Tuesday, July 1, 2014

ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும்.

'ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும்' என்ற இந்தக் கட்டுரையை உயிர்மையின் ஏப்ரல் மாத இதழுக்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது 'மலேசிய விமானம் MH370' பறந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென மாயமாகிப் போன நிகழ்வு மர்மமாகவே இருந்த நேரம். ஆனால், கட்டுரையின் முடிவை நான் எழுதும் போது, மலேசியப் பிரதமர், 'விமானம் விபத்துக்குள்ளாகிக் கடலில் விழுந்துவிட்டது' என்று அறிக்கை விட்டிருந்தார். அதனால் நான் எழுதிய கட்டுரையை மேலும் வளர்க்காமல் அப்படியே உயிர்மைக்கு அனுப்பி வைத்தேன். அதுவும் வெளிவந்து இப்போது ஒரு மாதமுமாகிவிட்டது. மலேசியப் பிரதமர் அறிக்கை சமர்ப்பித்ததுடன் சரி. அதன் பின்னர் விமானத்துக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. என் கட்டுரையில் சொல்லப்பட்டவை இன்றும் அதே கேள்விக் குறிகளுடனே இருக்கின்றன.    



     கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, 'MH370' போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, 'இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகாவிட்டால், அதில் பயணம் செய்த பிரயாணிகள் இன்னும் உயிருடன் இருக்கச் சாத்தியம் உண்டே! அவர்கள் எந்த விதத்திலாவது உயிருடன் திரும்பி வந்துவிட வேண்டும்' என்று கடைசி வரை பிரார்த்தனை செய்யும் மனிதாபிமானம். இரண்டு, இந்த விமானம் மறைந்ததின் உள்ளே பொதிந்திருக்கும் மர்மம். மர்மம் என்றாலே அறிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் உண்டு. இந்த மர்மத்தினுள், 'மனிதனை மிஞ்சிய வேறு ஏதாவது அமானுஷ்ய சக்திகள் விமானம் மறைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமோ?' என்று எண்ணுமளவுக்கு அவர்களைத் தூண்டியது அந்த ஆவல்.

     இந்த விமானம் மறைந்ததிலிருந்து இன்றுவரை அந்த விமானத்துக்கு என்ன நடந்திருக்கலாம் என்று, பலரும் பலவிதமான கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை நீங்கள் படித்துச் சலித்தும் போயிருப்பீர்கள். ஆகையால், நாம் அந்த விசயங்கள் எதையுமே தொடாமல் தனித்துவமாகவே இக்கட்டுரையைக் கொண்டு செல்லலாம். இப்போது, இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, மலேசிய விமான விபத்துத் தொடர்பாக, உண்மையான முடிவுகள் வந்திருக்கலாம். அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது விபத்துத்தான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கலாம். இந்தக் கணத்தில், கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு இதில் சொல்லப்பட்டிருப்பவை நகைச்சுவையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், விமானம் சம்மந்தமாக சரியான தகவல்கள் எதுவும் கிடைக்காத சூழ்நிலையில், அதை மையமாக வைத்தே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அதற்கான சாத்திய, அசாத்தியங்களையும் ஆராய்கிறது. இனி நாம் கட்டுரைக்குள் நுழையலாம்.



