Thursday, September 22, 2016

உலகால் அறியப்படாத ஊட்டி ooty


தமிழ்நாட்டில் உள்ள அதி முக்கியமான கோடைஸ்தலம், மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டியைக் காணாத தமிழர் இருக்காது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும், இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் மத்தியிலும் ஊட்டி மிகப்பிரபலமானது. மற்ற மலைகளில் இல்லாத தனிச்சிறப்பு ஊட்டிக்கு உள்ளது. இந்திய அளவில் பிரபலமான ஹிந்துஸ்தான் போட்டோ ஃபில்ம்ஸ் பாக்டரி, அருவங்காட்டில் உள்ள கார்டைட் கன் பவுடர் பாக்டரி, நீடில் இண்டஸ்ட்ரீஸ் (ஊசி தயாரித்தல்), டீ பாக்டரி, சாக்லேட் பாக்டரி, பேக்கிங் ப்ரோடக்ட்ஸ் போன்ற இன்னும் பல தனித்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் ஊட்டியில் செயல்பட்டு வருவதால், வெறும் சுற்றுலா மட்டும் அல்லாமல் பல வகையான தொழில் சார்ந்த மக்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
அருகில் உள்ள பிரபல தொழில் நகரான கோயமுத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஊட்டியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். ஆங்கிலேயர்கள் வித்திட்டு உருவாக்கிய மலைப்பிரதேசம் என்றாலும், ஊட்டி இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஊட்டியைக் காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்கள் தெரிவதில்லை.
பொதுவாகவே கார்டன்ஸ், தொட்டபெட்டா, பைக்காரா, மலைரயில், லேக்கில் போட்டிங், மியூசியம், பார்க்குகள் மற்றும் ஷாப்பிங்குடன் முடிகிறது ஊட்டியின் சுற்றுலா.
மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பயணிகள் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் மற்றும் லேம்ப் ராக் அல்லது கோத்தகிரியில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட், கேத்தரின் மற்றும் கொடநாடு நீர்வீழ்ச்சியுடன் சுற்றுலாவை முடிக்கின்றனர். ஒரு வேளை கூடலூர் அல்லது பந்திப்பூர் வழியாக வந்தால் முதுமலை புலிகள் சரணாலயம், வனப்பகுதியில் ஜங்கிள் சபாரி போன்றவையோடு முடிகிறது ஒருவரின் ஊட்டிச் சுற்றுலா.
இதுக்குமேல வேற என்னதான் ஊட்டில இருக்குனு தோணுதா? அப்போ நீங்க ஊட்டிய மேலோட்டமாத்தான் பாத்திருக்கீங்க, முழுசா பாத்ததில்லை. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தவர்கள் உங்களுடன் இல்லையெனில் சிறிது சாகசம் கலந்த, உங்களை பிரமிக்க வைக்கும் ஒரு எழில்மிகு இயற்க்கைச் சுற்றுலாவிற்கு நீங்கள் தயாராகலாம். கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பல முறை ஊட்டிக்குச் சென்றிருப்பார்கள். இங்கே குறிப்பிடப் போகும் அனைத்தையும் கண்டு ரசித்த சிலர் இருந்தாலும், பலர் காணாதவையே. நீங்கள் கண்டிராத ஊட்டியைக் காண வழிவகுக்கும் என் நினைவில் வந்த சிலவற்றைக் கீழே காணலாம்.
ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதற்கு, முதலில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை என்ற இடத்தைச் சென்றடையுங்கள். அங்கே உள்ள சிலரிடம் மஞ்ஜூர் செல்லும் சாலைக்கு வழி கேளுங்கள். ஜிபிஎஸ் இருந்தால், அதனை மஞ்ஜூருக்கு செட் செய்துவிட்டு அந்த வழியைப் பயன்படுத்துங்கள். அடர்ந்த காட்டுப்பாதையில் யானை, கரடி, மான், காட்டெருமை போன்றவற்றை அதிர்ஷ்டம் இருந்தால் கண்டு ரசித்தவாறே குறுகலான மற்றும் செங்குத்தான மலைப்பாதையில் சுமார் 1 மணி நேர பயணத்தில் மஞ்ஜூரைச் சென்றடையலாம்.
அது வெறும் மக்கள் வாழும் சிறு மலைக் கிராமம் என்பதால் காண்பதற்கு ஏதும் இருக்காது. ஆனால் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டரில் அப்பர் பவானி என்ற ஒரு மிக அருமையான நீர்த்தேக்கம் உள்ளது. அங்கே உங்கள் ஆசை தீரும் வரை ரசித்துவிட்டு, அடுத்ததாக அவலாஞ்சி லேக் மேலும் ஒரு 17 கிலோமீட்டரில் உள்ளது. உங்கள் மனதையும், கண்களையும் கவரும் அவலாஞ்சி, அடுத்த சில நிமிடங்களில் வரும் எமரால்ட் லேக் என உங்கள் ஊட்டி அனுபவம் 10,000 வாலா சரவேடியோடு துவங்கிய தீபாவளியைப் போல் பட்டையைக்கிளப்பும்.
அதே ரோட்டில் நீங்கள் ஊட்டியை அடைவீர்கள். முதல் நாள் இரவு ஊட்டி நகருக்குள் ஒரு நல்ல ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த நாள் வழக்கமாக மக்கள் காணும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைக் காணவும். இல்லையெனில், பைக்காரா செல்லும் வழியில் ஒரு பிரிவில் பார்சன்ஸ் வால்லி என்ற இடம் உண்டு. அதன் அருகே போர்த்முண்டு லேக் என்ற இடமும் உண்டு. அதிக சுற்றுலா பயணிகள் இல்லாமல் இந்த இடம் உங்கள் மனதைக் கவர்வதும் நிச்சயம். அதை முடித்துவிட்டு, பைக்காரா லேக் அல்லது நீர்வீழ்ச்சியைக் காணலாம். இல்லையெனில், அங்குள்ள மக்கள் யாரிடமாவது விசாரித்தோ அல்லது ஜிபிஎஸ்ஸில் செட் செய்தோ க்லென் மார்கன் ரிசர்வாயர் செல்லலாம். அங்கு உள்ளே செல்வதற்கு தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். அதைப் பெற்றிருந்தால், அதன் உள்ளே சென்று பார்வையிடலாம். அல்லது மசினக்குடியில் இருந்து சிங்காரா பைக்காரா என்ற ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ளான்ட்டிற்கு அனுமதியுடன் சென்றால், அது ஒரு புதிய த்ரில் அனுபவமாக இருக்கும். பழனியில் உள்ளதைப்போல் சிறிய அளவில், வெறும் 6 பேர் செல்லக்கூடிய வின்ச்சிலோ அல்லது ஹேர்ப்பின் பேன்ட் மட்டுமே கொண்ட வளைவான ரோட்டிலோ பயணித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்திற்கே செல்லலாம்.
இரண்டு நாட்களில் இதையெல்லாம் கண்டுவிட்டு, வரும்போது கோத்தகிரி சாலையை அடையவும். அதில் சுமார் 15 கிலோமீட்டரில் கட்டபெட்டு என்ற இடத்தில் பிரிந்து வண்டிச்சோலை என்ற இடத்தை அடையவும். அங்கிருந்து அரவேனு என்ற இடம் நோக்கி ஹாலக்கரை ரோட்டில் பயணிக்கும்போது, டீ எஸ்டேட்களும் அதன் நடுவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பங்களாக்களும் காணலாம். பின்னர் மேட்டுப்பாளையம் வழியில் சமவெளியை அடைந்து ஊருக்கு திரும்பிச்சென்றால் ஒரு அட்டகாசமான சுற்றுலா சென்று வந்த திருப்தியுடன் வீடு திரும்பலாம்.

No comments:

Post a Comment