Tuesday, July 1, 2014

விமானம் ஏமாற்று நாடகங்கள்




     அந்த விமானம் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு நிலையத்திடம் புறப்படுவதற்கான அனுமதியைக் கேட்டுவிட்டு, புறப்படுவதற்குத் தயாராக நின்றது. கட்டுப்பாட்டு நிலையத்தில் அனைத்து விதமான சோதனைகளும் சரிபார்க்கப்பட்ட பின்னர் புறப்படுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. அனுமதிக்கு நன்றி சொல்லிவிட்டு, விமானி விமானத்தை வான் நோக்கி மேலே கொண்டுவர, பிரயாணிகள் தங்கள் இருக்கைகளில் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். இரவு உணவுக்கான ஆயத்தங்கள் விமானத்தில் செய்யப்பட்டது. எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. விமானம் தனது பறப்பு நேரத்தில் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தைத் தொடும்போது, விமானி தான் பறந்து கொண்டிருந்த இடத்திற்கு பொறுப்பில் உள்ள ராடார் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு, 'வானம் நன்றாக இருப்பதாகவும், காலநிலை பறப்பதற்கு மிகவும் சாத்தியமான சூழலில் இருப்பதாகவும்' சொல்லிவிட்டுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இரவு வணக்கத்துடன் நன்றியும் சொன்னார். அதற்குப் பதிலாகத் தங்கள் இரவு வணக்கத்தைச் சொல்லக் கட்டுப்பாட்டு நிலையத்தினர் முயல்கையில், விமானத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ராடார் திரையிலிருந்தும் திடீரென மறைந்து போனது விமானம். எப்படி அழைத்தும், எவ்வளவு அழைத்தும் பதிலில்லை. ராடார் திரைகளில் எங்கு தேடியும் விமானத்தைக் காணவே இல்லை. அப்போதுதான் 'விமானம் கடலில் விழுந்திருக்கலாமோ' என்ற அச்சம் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுக்குத் தோன்றியது. பரபரப்புடன் நாடெங்கும் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் அந்த இரவிலேயே செய்திகள் பறந்தன. விமானத்தில் பயணம் செய்த அத்தனை பயணிகளும், விமானப் பணியாளர்கள் உட்பட கடலில் உயிருடன் சமாதியாகினர்.

