தில் விண்ணப்பிகலாம். 

12. தற்போது நான் குவைத்தில் வசிக்கிறேன். என் பாஸ்போர்ட்டை வெளிநாட்டில் ரெனீவல் செய்தால் என்ன ஆகும்?

வெளிநாட்டிலும் நமது பாஸ்போர்ட்டை, அந்தந்த நாட்டில் உள்ள  இந்திய தூதரகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம். 

13. என் பாஸ்போர்ட் கடந்த மார்ச் 2015 ல் காலாவதி ஆகிவிட்டது. தற்போது எப்படி என் பாஸ்போர்ட்டை ரெனீவல் செய்வது. அதே நேரத்தில் பாஸ்போர்டில் எப்படி என் பெயரை மாற்றுவது எப்படி?

தற்போது  பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ரெனீவல் செய்யப்படுவது இல்லை. ஒரு முறை பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட் பெற வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள நீங்கள் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink  இணையதளத்திற்கு சென்று reissue காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.
 
14. பாஸ்போர்ட் வழங்கும் போது போலீஸ் சரிபார்த்தலின் போது கட்டாயம் லஞ்சம் தர வேண்டும் என்கிறார்களே? இதற்கு யாரிடம் புகார் அளிப்பது?

இது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் உங்களுடைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி முறையீடு செய்யலாம் அல்லது இதற்காக தமிழ்நாடு காவல் துறையினுடைய  சிறப்புப் பிரிவான THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION, NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028, Telephone : 91-44-2461 5929 / 2461 5949 / 2461 5989 / 2495 4142 / 94450 48999 / 94450 48990, Fax : 91-44-2461 6070, E-mail: dvac@nic.in ஐ தொடர்பு கொள்ளலாம்.

15. நான் சென்னையில் வசிக்கிறேன். ஆனால் கல்லூரி படிப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறேன். கடைசி ஆறு மாதம் கோவையில் தங்கி இருந்ததால் அங்கும் வெரிஃபிகேஷன் வேண்டும் என்கிறார்கள். இது அவசியமா?

பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுடைய போலீஸ் வெரிஃபிகேஷன் விண்ணப்ப தேதியிலிருந்து கடந்த ஒரு வருடத்தில் அவர் எந்த எந்த முகவரிகளில் தங்கி இருந்தாரோ அங்கு எல்லாம் வெரிஃபிகேஷன் செய்த பின்பே  பாஸ்போர்ட் வழங்கப்படும். 

16. பாஸ்போர்ட்டில் பெயர் தவறுதலாக இடம்பெற்றால் எங்கு சென்று திருத்தம் செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் சரியான ஆவணங்களை (பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை) கொடுத்து பாஸ்போர்ட்டை re issue செய்து கொள்ளலாம். சிறிய பெயர் மாற்றம் (உச்சரிப்பாலான எழுத்து பிழைகள்) என்றால் ரூ. 500 அபராதத் தொகை வசூலிக்கப்படும். இதே பெரிய பெயர் மாற்றங்கள் என்றால் (Major Name Change) மாற்றப்பட்ட பெயரை தங்களுடைய  நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசூரமாகுமாறு தினசரி செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். நீங்கள் பெயர் மாற்றத்திற்கு கொடுத்த விளம்பரத்தின் செய்தித் தாளோடு மற்ற தேவையான ஆவணங்களுடன் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க வேண்டும்.
 
17. வெளிநாட்டில் இருக்கும் போது  பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.?

உடனடியாக நமது நாட்டின்  தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

18. தட்கல் முறையில்  எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும், எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்?

தட்கல் முறையில் விண்ணப்பித்த பாஸ்போர்ட் 3 - 5 நாட்களுக்குள் கிடைக்கும். இதற்கான கட்டணம் 3,500 ரூபாய்.

19. நான் ஒரு என்ஆர்ஐ தற்போது அமெரிக்காவின் குடிமகனும் கூட. நான் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாமா?

வேறு நாட்டின் குடியுரிமை பெற்றவுடன் இந்திய பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திலோ, இந்திய தூதரகத்திலோ  உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது.
 
20. என் அண்ணன் அபுதாபியில் வேலை செய்கிறார். அவரின் பாஸ்போர்ட் சமீபத்தில் காணாமல் போய்விட்டது. இப்போது என் அண்ணன் அங்கிருந்து எப்படி இந்தியா வருவது?

அபுதாபியில் உள்ள நமது நாட்டின் தூதரகத்தை ஆவணங்களுடன் சென்று புகார் கொடுக்கவும். அவர்கள் எல்லாவற்றையும் பரிசீலித்து எமர்ஜென்சி சர்டிஃபிகேட் (Emergency Certificate) ஒன்றை வழங்குவார்கள், அதன் மூலம் இந்தியாவிற்கு வரலாம்.

21. நான் புருனேவில் வேலை பார்க்கிறேன். என் குடும்பத்தையும் புருனேவுக்கே அழைத்து வந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறேன். எனக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு சென்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
* புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தின் அட்டெஸ்டேஷன் உடைய சுய உறுதி மொழி பத்திரம் (Sworn affidavit), 
*  தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல் (இதிலும் துதரகத்தின் அட்டெஸ்டேஷன் இருக்க வேண்டும்).'
* தங்களுடைய மனைவியின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும், அதில் கட்டாயமாக  (ஸ்பவுஸ் நேம் காலத்தில்)  உங்கள் பெயர் இருக்க வேண்டும், 
* குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், 5.தங்கள் மனைவியின் கையொப்பம் இட்ட Annexure H மற்றும் முகவரி சான்றிதழ் (Address Proof).

22. என் மகனின் பாஸ்போர்ட் 2014 டிசம்பரில் காலாவதி ஆகிவிட்டது. இதனை இப்போது புதுப்பிக்க முடியுமா? நான் மற்றும் என் கணவர் நேரடியாக வர வேண்டுமா?

பெற்றோரில் யாரேனும் ஒருவர் வந்தால் போதும். ஆனால் யார் வரவில்லையோ அவருடைய பாஸ்போர்ட்டை உடன் எடுத்து வர வேண்டும்.
 
23. திருமணத்துக்கு பிறகு பெண் எப்படி பாஸ்போர்ட்டில் பெயரை மாற்ற வேண்டும்.  விவரம் தேவை?

நவம்பர் 24, 2009க்கு பிறகு திருமணம் ஆகி இருந்தால் திருமண சான்றிதழுடன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமண சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃப்ஃபிடவிட் (Joint Notary Affidavit) கொண்டு வர வேண்டும். சர் நேம் காலத்தில் பெயர் மாற்றுவதற்கு Annexure D அஃப்ஃபிடவிட் அவசியம். 

Note: பாஸ்போர்ட்டில் Annexure A - M வரையிலான அனைத்து அனெக்சர்களும் கீழ்கண்ட லிங்கில் கிடைக்கும் -  http://passportindia.gov.in/AppOnlineProject/online/annexureAffidavit

எல்லா பாஸ்போர்ட்டிற்கும் என்ன என்ன  டாக்குமென்டுகள் தேவை என்பதை இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள லிங்கை சொடுக்குங்கள்  - http://passportindia.gov.in/AppOnlineProject/docAdvisor/attachmentAdvisorInp
 
 நன்றி :
 
 

No comments:

Post a Comment