     விமான விபத்திற்குச் சற்று முன்னே நடந்தவற்றைச் சிறு குறிப்புப் போல முதலில் நாம் பார்க்கலாம். மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரிலிருந்து, மலேசிய நாட்டுக்குச் சொந்தமான, 'போயிங் 777' ரக விமானமான 'MH370', சரியாக நள்ளிரவு 12:41 மணிக்கு, அதாவது மார்ச் மாதம் 8ம் தேதி, நள்ளிரவு 12:41க்கு, 12 விமானப் பணியாளர்கள் உட்பட, மொத்தமாக 239 பயணிகளுடன் பீக்கிங் நோக்கிப் புறப்படுகிறது. இவர்களில் பதின்நான்கு வகை இனத்தவர்கள் இருகிறார்கள். மொத்தமாகப் பயணம் செய்ய வேண்டிய தூரம் 2746 மைல்கள். நள்ளிரவானதால் பயணிகளில் பெரும்பாலானோர் விமானத்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே நித்திரை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். விமானம் பறக்கத் தொடங்கி முப்பத்தியெட்டாவது நிமிடத்தில் அதாவது அதிகாலை நேரம் 01:19 மணிக்கு விமானத்துக்கும், கட்டுப்பாட்டு நிலையத்துக்குமான தொடர்பு இல்லாமல் போனது. அந்த நேரத்தில் விமானம் மலேசியாவுக்கும் வியட்நாமுக்குமிடையிலான கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அந்த நிமிடத்திலிருந்து அனைத்துமே மாறிப் போனது. மலேசிய விமானம் MH370, தான் போகும் தடத்தின் திசையிலிருந்து திடீரெனத் திசைமாறித் திரும்பியதை ராடார் திரைகளில் அவதானித்தனர். பின்னர் அதுவும் திரையிலிருந்து மறைந்து போனது. அப்புறம் நடந்ததெல்லாமே அனுமானங்கள்தான். கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களையும் வைத்து ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்ட அனுமானங்கள். அவை ஒவ்வொன்றாக வெளிவந்தபடியே இன்றுவரை இருக்கின்றன.



      ஒரு விமானம் வானில் தடம்மாறி, இப்படியானதொரு ஆபத்து நிலைக்குள்ளாக வேண்டுமானால், அதற்கு மூன்றே மூன்று காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று விமானம் எந்திரக் கோளாறினால் வானிலோ, கடலிலோ விபத்துக்குள்ளாவது. இரண்டாவது, திடீரென ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் பயணம் செய்யும் திசையிலிருந்து விலகி, அவசரமாக எங்கு விமானத்தை இறக்க முடியுமோ அங்கு இறக்கிவிடுவது. மூன்றாவது, தீவிரவாதச் செயல்களின் மூலம் விமானம் கடத்தப்படுவது. இந்த மூன்று காரணங்களை முன்னிட்டும், விமானங்கள் செல்ல வேண்டிய வான்வழிப் பாதையிலிருந்து மாறிச் செல்லலாம். கட்டுப்பாட்டு நிலையத்துடன் உள்ள தொடர்புகளும் இல்லாமல் அறுந்து போகலாம். இதில் சொல்லப்பட்ட, இரண்டாவது காரணமான காலநிலை மாற்றங்களை எடுத்துக் கொண்டால், இன்றுள்ள நவீன அறிவியலில், சாட்லைட்களின் உதவியுடன் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறியக் கூடிய வசதிகள் வந்துவிட்டன. விமானங்களுக்கெனப் பிரத்தியேகமான பல வழிமுறைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் இன்றைய சூழ்நிலையில் இந்தக் காரணத்தை நாம் நீக்கிவிடலாம். அத்துடன் மலேசிய விமானத்தின் பறத்தலின் போது, அப்படியான காலநிலை மாற்றம் எதுவும் வரவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. ஆகையால் நம் கண்முன்னால் எஞ்சியிருக்கும் இரண்டு காரணங்களில், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது விமானம் விபத்திற்குள்ளாகியிருக்கலாம்.