     இதை வாசிக்கும் போது, மலேசியாவில் கடந்த மாதம் காணாமல் போன விமானமான, 'மலேசியன் ஏர்லைன்ஸ் MH370' விமானம் பற்றித்தான் நான் சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அப்படி நினைத்திருந்தாலும், அதில் உங்கள் தப்பு எதுவுமே கிடையாது. மலேசியன் MH370 விமானத்துக்கு நடந்தது போலவே, அச்சு அசலாக நடந்த, வரலாற்றில் கறைபடிந்த இன்னுமொரு விமான விபத்துச் சம்பவம் பற்றிய கதைதான் இது. மலேசியன் விமானம் காணமல் போனது பற்றி நான் ஏற்கனவே கடந்த மாத உயிர்மையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை நான் எழுதிய அன்று 'விமானம் கடலில் விழுந்துவிட்டது உண்மைதான்' என்று திடீரென மலேசிய அரசு அறிக்கையொன்றை வெளிவிட்டிருந்தது. 'அதுவரை மர்மமாக இருந்த ஒரு விமான விபத்துப் பற்றிய புதிருக்கு, இறுதியாக விடை கிடைத்ததே!' என்று சோகமான நிம்மதியொன்று அன்று எனக்குத் தோன்றியது. ஆனால் அது மக்களைத் திசை திருப்பும் செய்தியோ! என்று, இன்று சந்தேகப்படும்படியான நிகழ்வுகளே படிப்படியாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்றுவரை அந்த மலேசிய விமான விபத்துப் பற்றித் தெளிவான முடிவு யாருக்கும் தெரியவில்லை. தெரியவில்லையென்று சொன்னால், அது மக்களுக்கு மட்டும்தான் தெரியவில்லை. ஆனால் மேல்மட்டத்திலிருக்கும் பலருக்கு அதன் உண்மை தெரிந்துதான் இருக்கிறது. மலேசியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் ஆட்சியதிகாரத்திலிருக்கும் மேல்மட்டத்தினருக்கு அந்த விமானத்திற்கு என்ன நடந்திருக்கிறது என்று நன்றாகவே தெரிந்திருக்கும். மக்கள் மட்டுமே இங்கு முட்டாளாக்கப்பட்டிருக்கின்றனர். மலேசிய அரசு திடீரென, 'விபத்து நடந்த பயணிகளின் உறவினர்களுக்கு முன்னோட்டமாக ஐந்தாயிரம் டாலர்கள் கொடுக்கின்றோம்' என்று அறிவித்த போதே பலருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, 'விமானம் ஆழ்கடலில் விழுந்துவிட்டது', 'அங்கே விமானத்தின் பாகங்கள் போல சில மிதக்கின்றன', 'இங்கே விமானத்தின் பாகங்கள் போல சில மிதக்கின்றன', அது இதுவென்று பல கதைகள் சொல்லப்பட்டன. இதில் பல நாடுகள் சேர்ந்தே நாடகம் ஒன்றை நடித்தும் காட்டின. சம்பவம் நடந்து இப்போது மூன்று மாதங்களும் முடியும் நிலைக்கு வந்துவிட்டது. படிப்படியாக மக்கள் அனைவரும் அந்த விபத்தைப் பற்றி மறந்துவிட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கவும் சென்றுவிட்டனர். 'என்ன நடந்தது?' என்ற உண்மை மட்டும் ஆகாயத்தில் நின்று ஊசலாடுகிறது. அது யாருக்கும் சொல்லப்படவில்லை. சொல்லப்படவும் மாட்டாது. மக்கள் சுலபமாக இந்தச் சம்பவத்தை மறந்துவிடலாம். ஆனால், மகனை, மகளை, தாயை, தகப்பனை, சகோதரனை, சகோதரியை இழந்த உறவினர்களும், குடும்பத்தினரும் இதைச் சுலபத்தில் மறந்துவிடுவார்களா? அவர்களின் வலி ஆண்டாண்டுக்கும் அவர்களை வதைத்துக் கொண்டல்லவா இருக்கும். இப்படிபட்ட விபத்துகள் நடந்து, அதன் காரணங்கள், உலக முதலைகளால் விழுங்கப்பட்டு, மறைக்கப்படுவது, இது முதல் தடவையில்லை. இப்படிப் பல விபத்துக்களும், சம்பவங்களும் வரலாற்றில் நிறையவே நடந்திருக்கின்றன. மறைக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விமான விபத்தைப் பற்றித்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேன்.



