முதலில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்கின்றதா? மனித அறிவு எல்லாவற்றையும் ஒரு வரையறைக்குள் அடக்கவே பார்க்கும். இத்தோடு அவ்வளவுதான் என்று அடக்கி விட்டு அடுத்ததைத் தேடிப் போகப் பார்க்கும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். பிரபஞ்சத்தில் எல்லை என்று குறிக்க எந்தவொரு காம்பவுண்ட் சுவரும் இல்லை. இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்ப்போம்.
1. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அப்படியெனில், அதன் எல்லை என்பது ஒரு முடிவிலி. எல்லையே கிடையாது. ஒரு வேளை விரிவடையும் வேகத்தை விட வேகமாகப் போய்ப் பார்த்தால்.... அடுத்த பிரிவைப் பாருங்கள்.
2. பிரபஞ்சம் தன்னகத்தே தேவைக்கதிகமான நிறைகொண்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றது. அந்நிறைகளின் காரணமாக விரிவடைவது தடுக்கப்பட்டு சுருங்கத் துவங்கும். தன் அதீத நிறையால் குலைந்தழிந்து போய் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு கருந்துளையாய்ப் போகக்கூடும். (நல்ல வேலையாக அத்தனை நிறைகள் இல்லை.) இந்த நிலையில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்க வேண்டுமே. அதனைப் பார்க்கலாமே என்றால்....
இப்பொழுதும் முடியாது. ஏனெனில் இப்பொழுதும் எல்லை என்று எதுவும் இருக்காது. நிறையீர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்து கோளவடிவிலாகி விட்டிருக்கும். கோளத்தில் எது எல்லை? எது மையம்? எது முடிவு?
ஒரு பெரிய கால்பந்தில் ஊறும் எறும்பினைக் கற்பனை செய்யுங்கள். எல்லையைத் தேடிப் பயணப்படும் அவ்வெறும்பு எந்தப் பக்கம் பயணித்தாலும் தான் துவங்கிய இடத்திற்கே வந்துவிடும். இப்பொழுதும், ஈர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்துதான் இருக்க வேண்டும். ஏனெனில், வளைந்த வெளிகள் ஐன்ஸ்டைன் சொன்னதற்குப் பிறகு நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சரி, பிரபஞ்சம் கோள வடிவில் இருக்கின்றது என்றே கொள்வோம். அதன் உட்புறத்திலிருந்து வெளிப்புறமாக வந்தால் அதன் எல்லையைக் கண்டேன் என்று சொல்ல முடியுமா? அந்த எல்லையில் இருந்து பார்த்தால் என்ன தெரியும்? (இப்படியெல்லாம் கேள்வி கேட்டேன் என்றுதான் ஜியாகரஃபி மிஸ் என் காதைத் திருகி உட்கார வச்சாங்க... உங்களையும் அவங்ககிட்ட மாட்டி விட்டுருவேன்....) ஒரு வேளை இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) தெரியக்கூடுமோ?
எனினும், நம் பார்வைக்குட்பட்ட (பார்வை என்றால் கண்ணால் பார்ப்பது என்று பொருளல்ல, நாம் உணர்ந்தறியக்கூடிய என்று பொருள்) பேரண்டம் என்று ஒரு தொலைவைச் சொல்கின்றார்கள். நம் சூரியக்குடும்பத்தில் இருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும், 14 பில்லியன் புடைநொடிகள் (ஏறக்குறைய 45.7 பில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவு வரை காண முடியும்.
இத்தொலைவை ஆரம் என்று எடுத்துக்கொண்டால் விட்டம் 28 பில்லியன் புடைநொடிகள் தொலைவு வரை பிரபஞ்சம் பரந்திருக்கின்றது. கோளவடிவம் என்பதால் இதன் கொள்ளளவைக் கணக்கிட்டால், 4.1 x 10^32 கனசதுர ஒளியாண்டுகள் ஆகும். மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்.
புடைநொடி (Parsec), ஒளியாண்டு (Light Year) இரண்டுமே தொலைவைக் குறிக்கும் அளவைகள்.
No comments:
Post a Comment