     மலேசிய விமானம் எந்திரக் கோளாறுகள் காரணமாக, விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டால், அந்த விபத்து வானில் நடந்திருக்க வேண்டும் அல்லது கடலில் நடந்திருக்க வேண்டும். வானில் அப்படியொரு விமானம் வெடித்துச் சிதறியதற்கான அடையாளத்தை யாரும் காணவில்லை. அத்துடன் அப்படி நடப்பது அபூர்வத்திலும் அபூர்வம். எஞ்சின் ஒன்று தீப்பற்றி எரிந்திருந்தால் கூட, கடல் மட்டம் வரை விமானத்தை இறக்கிவிடலாம். அதனால், விபத்து கடலில் விமானம் விழுந்ததனால்தான் நடந்திருக்க வேண்டும். இங்கு விபத்து என்று நான் சொல்ல வருவது மொத்தப் பிரயாணிகளுக்குமான உயிராபத்துச் சூழ்நிலையின் இறுதிக் கட்டத்தை. எப்படிப் பார்த்தாலும் வியட்நாம், மலேசியாவுக்கிடையிலிருக்கும் கடலில்தான் அந்த மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வேண்டும். ஒரு விமானத்தை அவசர நிமித்தமாக கடலின் மேற்பரப்பில் 'இறக்கம்' (Landing) செய்தால் மட்டுமே அந்த விமானத்தின் பாகங்களுக்குப் பெரும்பான்மையான பாதிப்பில்லாமல், கடலின் நீர் மேற்பரப்பிலேயே விமானத்தை வைத்திருக்க முடியும். ஆபத்தான சமயங்களில் விமானிகள் இப்படிக் கடலில் விமானத்தை இறக்கிப் பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கின்றன. ஆனால், 'இறக்கம்' (Landing) என்னும் செயல் இல்லாமல், கடலில் விமானம் விழுமேயானால், அது பல பாகங்களாக உடைந்து சிதறும். விமானத்தில் இருந்த எரிபொருட்கள் எல்லாம் கடல் மேற்பரப்பில் சேரத் தொடங்கும். பயணிகளுக்கு இது மாபெரும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும். விமானத்தின் வால் பகுதி, இறகு, சுவர்ப்பகுதிகள் போன்ற பாகங்கள் மிதக்க, மற்றவை அனைத்தும் கடலின் ஆழத்தில் சங்கமமாகும். இதைக் கருத்தில் கொண்டு, மலேசிய விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் கடல் பிரதேசமெங்கும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், அப்படியொரு விமான விபத்து சம்பவித்ததற்கான அறிகுறியே இந்தச் சம்பவத்தில் எங்கும் காணப்படவில்லை. விமானத்தின் எந்தப் பாகம் கடலில் அமிழ்ந்தாலும், எரிபொருளான எண்ணெய் மட்டும் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மிதந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைக் கண்டுபிடிப்பதும் ஒரு அளவுக்குச் சுலபமானது. ஆனால், அப்படி எதுவும் மிதக்கவில்லை. இந்த சமயத்தில்தான் ஒரு முக்கியமான விசயம் தெரிய வந்தது. ஏதோ ஒரு காரணத்தினால், "மே டே… மே டே…" (May Day…. May Day…) என்னும் ஆபத்து நேரத்தில் உதவிக்கு அழைக்கும் அழைப்பு, விமானியினால் விடப்படவில்லை. ஏன் விமானி கட்டளைத் தளத்துடன் தொடர்பு கொண்டு அந்த அவசர அழைப்பைக் கொடுக்கவில்லை என்று ஆராய்ந்த போது கிடைத்த பதில்தான், 'இந்த விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, கடத்தப்பட்டிருக்கலாம்' என்னும் சந்தேகத்துக்கான திசைதிருப்பலுக்கு ஆரம்பப்புள்ளியானது. அது என்ன? என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், விமானங்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, ஏன் 'மே டே' (May Day) என்கிறார்கள் என்று பார்த்துவிடலாம்.