     இது நடந்தது 1980ம் ஆண்டு. 'பனிப்போர்' (Cold War) என்னும் யுத்தமில்லா யுத்தம் உச்சநிலையை அடைந்திருந்த காலம் அது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா தன்பக்கம் பல நாடுகளைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த காலம். 'கடாபி' என்றும் இளம் இராணுவத் தளபதி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாக, லிபியா நாட்டை ஆண்டு வந்த காலம். 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அன்று, இத்தாலி நாட்டின் 'பொலோனியா' (Bologna) நகரத்தில் உள்ள மார்கோனி விமான நிலையத்திலிருந்து (Guglielmo Marconi Airport), இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான சிசிலித் (Sicily) தீவிலிருக்கும் பலேர்மோ (Palermo) நகர சர்வதேச விமான நிலையத்துக்குப் (Palermo international Airport) புறப்படக் காத்திருந்த விமானம்தான் 'இடாவியா 870' (Itavia Flight 870). எழுபத்தியேழு பயணிகளை ஏற்றிக் கொண்டு, இரவு எட்டு மணியளவில் புறப்படவிருந்தது விமானம். சரியாக 20:08 மணிக்கு நான்கு விமானச் சிப்பந்திகளுடன், மொத்தமாக எண்பத்தியொரு பேருடன் விமானம் புறப்பட்டது. காலநிலை மிகவும் சுமூகமாக இருக்க, விமானத்தின் விமானி மகிழ்ச்சியுடன் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு நன்றி சொன்னார். பயணத்தின் மொத்த நேரம் ஒரு மணி 53 நிமிடங்கள். ஆனால், விமானம் புறப்பட்டுக் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தின் பின்னர், அதாவது 21:06 மணிக்கு விமானம் விபத்துகுள்ளாகியது.  விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சில நொடிகளுக்கு முன்னர், ரோம் நகரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் விமானி பேசியிருந்தார். அவர் பேசியதற்குப் பதில் சொல்ல விமானத்தை அழைத்த போது எந்தப் பதிலும் விமானத்திலிருந்து வரவில்லை. பலமுறைகள் அழைத்தும் பதிலில்லை. அப்போதுதான் விபரீதம் உறைக்க, அனைத்து இடங்களுக்கும் தகவல்களைப் பறக்க விட்டனர். இடாவியா விமானம் கடைசியாகப் பறந்து கொண்டிருந்த 'டிர்ஹேனியன் கடலுக்கு' (Tyrrhenian Sea) இத்தாலியின் போர் விமானங்கள் விரைந்தன. விபத்து நடந்த இடத்தை விமானங்கள் பார்வையிட்ட போது, அங்கு இடாவியா விமானத்தின் சிதறிய பாகங்களும், உடல்களும் மிதந்து கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. மலேசிய விமான விபத்துக்கும், இந்த விபத்துக்கும் இந்தச் சம்பவத்தில்தான் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, விமானம் விபத்துக்குள்ளாகியது என்பது உடனே தெரிந்து போய், விமானமும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பிரச்சனைகள் எல்லாம் அதற்கு அப்புறம்தான் ஆரம்பமாகின.



     விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூடத் தப்பவில்லை. எண்பத்தியொரு பேர்களும் இறந்திருந்தனர். முப்பத்தியொன்பது உடல்களை அடுத்தடுத்த நாட்களில் கண்டெடுத்தனர். நாற்பத்தியிரண்டு பேர்களது உடல்கள் கிடைக்கவில்லை. அவற்றிற்கு என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை. கடலில் புதைந்தனவா? விபத்தில் சிதைந்தனவா? எதுவும் தெரியவில்லை. சிசிலிக்கு அருகில் இருக்கும் மிகச் சிறிய தீவான 'உஸ்டிகா' (Ustica) அருகேதான் விபத்து நடந்திருந்தது. விபத்து நடந்த மறுதினம் இத்தாலி நாடே பரபரப்பானது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் விபத்தின் கோரம் பற்றியே அலறின. 'விபத்து எப்படி நடந்தது?' என்ற பெரும் கேள்வியே அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொண்டது. வழமை போல, விபத்திற்கான காரணங்கள் ஒவ்வொன்றாய் வெளிவரத் தொடங்கின. முதலில், விமானியின் தவறான நடைமுறையாலேயே விபத்து நடந்தது என்றார்கள். ஆனால், கடைசி நொடிவரை விமானியின் அனுகூலமான உரையாடல் அதை உடைத்தெறிந்தது. அந்தக் காரணத்தை யாரும் நம்பவில்லை. தொடர்ந்து காலநிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாமோ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் ராடார் கட்டுப்பாட்டு நிலையங்களுடனான விமானியின் பேச்சுகள் அனைத்தும் வான்நிலை மிகவும் நன்றாக இருந்தது என்றே உறுதிப்படுத்தியது. மேலும் அப்படியான காலநிலையை எந்த வான்நிலை ஆராய்ச்சி நிலையமும் அவதானித்திருக்கவில்லை. இடாவியா விமான விபத்து, படிப்படியாக 'மர்மமான விபத்து' என்னும் நிலையை எடுக்க ஆரம்பித்தது. 'விபத்து ஏன் நடந்தது?' என்ற கேள்வி மக்களாலும், தொலைத் தொடர்பு சாதனங்களாலும் சத்தமாகவே இத்தாலியெங்கும் கேட்கத் தொடங்கியது. அடுத்து என்ன காரணம் சொல்லலாம் என்று காத்திருந்த போது, ஒரு இரகசியத் தொலைபேசி அழைப்பு அனைத்துக் காரணங்களையும் உடைத்து எறிந்தது. தொலைபேசியில் அழைக்கப்பட்டவர் 'அந்த்ரியா புர்க்கடோரி' (Andrea Purgatori) என்னும் மிகப் பிரபலமான பத்திரிகையாளர். அழைத்தது ஒரு மர்ம நபர். மர்ம நபரின் குரல் சொன்ன செய்தி இதுதான், "இரண்டு போர் விமானங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு விமானத்திலிருந்து சுடப்பட்ட ஏவுகணை அவ்வழியே வந்த இடாவியா 870 விமானத்தில் பாய்ந்தது". தொடர்ந்து, "இதன் மேலதிக விபரங்களை நாளை பத்திரிகையின் காரியாலத்திற்கே வந்து சொல்கிறேன்" என்றும் சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பை அறுத்துக் கொண்டது.



