Thursday, January 11, 2018

இந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது! - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு



ஆகஸ்ட் 24, 2007. பிரிஸ்டோல் நகரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளின் மோதல். பிளின்டாபின் பௌன்ஸரில் 99 ரன்களில் வெளியேறுகிறார் சச்சின். வழக்கம்போல் எல்லோரும் மூட்அவுட். ஹாஸ்டலில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலரும் எழுந்து சென்றுவிட்டனர். சச்சின் அவுட் ஆனதும் வழக்கமாக நடப்பதுதானே! 'எழுந்து போய்விடலாமா...?' எனக்குள்ளும் கேள்வி. "கோவில்கள் கட்டப்படுவது அங்குள்ள சிற்பங்களை, கட்டடக் கலையை ரசிக்க. அந்தக் கலைஞனின் திறமையை அறிந்துகொள்ள... கடவுளை மட்டும் பார்த்துத் திரும்புவன் முட்டாள்!" - எங்கள் தமிழ் வாத்தியார் சொன்னது நினைவிருந்தது. எழுந்து போகவில்லை. காத்திருந்தேன், அந்தக் கலைஞனுக்காக...!
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்கிறார். 19-ம் நம்பர் ஜெர்சி... ராகுல் டிராவிட்... இதற்காகத்தான் காத்திருந்தேன். கீப்பரின் கைநோக்கிச் செல்லும் பந்தை சடாரென்று அடிக்கும் அந்த லேட் கட், யார்க்கர் பந்தை அசால்டாக லெக் சைடில் செய்யும் ஃப்ளிக், அதற்கும் மேல்... மார்பளவு எழுந்துவரும் பந்தை, பேக்ஃபூட் வைத்து, கால்களை உந்தி, க்ரீசுக்கு அருகிலேயே வைக்கும் அந்த ஸ்ட்ரோக்...! கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கலைஞனைக் காணாமல் எழுந்துபோனால் நான் முட்டாள்தானே! கிரிக்கெட்டைப் பார்ப்பவர்களுக்கு கெய்ல், மெக்கல்லம் போன்றவர்கள் அழகு. ஆனால், கிரிக்கெட்டை நேசிப்பவனுக்கு டிராவிட்தானே பேரழகு!

சச்சின் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டு வெளியேற, தன் கிரிக்கெட்டின் வாழ்வின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார் டிராவிட். வழக்கம்போல் Aerial ஷாட்கள் அதிகம் இல்லை. ஆனால், 63 பந்துகளில் 92 ரன்கள். 11 பவுண்டரி, 1 சிக்ஸர்தான். ஓடி எடுத்த அந்த 43 ரன்களும்கூட கிரிக்கெட் பாடம் எடுத்தது. வழக்கமாக பந்துக்கும் குறைவாகவே ரன் எடுக்கும் டிராவிட், அன்று ஆடிய ஆட்டம் பலருக்கும் அதிர்ச்சி. உண்மையில் அழகும், அதிர்ச்சியும் நிறைந்ததுதானே டிராவிட்டின் ஆட்டம்! நியூசிலாந்துடனான போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 22 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியவர் அல்லவா அவர்.




"சுவர் மட்டுமல்ல... அவரை ஒரு கோட்டை என்றும் சொல்லலாம். களத்தில் டிராவிட் நிலைத்து நின்றுவிட்டால், 12 பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால்தான் அந்தக் கோட்டையைத் தகர்க்க முடியும்" என்றார் பௌலிங் ஜாம்பவான் ஷேன் வார்னே. கொஞ்சமும் மிகையில்லாத வார்த்தைகள். மொத்த அணியும் பெவிலியின் நோக்கி நடந்த போட்டிகளில், ஒற்றை ஆளாக நின்று போராடிய களங்கள் எத்தனை! ஸ்கோர்போர்டில் இந்தியா என்பதும் டிராவிட் என்பதும் ஒரேமாதிரி தெரியும். தாறுமாறாக ஸ்பின் ஆகட்டும், ஸ்விங் ஆகட்டும், பௌன்ஸ் ஆகட்டும், 160 கிலோமீட்டர் வேகத்தில் மார்பை நோக்கி வரட்டும்... டிராவிட் தயங்கியதுமில்லை, தடுமாறியதுமில்லை. ஒவ்வொரு பந்துக்கும் அவரிடம் பதிலுண்டு.
பந்துகளை அடிப்பவர்களெல்லாம் தேர்ந்த பேட்ஸ்மேன் இல்லை.