     விமானம் ஒன்று ஆபத்திலிருக்கும் போது, உதவி கேட்டு அழைப்பதற்கும், மே மாதத்திற்கும் அல்லது மே மாதத்தின் ஒரு தினத்துக்கும் என்ன சம்மந்தம்? அந்தச் சம்மந்தத்தை எங்கு தேடிப் பார்த்தாலும் நீங்கள் கண்டுபிடிக்கப் போவதில்லை. ஒரு சிலர். மே மாதத்தின் வெப்பமான காலநிலையை வைத்து ஆங்காங்கே ஏதோ தொடர்பற்ற காரணங்களைச் சொல்லியிருந்தாலும், உண்மையான காரணத்துக்கும் மே மாதத்திற்கு எந்தச் சம்மந்தமுமில்லை.'மே டே' (May Day) என்பதற்கு உலகளவில் உள்ள அர்த்தம், 'உலகத் தொழிலாளர்கள் தினம்' என்பதுதான். ஆனால் அதையே, 'மே டே', 'மே டே' என்று அவசரத்தில் அழைத்தால் அர்த்தமே மாறுபடுகிறது. 'அப்படியென்றால் உண்மையான அர்த்தம்தான் என்ன?' என்று கேட்கிறீர்களா?'. அது ரொம்பச் சாதாரண காரணம்தான். ஆனால் பெரிய விசயத்துக்குப் பாவிப்பதற்கு உரியதாக மாறிவிட்டது. விசயம் இதுதான். பிரெஞ்சு மொழியில் M'aidez என்னும் சொல்லுக்கு அர்த்தம் Help Me என்பதாகும். ஆனால் இந்த M'aidez என்ற சொல்லை பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கும் போது, 'மே டே' (மேய்டி) என்பது போல ஒலிக்கும். அதாவது ஹெல்ப் மீ.. ஹெல்ப் மீ.. என்றழைப்பதையே, மே டே.. மே டே.. என்று அழைப்பது என்றாகிவிட்டது. இதுவே, ஆபத்தான சமயங்களில் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தும் சொல்லாகவும் மாறியது. ஆனால், இந்த உதவிக்கான அவசர அழைப்பு எதுவும் மலேசிய விமான ஓட்டிகளால் விடப்படவில்லை. அது ஏன்?

     மலேசிய விமானமும் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றுதான் முதலில் அறிவித்தனர். ஆனால் ஏதோவொரு தவிர்க்கவியலாத கணத்தில், அது கடத்தப்பட்டிருக்கலாம் என்னும் கருத்துத் தீயாகப் பரவத் தொடங்கியது. அதன்பின், வரிசையாகக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படக் கூடிய காரணங்கள் அடுக்கப்பட்டன. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால், அதற்கான காரணங்களை வரிசையாக்கினார்களா? அல்லது விமானம் கடத்தப்பட்டிருக்கிறது என்று மக்களை நம்ப வைப்பதற்கு, காரணங்களைத் தேடித் தேடி வரிசையாக்கினார்களா? என்பது யாருக்கும் தெரியாது. மலேசிய விமானம் விபத்தில் சிக்கியிருந்தாலோ, கடத்தப்பட்டிருந்தாலோ, நிச்சயம் விமானி அவசர உதவிக்கான அழைப்பை விடுத்திருப்பார். ஆனால் கோலாலம்பூரின் ராடார் நிலையத்துடன், 'ஆல்ரைட் குட்நைட்' என்ற இறுதி வார்த்தைகளைச் சொல்லி சுமூகமாகவே விமானியின் தொடர்பு அதற்குப் பின்னர் இல்லாமல் போயிற்று. அதனால், விமானத்தில் இருந்த ரேடியோ தொடர்பு சாதனம், விமானிகளால் திட்டமிட்டே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை முதலில் முன்வைத்தனர். அத்துடன் விமானத்திலிருந்து ராடார்களுக்கு வரும் சமிக்ஜைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றனர். அந்தத் தொடர்புகள் இல்லாமல் போனது என்னவோ உண்மைதான். அப்படியென்றால், விமானிகள் ஏன் அவற்றை நிறுத்தினார்கள் என்ற கேள்வியில் ஆரம்பித்த சந்தேகம் படிப்படியாக வளர்க்கப்பட்டு, விமானிகள் இருவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், 'இது தீவிரவாதத்துடன் சம்மந்தப்பட்ட கடத்தல் சதியாகத்தான் இருக்கும்' என்பதில் கொண்டு வந்து நிறுத்தியது.