     அடுத்த நாள் காலையில் அந்த்ரியா புர்க்கடோரியை அந்த நபர் சந்தித்தார். விமானம் பறந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகே இருந்த பல ராடார் நிலையங்களில், ஒரு நிலையத்தின் அதிகாரிகளில் ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும். 'இத்தாலி அல்லாத வேறு ஒரு நாட்டின் போர்விமானம் ஒன்றிலிருந்து சுடப்பட்ட ஏவுகணை தாக்கியதாலேயே இடாவியா விமானம் சிதறி உடைந்து கடலில் விழுந்தது' என்ற இரகசியத்தைப் புர்க்கடோரிக்கு விளக்கமாகச் சொன்னார் அவர். அன்றே தனது பத்திரிகையில் 'உஸ்டிகா படுகொலை' (Ustica Massacre) என்ற பெயரில், விமானம் ஏவுகணையாலேயே சுட்டு விழுத்தப்பட்டது என்று தெளிவாக எழுதி வெளியிட்டார் புர்க்கடோரி. அதன் பின்னர், எத்தனையோ விசாரணைகளையும், மிரட்டல்களையும் சந்தித்த புர்க்கடோரி, தனக்குத் தகவல் தந்த நபர் யாரென்பதை மட்டும் வெளியிட மறுத்துவிட்டார். உயர் நீதிமன்ற விசாரணயில், 'தனது பாதுகாப்புக் கருதியும், அந்த நபரின் பாதுகாப்புக் கருதியும், அந்த நபர் யார் என்று வெளியிட விரும்பவில்லை' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் புர்க்கடோரி. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இப்போது விசயம் வேறு வடிவம் எடுக்கும் நிலைக்கு வந்தது? இத்தாலியன் விமானத்தையே சுட்டு விழுத்தும் துணிச்சல் எந்த நாட்டுக்கு வந்தது? யாருடன் யார் மோதும் போது, அந்த ஏவுகணை ஏவப்பட்டது? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தன. இப்போது, ஏவுகணைத் தாக்குதல் என்பதிலிருந்து இந்தப் பிரச்சனை தடம் மாற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாருக்கோ ஏற்பட்டிருக்க வேண்டும். விமான விபத்து நடந்த ஒரு மாதத்தில், அதே பொலோனியா நகரில் உள்ள ரயில் நிலையமொன்றில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல் இது என்ற செய்தி தீயாகப் பரவியது. பரவியதா? பரப்பப்பட்டதா? என்று தெரியவில்லை. அந்தக் குண்டு வெடிப்புடன் விமான விபத்தின் கதையும் சேர்ந்தே மாறிப் போனது. ரயில் நிலையத்தில் குண்டு வைத்தது ஒரு தீவிரவாத அமைப்புத்தான் என்றும், அந்த அமைப்பே விமானத்திற்குக்கும் குண்டு வைத்தது என்றும், குண்டு வெடித்ததாலேயே விமானம் வெடித்துச் சிதறியது என்றும் கதை புனையப்பட்டது. அந்தக் கதையை நம்ப வைக்கப் பலவிதமாக முயற்சிகளும் நடந்தது. விமான விபத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த சிறப்பு அதிகாரியொருவர் ஒருபடி மேலே போய், 'விமானத்தின் வலது பக்க டாய்லெட்டில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாலேயே விமானம் சிதறிக் கடலில் விழுந்தது' என்ற அறிக்கையையும் சமர்ப்பித்தார். ஆனால் இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றும் இருக்கிறது. இத்தாலியின் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், நீதிமன்றமும் இந்தக் கதைகள் எதையும் ஏற்காத நிலையிலேயே இருந்தன. அதற்குக் காரணம் அந்த நேரத்தில் இத்தாலியைச் சூழ நடைபெற்று வந்த உலக அரசியல்தான். அதுவே விமான விபத்துக்கு உண்மையான காரணம் இதுதான் என்று முடிவுக்கு, உறுதியுடன் அவர்கள் வரக் காரணமாகவும் இருந்தது.

