எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை.
நான் கிராமத்தில் பிறந்தவனுமல்ல, வளர்ந்தவனுமல்ல. ஆனால், தெரியாதவனல்ல. கிராமத்து வாசனைக்காக மிக ஏங்கியவன், இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.
முன்பெல்லாம், கிராமத்தில் ஒருவர் வீட்டில் ஏதேனும் நற்காரியங்கள் எனில் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டிலிருந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆளுக்கொருவராகப் பிரித்துக்கொண்டு செயல்பட்டனர். தம் வீட்டு நிகழ்ச்சியாகவேக் கருதி முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக நடத்தினர்.
தற்போதோ, ஒப்பந்தகாரரிடம் (Contractor) விட்டுவிட்டு தாம் வெறும் அலங்காரபொம்மையாக நிற்கின்றனர். அட, வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தகாரரிடம்தான் ஒப்படைத்துவிட்டார்களே, வருகின்ற விருந்தினரையாவது வரவேற்று உபசரிக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. தம் பகட்டையும், ஆடம்பரத்தையும் முன்னிருத்திக் காட்டுவதில்தான் குறியாக இருக்கின்றனர். மனிதருக்கு மதிப்பில்லை ஆனால் அவரிடமிருக்கும் பொருள் அளவு கருதி பல்லிளிப்பது சர்வ சாதாரணம்.
முன்பெல்லாம், பண்டிகைகள் வருகிறது என்றால் 20-30 நாட்களுக்கு முன்பே அதனை வரவேற்கத் தயாராகிவிடுவோம். புதிய உடைகள் எடுத்துத் தைக்கக் கொடுப்பது (ஆயத்த ஆடைகள் அப்பொழுது அவ்வளவாகப் புழக்கம் இல்லை), பலகாரங்கள் சுட தானியங்களைக் காயவைத்து அரைப்பது, 3 நாட்களுக்கு முன்பே அதனைத் தயாரிக்க ஆரம்பிப்பது, தீபாவளியென்றால் வெடிகள் வாங்கி வெடிப்பது, பொங்கல் என்றால் பல நாட்களாகக் கரும்பு கடித்துச் சுவைப்பது என்று எத்தனை ஆரவாரமாக இருந்தோம்.
தற்போது, இன்று அந்த ஆர்வமெல்லாம் முற்றிலும் வடிந்துவிட்டது போல் தோன்றுகிறதே... ஏன்? விலைவாசி உயர்வா, வருமானக்குறைவா, பொறுப்புக்களின் அழுத்தமா, வயது முதிர்ந்தவுடன் பார்வைகள் மாறிவிட்டனவா, அர்த்தமில்லாச் சடங்குகள் என்ற உதாசீனமா? எது?
எங்கள் ஊர் உணவிற்கும் பெயர் எடுத்த ஊர். (காரைக்குடி - செட்டிநாடு) பெயரைச்சொன்னாலே வாயில் நீர் சுரக்கும் அளவிற்குப் பற்பல பதார்த்தங்கள். அவைகளைத் தயாரிக்கும் அந்தப் பக்குவங்கள் தாய்வழி மரபில் பல தலைமுறைகள் தாண்டி வந்தவைகள். இது போன்று எல்லா இடத்திற்கும் தனித்துவ உணவு வகைகளும் சிறப்பும் உண்டு.
இன்று நம் குடும்பங்களில் சமையற்பக்குவங்கள் எந்தளவிற்கு உள்ளன ? (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) எது வேண்டுமென்றாலும் உணவகங்களில்தான் கிடைக்குமே என்ற எண்ணம், அதுவும் தற்போது துரித உணவகங்கள் வேறு. ஆரோக்கியமான தயாரிப்பாக வீட்டில் தாய் அல்லது மனைவியின் கைப்பக்குவத்தோடு அன்பும் சேர்ந்து சுவையோடு கிடைக்கும் அந்த உணவு எங்கே இன்று ? வியாபாரிகளின் கைகளுக்கு எப்படி, எப்பொழுது போனது ?
எத்தனை உறவுகளோடு கூடி வாழ்ந்தோம் அன்று ? முன்தோன்றிய மூத்தகுடி என்பதால் நம்மில்தான் எத்தனை உறவு முறைகள், அத்தனைக்கும் பெயர்களிட்டு எத்தனை நெருக்கமாக வாழ்ந்துவந்தோம். தவறுசெய்யும்பொழுதோ, நெறிமுறைகள் வழுவும்போதோ இடித்துரைக்க அனுபவமுள்ள மூத்தோர் நம்மிடை இருந்தனர். கடின காரியமாற்ற இளைஞர் நம்மோடிருந்தனர். நம் கவலை மறக்க மழலையர் எத்தனை இருந்தனர்....?
இன்று, நீயோர் தீவு, நானோர் தீவு என்று ஒவ்வொருவரும் ஒரு திசையில், ஒரு சிறையில், தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, தான், தனது என்று ஒருசுயநலமிக்க குறுகிய மனப்பான்மையில் நாம். முதியோர் இல்லங்களில் பெற்றோர், விடுதிகளில் குழந்தைகள், வெளிஉலகில் பணத்தைத் தேடி நாம். முதியோர்களை மதிக்காமலும், இளையோர்களை அடக்கியாளவும் விழையும் நாம்.
உறவுகள் எங்கே, உறவு முறைகளும் எங்கே ?
சிறுவயதில் நான் விளையாடிய விளையாட்டுக்கள், மரமேறுதல், நீர் பந்து, எறி பந்து, ஏழுகல், ஓடிப்பிடித்தல், கண்ணாம்பூச்சி, கபடி என்று பல உடற்பயிற்சி சார்ந்தவைகள், குழுசார்ந்தவைகள். எங்குவேண்டுமானாலும் விளையாடலாம், அவ்வளவு இடங்கள்.
இன்று அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் அவ்விளையாட்டுக்கள் எத்துணை தூரம் சாத்தியம்? கணிப்பொறியிலும், விளையாட்டுத் தளத்திலும் (PlayStation) தன்னந்தனியாக விளையாடும் அவலத்தினை என்னவென்பது?
அன்று, பண்பை வளர்க்க நன்னெறிக் கல்வி, உலகை அறிய உலகக்கல்வி, வாழ்க்கைக்கல்வி, விளையாட்டுக்கல்வி என்று மாணாக்கர்களை மேம்படுத்துவதே குறிக்கோள்.
இன்று, பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி. படிப்பவர்க்கும் சரி கல்விக்கூடம் நடத்துபவர்க்கும் சரி பாதை பணத்தை நோக்கியே. பணம் வெறும் அடையாளமாகத்தான் உருவாக்கப்பட்டது, ஆனால் அதுவே இன்று உண்மை என்று கருதும் நிலை. உற்பத்தி இல்லாமல் எல்லோரும் வெறும் பணத்தை மட்டுமே கொண்டிருந்தால் என்னாவது?
அன்று எல்லா செயல்களையும் ஆற அமர திறம்பட செய்ய நேரம் இருந்தது. இன்றோ நேரமின்மையால் தவிக்கிறோம். ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் காலப்பொழுதில் ஏதும் மாற்றமில்லை. நம் பொழுதுகளைக் கணிக்க நாம் உருவாக்கிய நேரத்தின் பின் இன்று நாமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அறிவியல் வளர்ச்சியிலும், நாகரீக வளர்ச்ச்சியிலும் முன்னேறிவிட்டதாகக் கூறினாலும்.....,
எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிகிறதா ?

No comments:
Post a Comment