     முதல் விமானியாக 'சஹாரி அஹ்மட் ஷா' (Zaharie Ahmad Shah) வும், இரண்டாவது விமானியாக 'ஃபாரிக் அப்துல் ஹமிட்' (Fariq Abdul Hamid) உம் மலேசிய விமானத்தில் கடமையில் இருந்திருக்கின்றனர். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அஹ்மட் ஷா, மிகவும் அன்பானவராகவும், நல்ல நடத்தை கொண்டவராகவுமே பலராலும் அறியப்பட்டிருக்கிறார். பல வருடங்கள் விமான ஓட்டியாகப் பணிபுரிந்த அவர் எந்தத் தப்பான செயல்களும் செய்ததாக அறியப்படாதவர். பல இளம் விமானிகளுக்குப் பயிற்சி கொடுக்கும் திறமை வாய்ந்த விமானியாகவும் இருந்து வந்திருக்கிறார். ஆனால் இவரின் மேல்தான் முதல் பழியைச் சுமத்தினார்கள். அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் முன்வைத்தார்கள். மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 'அன்வர் இப்ரஹீம்' (Anwar Ibrahim) என்பவரை அஹ்மட் ஷா பலமாக ஆதரித்தவர். ஆனால் அந்த எதிர்க்கட்சித் தலைவர், ஓரினச் சேர்க்கையாளர் என்ற குற்றச்சாட்டில் விமானம் மறைவதற்கு முதல் நாள்தான் சிறைக்குச் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் உடனே தொடர்புபடுத்தி, இதனாலும் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை விதைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், அஹ்மட் ஷாவின் வீட்டிற்குச் சோதனையிடக் காவலர்கள் சென்ற போது, விமானம் மறைவதற்கு முதல் நாளே மனைவியும், பிள்ளைகளும் அவர்களின் சொந்த ஊருக்குச் சென்றிருந்திருக்கிறார்கள். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்ட விபரத்தைப் பார்த்த போது, சக விமானியான அப்துல் ஹமீட்தான் உரையாடலில் பங்குபற்றியிருந்தாரேயொழிய, அஹ்மட் ஷா பங்குபற்றியிருக்கவில்லை. இதுவும் அஹ்மட் ஷாவைச் சந்தேகப்படக் காரணமாகிப் போனது. இத்துடன் முடிந்தால் பரவாயில்லை. மலேசிய விமானநிலையத்தில் இருந்த, 'ACARS' (Aircraft Communication Addressing and Reporting System) என்று சொல்லப்படும் விமானத்துக்கும், தரைக்குமிடையிலான தகவல் பரிமாற்றக் கருவி, விமானம் மறைவதற்குச் சற்று முன்னர்தான் இனம்தெரியாத ஒருவரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் திட்டமிட்டுச் செய்த காரியமாகவே கருதப்பட்டது. எல்லாமே அதனதன் இடங்களில் மிகச்சரியாகப் பொருந்துவது போல ஆகிவிட்டது. ஆனால், விமானிகள் இருவரையும் சந்தேகப்பட்ட நிலையில், அந்த இரு விமானிகளுமே ஒன்றாகப் பறக்க விரும்பியிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும், விமானம் தீவிரவாத நடவடிக்கைகளுக்காகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை முழு நிச்சயமான முடிவாக எடுத்தது போல, அமெரிக்கா அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தது. இதில் மிகப்பெரிய ஆச்சரியமாக, 'இந்த விமானத்தைக் கடத்தியதே அதன் விமானிதான் என்று சொல்லி வைத்தார்கள். அதற்குக் கடந்த காலங்களில் விமானிகளே விமானத்தைக் கடத்திய சில சம்பவங்களையும் உதாரணமாகச் சாட்சிகளாக்கினர். இவையெல்லாம் சேர்ந்து, விமானம் கடத்தப்படுவிட்டது என்றே உலகம் முழுவதுமே நம்பியிருந்தது. ஆனால் இந்த இடைவெளியில் சீனா செய்த ஒரு காரியத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறந்துவிட்டிருந்தனர்.