     அமெரிக்க வல்லரசைக் கொஞ்சம் கூட மதிக்காத ஒரு நாடாக லிபியா உருவாகியிருந்தது. அதன் அதிபராக கேர்னல் கடாபி இருந்தார். பின்னைய காலங்களில் ஒரு சர்வாதிகாரியாகவும், கொடுங்கோலனாகவும் அறியப்பட்ட கடாபி, 1980 களில் அமெரிக்காவை நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்கும் நாயகனாகப் பார்க்கப்பட்டார். அமெரிக்காவின் அழுத்தத்தினால், இத்தாலி சார்ந்த பல இடங்களில் நேட்டோ நாடுகளின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த பல தீவுகளில் போருக்கான விமானத் தளங்களும், ராடார்க் கண்காணிப்புத் தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளின் போர் விமானங்கள் நேட்டோ அமைப்பு ரீதியாக, தொடர்ச்சியான கண்காணிப்புகளில் ஈடுபட்டிருந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்த அந்தக் காலங்களில், ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் சிநேக நாடுகளுடன் கடாபி தொடர்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தார். இத்தாலியின் உளவுப் படைகள் கூடக் கடாபியுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருந்தது. விமான விபத்து நடந்த அன்று, போலந்து நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் ஒன்று செய்வதற்காக, விமானமொன்றில் கடாபி இரகசியமாகப் பயணம் செய்ய இருந்தார். இந்த விசயம் நேட்டோ அமைப்புக்குத் தெரிய வந்திருந்தது. கடாபி பயணம் செய்ய இருந்த விமானத்தைச் சுட்டு விழுத்துவது என்ற முடிவுக்கு நேட்டோ அமைப்பு வந்தது. நேட்டோ அமைப்பின் இந்த முடிவை இத்தாலியின் உளவுப் படை இரகசியமாக கடாபியின் காதில் போட்டு வைத்தது. அதனால் கடாபி, தன் விமானப் பிரயாணத்தை வேறு விதத்தில் மாற்றியமைத்துக் கொண்டார். இதையறியாத நேட்டோ அமைப்பு கடாபியின் விமானம் என்ற தவறான கணிப்பினால் 'இடாவியா 870' விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது. போர் விமானத்திலிருந்து ஏவுகனையால் சுட்டதா? அல்லது நிலத்திலிருந்த இராணுவத் தளமொன்றிலிருந்து சுட்டு வீழ்த்தியதா? என்று மட்டும் தெரியவில்லை. முன்னர் பத்திரிகையாளர் புர்க்கடோரிக்குக் கிடைத்த தகவல், இரண்டு போர் விமானங்கள் மோதிக் கொண்ட போது, இடையில் 'இடாவியா 870' மாட்டிக் கொண்டது என்பது. அதனால் அந்தத் தகவலையும் யாரும் தவிர்த்துவிடவில்லை. புர்க்கடோரியின் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இத்தாலியின் கிழக்குப் பகுதியில் அமைந்த மலைத் தொடர் ஒன்றில், சுட்டு வீழ்த்தப்பட்டு வீழ்ந்து கிடந்த லிபியன் 'மிக்' வகைப் போர் விமானமொன்̀றும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போர் விமானத்தையும் யார் சுட்டு வீழ்த்தினார்கள்? எப்பொழுது சுட்டு வீழ்த்தினார்கள்? என்ற தகவலும் இன்றுவரை வெளியே தெரிய வரவில்லை. இத்தாலி அரசாங்கம் நேட்டோ அமைப்பிடம் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த லிபியன் விமானத்தைப் பற்றிப் பல தடவைகள் கேட்டுக் கொண்டும், 'தெரியாது' என்ற பதிலையே நேட்டோ அமைப்பு கொடுத்தது.



