Thursday, August 13, 2015

கம்பனும் மதுவிலக்கும்


ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மது விலக்குக்காக 1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.
1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன. 

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவும், கோயிற்பசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயிற் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும், நம் நாட்டின் மதுவிலக்குக் கொள்கை அமைந்துவிட்டது. 

கம்பன் கண்ட கோசல நாடு, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை கூட, இந்தக் குழப்பத்துக்கு விதிவிலக்குகளாக அமையவில்லை போலும். எனவே, கம்பன் பல இடங்களில் கோசல நாட்டு மக்கள், கிஷ்கிந்தை மற்றும் இலங்கை மக்கள் கொண்டிருந்த குடிப் பழக்கத்தை ஆங்காங்கே காட்டிவிட்டு, அதேசமயம், பல இடங்களில் இப்பழக்கத்தைக் கண்டிக்கவும் செய்கிறான். 

யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலத்தில், இந்திரஜித்தனின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் கீழே விழுந்து கிடக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட ராவணன், ஒரு வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இந்தக் கொண்டாட்டங்களைக் களியாட்டுப் படலத்தில், கம்பன் கற்பனை வளத்தோடு விவரிக்கிறான். அந்தக் கொண்டாட்டத்தில், அரம்பையர்கள், அரக்கியர்கள், அசுரப் பெண்கள், நாக கன்னியர்கள் ஆகியோரை ராவணன் ஆடவைக்கிறான். அப்போது, கள்ளுண்டு ஆடியவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதைக் கம்பன் சொல்கிறான் : 

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 
 
அதாவது, நல்ல கல்விச் செல்வத்தால் பெரியோர் களது உபதேச மொழிகளை அறிந்து அவற்றால் வரும் பயனைத் துய்க்க வேண்டிய தருணத்தில், ஒரு மூடன் மனதில் ஒரு வஞ்சகன் வைத்த கற்பனை எப்படிப் பரவி நிற்குமோ அப்படிக் கள்ளின் வேகம், மகளிர் கூட்டத்தில் பரவியது என்பது இப்பாடலின் பொருள். கல்வியால் பெறும் தெளிவைக் கள்ளினால் வரும் மயக்கம் அழித்துவிடும் என்னும் உறுதியை இப்பாடலில் கம்பன் காட்டுகிறான்.

 இதில் பின்னால் வரும் இன்னொரு பாடலில் கள்ளுண்டு ஆடிய காரணத்தால் தாளமும், காலமும் தவறி ஆடிய பெண்களைக் கம்பன்,
‘பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர்’
என்று விவரித்தான். கள்ளுண்ணுதல் பெரும் பாவம் என்னும் கருத்தையும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். 


யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலத்தில், தன்னை இகழ்ந்து பேசும் இந்திரஜித்தனுக்கு மறுமொழி உரைக்கும் வீடணன், தான் குற்றமற்றவன் என்பதற்கு அத்தாட்சியாக 

‘உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென், யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; 

என்று உரைக்கிறான். எனவே, மது அருந்துவது என்பது, பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பதையும் கம்பன் பதிவு செய்கிறான். 

‘ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள், மனைவி” என்னும் தெளிவின்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்! 
 
‘கள்ளுண்ணல் ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று. தாயையும் மனைவியையும் வேறுபடுத்தி அறியும் அறிவைக் கள் அழிக்கும். மற்ற எல்லா அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தாலும், கள் அருந்துபவனுக்குப் பிற அறங்களால் என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தவன் ஏற்கெனவே மாயையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது, அந்த மயக்கத்தின் மேல் இன்னொரு மயக்கத்தை ஊட்டுவது எவ்வளவு விந்தை’ என்று ஒரு மாயையின் தத்துவத்தை இப்பாடலில் சுக்ரீவன் பேசுகிறான். 

‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே? 
 
விஷம்கூட அருந்தியவரைக் கொல்லுமே தவிர, நரகத்தில் தள்ளி விடாது. ஆனால், மது அருந்துவதால் வஞ்சனை, திருட்டு, பொய், அறியாமை, தொன்று தொட்டு வந்த மரபுக்கு மாறான கொள்கை, அடைக் கலமாக வந்தவரைக் காப்பாற்றாத தன்மை, ஆணவம் ஆகியவை வந்து சேர்ந்து நரகத்தில் கொண்டு விட்டுவிடும் என்கிறான் சுக்ரீவன். 

இப்படி சுக்ரீவன் மூலமாக மது ஒழிப்புக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த கம்பன், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 47-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மது விலக்கு, நடைமுறையில் காற்றில் பறக்க விடப்பட்டதை நமக்கு நினைவுபடுத்திக் காட்டுகிறான். 

- உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் (வெளியீடு: வானதி பதிப்பகம்).

No comments:

Post a Comment