     விமானம் கடத்தப்பட்ட ஐந்தாம் நாள் சாட்லைட் எடுத்த படமொன்றைச் சீனா வெளியிட்டது. 25 மீட்டர் அகலமும் 24 மீட்டர்கள் நீளமுமுள்ள ஒரு பொருள் கடலில் மிதப்பதை அப்படம் காட்டியது. அந்தப் பொருள் விமானத்தின் உடைந்த துண்டாக இருக்கலாம் என்று சீனா தெரிவித்தது. ஆனால் விமானம் கடத்தப்பட்டது என்பதை உறுதியாக நம்பிய நிலையில், யாரும் அந்தச் செய்தியை கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் அதில் சீனா சொன்ன ஒரு தகவல் மிகவும் விசித்திரமாக இருந்தது. விமானம் மறைந்த சில மணிநேரங்களில் சீனாவின் சாட்லைட் அந்தப் படத்தை எடுத்திருக்கிறது. ஆனால் சீனாவோ ஐந்து நாட்களின் பின்னர்தான் இந்தச் செய்தியை வெளியுலகிற்கு அறிவித்தது. ஐந்து நாட்களின் பின்னர் அந்த இடத்தில் அப்படியொரு உடைந்த துண்டைத் தேடினால் கிடைக்கவா போகிறது? அந்த விமானத்தில் சீனர்களே 160 பேர் இருந்த நிலையில், சீனா ஏன் அந்தப் படத்தை உடன் வெளியிடாமல் மறைத்தது?  என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. உடனடியாகத் தெரிவித்திருந்தால், அந்த இடத்தில் தேடியிருக்கலாம். ஆனால் சீனா அதைச் செய்யவில்லை. மலேசிய விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கைகளிலும் பல முரண்பாடுகள் காணப்பட்டன. 'இந்த விமானம் கடத்தப்பட்டுத்தான் இருக்கிறது' என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும் என்ற ஒருவகைத் திணிப்பு நிலைக்கு இவர்கள் கொண்டு சென்றார்கள். விமானம் கடத்தப்பட்டது என்பதை வேறு ஏதும் காரணங்களுக்காகத் திட்டமிட்டுத் திணிக்கிறார்களோ என்றே நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. "விபத்துக்குள்ளான விமானம் ஒன்றை ஏன் கடத்தப்பட்டது என்று அவர்கள் சொல்ல வேண்டும்?" என்ற நியாயமான  கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.




     ஒரு போயிங் 777 விமானம் 400 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான பெறுமதியைக் கொண்டது. அதில் பிரயாணம் செய்த 239 பயணிகளில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் ஐந்து லட்சம் டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக உறவினர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அப்படிப் பார்த்தால், 239 பயணிகளுக்கு மட்டும் 120 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகையாக வருகிறது. மொத்தமாகப் பார்த்தால் கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகையாகக் காப்புறுதி நிறுவனம் (Insurance Corporation) கொடுக்க வேண்டும். ஆனால், விமானம் விபத்துக்குள்ளாகிப் பயணிகள் அதனால் இறந்துவிட்டார்கள் என்றால் மட்டுமே இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவணம் வழங்கும். விமானம் கடத்தப்பட்டுவிட்டது அல்லது மாயமாகிவிட்டது என்று சொல்லும் போது, அதைச் சரியான வகையில் உறுதி செய்யும் வரையில், அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு வராது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டவர்கள் ஒருநாள் மீண்டும் உயிருடன் வந்தால் என்ன செய்வது என்ற வாதம் அங்கு முன் வைக்கப்படும். மலேசிய விமானம் கடத்தப்பட்டு, அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கவே தேவையின்றிக் கூடப் போகலாம். இதனால் இலாபம் அடைவது காப்புறுதி நிறுவனம் மட்டுமே. விமானங்களைக் காப்புறுதி செய்யும் நிறுவனங்கள், சாதாரணக் காப்புறுதி நிறுவனங்களைப் போன்றது அல்ல. இவை மகாப் பெரியவை. உலக மகாப் பணக்காரர்களின் கைகளிலேயே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன. அரசுகள் சாராமல், ஆனால் அரசுகளை ஆட்டிவைக்கக் கூடிய வலிமையுடன் அவை உலகெங்கும் கோலோச்சுபவை. இந்த நிறுவனங்கள், தங்களின் நலன் கருதி ஒரு விமான விபத்தைக் கடத்தல் நாடகமாக்க முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம்தான் இறுதியில் மிஞ்சுகிறது.