    தான் விமானத்தில் பிரயாணம் செய்யப் போவதை நேட்டோ தெரிந்து, அதைச் சுட்டு வீழ்த்த அவர்கள் தயாராக இருப்பதை அறிந்து கொண்ட கடாபி, நேட்டோவைத் திசை திருப்பத் தனது போர் விமானம் ஒன்றை அந்த நேரத்தில், அந்த வழியில் பறக்கவிட்டிருக்கலாம் என்றும், அதைக் கடாபி பயணம் செய்யும் விமானம் என்று நினைத்து, நேட்டோப் படையினர் சுட்டு வீழ்த்தியிருக்க்கலாம் என்றும், அந்த நேரத்தில் 'இடாவியும் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், சந்தேக முடிவு ஒன்று பலரால் எடுக்கப்பட்டது. படிப்படியாக இந்த விமான விபத்தைப் பற்றியும் உலக மக்கள் மறக்கத் தொடங்கினர். ஆனால், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களான இத்தாலியர்களும், இத்தாலி நீதிமன்றமும் இதை மறக்கத் தயாராக இருக்கவில்லை. 'இறந்தவர்கள் இறந்து போனார்கள். தவறு நடப்பது சகஜமான ஒன்று. தவறு செய்வதும் தற்செயலாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் இடாவியா விமானத்துக்கு என்ன நடந்தது என்ற உண்மையை மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று விடாமல் போர்க்கொடி உயர்த்தினார்கள். உலக சமாதானத்துக்கும், உலக நாடுகளின் பாதுகப்புக்கும் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பே அங்கு பித்தலாட்ட நாடகம் நடத்தியதாக அவர்கள் கருதினார்கள். நேட்டோவில் இருக்கும் நாடுகள் எல்லாம் யாரோ கொடுக்கும் கட்டளைகளுக்குப் பணிவதாகக் கருத்துகள் கிளம்பின. ஆனால் நேட்டோ வாயே திறக்க மாட்டேன் என்று இருந்து கொண்டது. 'இடாவியா 870' விமானம் விபத்துக்குள்ளாகிய இடத்துக்கு, மிக அருகில் நேட்டோ அமைப்பின் பல ராடார் கட்டுப்பாட்டு நிலையங்கள் இருந்தன. விபத்து நடந்த அந்த நேரத்தில் ராடார்கள் பதிவுசெய்த தகவல்களைத் தருமாறு இத்தாலி நீதிமன்றம், இத்தாலி அரசுக்குக் கட்டளையிட்டது. அந்தத் தகவல்களைத் தருவதிலும் பல குளறுபடிகளை ஏற்படுத்தியது நேட்டோ. கொடுக்கப்பட்ட ராடார்த் தகவல்களில் செயற்கையாக மாற்றங்களை நேட்டோ செய்துள்ளதாகச் சந்தேகம் எழுந்தது. சில ராடார்த் தகவல்களைக் கொடுக்காமலே மறைத்து விட்டது என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. ஆனாலும் கொடுக்கப்பட்ட ராடார்த் தகவல்களில் இருந்தே, வித்தியாசமான இரண்டு புள்ளிகள் காணப்பட்டதை நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் அவதானித்தனர். அந்தப் புள்ளிகள் இரண்டும் 'இடாவியா 870' விமானத்தை விட, வேகமாக நகர்ந்ததையும் அவதானித்தனர். அப்படியெனில் அவையிரண்டும், இரண்டு போர் விமானங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். புர்க்கட்டோரிக்குக் கிடைத்த தகவலுடன் இது ஒத்துப் போனது. நேட்டோ கவனிக்காமல் விட்ட தவறு அது.