     ///இந்த இடத்தில் ஒரு சிறு குறிப்பு: இந்த இடம் வரை கட்டுரையை நான் எழுதிய போது (24.03.2014), விமானம் மறைந்திருக்கும் மர்மமான நிலைதான் இருந்தது. இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, விமானம் கடலில் விழுந்து நொருங்கியதை மலேசிய அரசு ஒத்துக் கொள்வதாக தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், எழுதிய கட்டுரையை அப்படியே தொடர்ந்து எழுதி உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அடுத்து வரும் வரிகளில் மட்டும் விமானம் விபத்தில் சிக்கியது போலவே வார்த்தைகள் அமையலாம். இறந்த அனைத்து பயணிகளுக்கும், விமானப் பணியாளர்களுக்கும், விமானிகளுக்கும் என் அஞ்சலிகள். இனி மீண்டும் கட்டுரைக்குச் செல்வோம். -ராஜ்சிவா-///

     உண்மையிலேயே மலேசிய விமானம் விழுந்து நொருங்கியதால் உடைந்த துண்டு ஒன்றைத்தான் சீனா கண்டிருக்கிறது. அது திட்டமிடப்பட்டோ, திட்டமிடப்படாமலோ மறைக்கப்பட்டிருக்கிறது அல்லது மறக்க வைக்க முயசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த அவுஸ்ரேலிய அரசு, இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தது. "எங்கள் சாட்லைட்டுகள் மூலமாக மலேசிய விமானம் சம்மந்தமான இரண்டு தடயங்களைக் கண்டிருக்கிறோம். அவை பற்றிய விபரங்களை இன்னும் இரண்டொரு நாட்களில் முழுமையாக வெளிவிடுகிறோம்" என்று பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் அவுஸ்ரேலியா தெரிவித்தது. அவுஸ்ரேலியாவின் இந்த அறிக்கையின் பின்னர், அதுவரை கூட்டுக்குள் ஒளித்திருந்த சீனா மீண்டும் வெளியே வந்து, தன் சாட்லைட் படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பிதது. அத்துடன் வேறொரு புறத்திலிருந்து பிரான்ஸ் நாடும் தன்னுடைய சாட்லைட்டுகளிலும் விமானத்தில் உடைந்த துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இவர்களெல்லாம் அவுஸ்ரேலியா பகிரங்கமாக அறிபிப்பதற்கு முன்னர் எங்கே ஒளித்திருந்தார்கள் என்றே தெரியவில்லை.

     எது எப்படியோ, ஒரு திறமை வாய்ந்த முதல்தர விமானியும், அவரது சக விமானியும் இஸ்லாமியர்கள் என்பதாலேயே மிகவும் மோசமான முறையில் உலகம் முழுவதாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு காப்பீட்டுத் தொகையைக் கொடுத்து ஈடு செய்துவிடலாம். இந்த விமானிகளை அவமானப்படுத்தியவர்கள், எதை, எப்படி, யாருக்குக் கொடுத்து ஈடு செய்யப் போகிறார்கள்?

Thanks to
-ராஜ்சிவா-


Comments:

அந்த மலேஷிய விமானம் விபத்திற்குள்ளாகவில்லை என நான் உறுதியாக இன்றைய தினம் (03-May-2014) வரை நம்பக்காரணம் இந்த The Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization கொடுத்த தகவல் தான். அதன்படி அன்றைய தினம் கடலிலோ, வானிலோ எந்த வெடிப்பும் நிகழவில்லை என்பது CTBTO வின் நிலைப்பாடு ஆகும். அப்படி வெடித்து அந்த விமானம் நீரிலோ, நிலத்திலோ மோதி இருந்தால் அவர்களின் அதி உன்னதமான உணரிகளால் உணரப்பட்டிருக்கும். அவர்களின் நெட்வொர்க் லேசுப்பட்டது இல்லை. அது உலகம் எங்கும் பரந்து விரிந்த உணரிகளால் ஆன நெட்வொர்க். அதன் தினசரி தகவல் சேகரிப்பு 10 GB க்கும் மேல் ஆகும்.

அந்த தகவலுக்கு ஆதரவாக இது வரை கடலை சலித்து பார்த்ததில் அந்த விமானத்தின் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை. கிடைத்த எதுவும் அந்த விமானத்தின் தொடர்பற்றவைகள் தான். ஆக இது வரை CTBTO சொன்னது தான் சரி என்ற நிலை தான் இருக்கிறது. தவிர அமெரிக்க, ஆஸ்திரேலிய ராணுவ ராடார்களின் லாக் இது வரை எவருக்கும் தரப்படவில்லை. இந்த இருவரும் சேர்ந்து தான் இந்தியப்பெருங்கடலில் நடக்கும் அனைத்து போக்குவரத்தினையும் கண்காணிக்கின்றார்கள். ஆயில் டேங்கரில் இருந்து ஆள்கடத்தும் கப்பல்களின் நகர்வு வரை அனைத்தும் அவர்களுக்கு அத்துப்படி.

இந்த விஷயத்தில் எல்லா ராணுவ ராடார்களின் தகவலும் மறைக்கப்படுகின்றன. அதில் மலேஷியாவின் ராணுவ ராடாரும் சேர்த்தி தான். அந்தமானில் உள்ள இந்தியாவின் ராடார் நிலை பற்றி எனக்கு தெரியும். அது பவர் சேவ் மோடில் அன்றைக்கு இருந்தது . ஏனெனில் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு. சுனாமி எச்சரிக்கைக்காக அவர்களை பல முறை அழைத்து பேச முயன்று எனக்கு பல முறை தாவூ தீர்ந்திருக்கிறது. அங்கிருந்து அழைப்பு வந்தாலும் அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் பெரிய கதை !.

மேலும் ஒரு விமானம் அனைத்து தகவல் தொடர்பையும் அறுத்துவிட்டு பறந்தாலும் Passive Radar ல் ஒரு புள்ளியாகவது தெரிந்து தொலைக்கும். இந்த போயிங் 777 ஒன்றும் ராடார்களின் கண்களில் இருந்து தப்பிக்கும் திறனுள்ள சிறப்பு மூலப்பொருட்களால் செய்யப்பட்டது இல்லை. சிறப்பு ராணுவ விமானங்கள் தான் அது போல் செய்யப்படும். அப்படி ஒரு அடையாளம் தெரியாத பொருள் ராடாரில் தெரிந்தால் உடனே அதை தொடர்பு கொள்ள முயன்று இருப்பார்கள். தவிர அதன் நகரும் வேகத்தினை வைத்து அது ஒரு விமானம் தான் என்பதையும் அறிந்திருப்பார்கள்.

ஏனெனில் ஒரு UFO ஆக இருந்திருந்தால் அதி வேகத்தில் சென்றிருக்கும். ஆனால் பயணிகள் விமானம் அப்படி செல்லாது. ஆகவே துணிச்சலாக ராணுவ இடைமறித்தல் விமானங்களை அனுப்பி அதை மறித்திருப்பார்கள். அதை மடக்கி தரை இறக்கம் செய்திருப்பார்கள். அது போல் செய்யப்பட்டதாக எந்த தகவலும் தரப்படவும் இல்லை.

இனிமேல் யாராவது அந்த விமானத்தின் உடைந்த பாகம் ஒன்றை காட்டினால் என்னவாகும் தெரியுமா ? இந்த CTBTO உடனே உலகில் அணுகுண்டு வெடிப்பினை கண்காணிக்கும தகுதி இல்லாத ஒன்றாக மாறிவிடும் அபாயம் அதில் உள்ளது.

http://www.timesofisrael.com/no-sign-of-mh370-explosion.../

No comments:

Post a Comment