     இதையெல்லாம் வைத்துப் பார்த்து, மிகச் சரியாக முப்பது வருடங்களின் பின்னர், அதாவது 23.01.2010 அன்று, இத்தாலிய உச்ச நீதிமன்றம், 'இடாவியா 870' விமானம் ஏவுகணைத் தாக்குதலாலேயே விபத்துக்குள்ளாகியது என்று தீர்ப்பளித்தது. காலதாமதமான தீர்ப்பானாலும், மறக்கவோ மழுங்கடிக்கவோ விடாமல், சொல்லப்பட்ட சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அந்த தீர்ப்பை இத்தாலிய நீதிமன்றம் வழங்கியது. காலம் செல்லச் செல்ல மெது மெதுவாக இரகசியங்களும் காற்றில் கரைந்து கசியத் தொடங்கின. 'ஃபிரான்செஸ்கோ கோசிக்கா' (Francesco Cossiga) என்ற இத்தாலிய அதிபர், 'கடாபி விமானத்தில் பறக்க இருந்தது நேட்டோ அமைப்புக்குத் தெரியும் என்றும், அந்த விமானத்தைச் சுட்டு விழுத்துவதற்கு நேட்டோ தயாராக இருந்ததாகவும், பிரான்ஸ் நாட்டின் போர் விமானமே இடாவியாவைத் தவறுதலாகச் சுட்டு விழுத்தியதாகவும்' தனது காரியதரிசி மூலம் தகவல் கிடைத்ததாகப் பேட்டி கொடுத்தார். இதைக் கணக்கில் எடுத்த இத்தாலிய நீதிமன்றம், விபத்து நடந்த இடத்தில் நேட்டோ நாடுகளுடன் போர்விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இத்தாலிய விமானிகளை நீதிமன்றத்திற்குச் சாட்சி சொல்வதற்கு அழைத்திருந்தது. அந்த இரண்டு இத்தாலிய விமானிகளும் நீதிமன்றம் அழைத்த தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ரம்ஸ்டைன் என்னுமிடத்தில் விமானப் பயிற்சியின் போது, விபத்தொன்றில் கொல்லப்பட்டார்கள். இன்று வரை அந்த விபத்து ஏன், எப்படி நடந்தது என்ற காரணத்தை யாரும் அறியவில்லை. அதே போல, நீதிமன்றத்தால் சாட்சிக்கு அழைக்கப்பட்ட 'பிராங்கோ பரீசி' என்னும் ராடார்க் கட்டுப்பாட்டு அதிகாரியும், சில தினங்களுக்கு முன்னால், உயரம் குறைந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி இறந்திருந்தார். இத்தனை தடைகளையும் தாண்டி ஏவுகணையாலேயே 'இடாவியா' சுட்டு விழ்த்தப்பட்டது என்று நீதிமன்றம் திடமாகத் தன் தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால் எந்த நாட்டு விமானம் சுட்டது என்பதை மட்டும் நீதிமன்றத்தால் சொல்ல முடியவில்லை.

     வரலாற்றில் நாம் பலமுறை இப்படி இனம் தெரியாதவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இது போலக் கொடிய சம்பவங்கள் நம் கண்முன்னாலேயே நடந்திருக்கும். அதற்குக் காரணமானவர்களும், அந்த உண்மை தெரிந்தவர்களும் நம்மைக் காப்பவர்களாக, நல்லவர்கள் போல, நம்முடனே இருப்பார்கள். ஆனால் எப்படி, எதனால் அந்தச் சம்பவங்கள் நடந்தன என்ற உண்மை மட்டும் நமக்குத் தெரியாது வைத்திருப்பார்கள். அவர்களின் ஏமாற்று நாடகங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். சம்பவங்களினால் ஏற்பட்ட பேரிழப்பை மட்டும் நாம் உள்வாங்கிக் கொண்டு, என்ன செய்வதென்றறியாமல் வாழும் நாள்வரை கதறிக் கொண்டிருக்க வேண்டும்.

Thanks to
-ராஜ்சிவா-

No comments:

Post a Comment