அடிக்காமல் விடத் தெரிந்தவரே சிறந்த பேட்ஸ்மேன். எந்த பந்து இன்ஸ்விங் ஆகி வெளியே வரும், எந்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும், ஸ்பின்னாகி வெளியே செல்லுமா, இல்லை ஆர்ம் பாலாக உள்ளே வருமா..? ஒரு பந்து பிட்சாகி தன்னை நோக்கி வரும் அந்த மைக்ரோ விநாடியில் இதையெல்லாம் சரியாகக் கணிக்கும் ஒரு பேட்ஸ்மேனால் மட்டுமே நம்பிக்கையோடு பந்தை அடிக்காமல் விடமுடியும். டிராவிட் - இதில் டிஸ்டிங்ஷன் வாங்கியவர். "டிராவிட்டின் தடுப்பு அரணைத் தாண்டி அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம். மற்ற வீரர்களைப்போல் அவர் அதிகமாக பந்தை அடிக்க முற்படுவதில்லை. எப்போது ஒரு பேட்ஸ்மேன் குறைவான பந்துகளை மட்டும் அடிக்கிறாரோ, அப்போது அவரை அவுட்டாக்குவது சிரமம். ஏனெனில், அவர்கள் குறைந்த தவறுகளே செய்வார்கள்" என்று ஷோயப் அக்தர் ஒருமுறை டிராவிட் பற்றிச் சொல்லியிருந்தார்.

 அவருக்கு மட்டுமல்ல, வார்னேவுக்கு மட்டுமல்ல... ஜாம்பவான்களாய் திகழ்ந்த பௌலர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சுவர் சிம்மசொப்பனம்!
அதுவும் அக்தர் ஓவரில் டிராவிட் ஆடுவதெல்லாம்...! லாங் ஆன் ஃபீல்டருக்குக் கைகொடுத்துவிட்டு, பௌண்டரி ரோப்புக்கு அருகிலிருந்து வெறிகொண்டு ஓடிவந்து 150+ வேகத்தில் வீசுவார் அக்தர். எல்.பாலாஜியே அவரது ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறார். வேகம் அப்படி. அந்த வேகத்துக்கு யார் அடித்தாலும், பந்து பறந்துவிடும். டிஃபன்ஸிவ் ஷாட் ஆடினாலே சர்க்கிள் ஃபீல்டரை அடையும். அப்படிப்பட்ட பந்தை, க்ரீஸுக்கு அருகிலேயே அடக்கிவைப்பார் டிராவிட். பந்து பேட்டில் பட்டது போலும் இருக்கும், படாதது போலும் இருக்கும். அதுதான் டிராவிட்டின் ஸ்பெஷல். ஒரு ஷாட்டால் பந்தின் pace-ஐக் குறைக்கும் வித்தை கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவனுக்கே வராது. But the wall can!



அதையெல்லாம்விட, அந்த லேட் கட்...! ரிவர்ஸ் ஸ்வீப், தில்ஸ்கூப் எதுவும் அதன் பக்கத்தில் நிற்க முடியாது. அந்த ஷாட்டை பலரும் ஆடியிருக்கின்றனர்.


ஆனால், டிராவிட்டைப் போல் எவராலும் ஆடியதில்லை. ஏனெனில், அந்த ஷாட் ரன்னுக்கானது இல்லை, ரசிப்பதற்கானது. வலது காலை க்ரீசுக்குப் பின்னே பலமாக வைத்து, இடது காலை சற்று மடக்கி, உதடுகளை உள்ளே மடக்கிக்கொண்டு பந்தை அடித்துவிட்டு, அது போகும் திசையை அவர் பார்ப்பார். 'inverted Y' போல், அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மாயக் கரங்கள் கொண்ட ஓவியன் வரைவதெல்லாம் அழகாகத்தானே இருக்கும்.


ரசிப்பதைவிட, அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கும் விஷயங்கள் ஏராளம்.


 'நீ நிற்கும் சூழல் எதுவாக இருந்தால் என்ன? உன் எதிரில் நிற்பவன் யாராக இருந்தால் என்ன? அவன் கையில் இருக்கும் ஆயுதம் எதுவாக இருந்தால் என்ன? உன் வெற்றியைத் தீர்மானிப்பது நீ மட்டுமே'...

இதை நான் கற்றுக்கொண்டது அவரிடமிருந்துதான். எந்த மைதானமாக இருக்கட்டும்... எந்த எதிரணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எத்தனை விக்கெட்டுகள் வேண்டுமானாலும் வீழ்ந்திருக்கட்டும்...எந்த நெருக்கடியும் டிராவிட்டை வீழ்த்தியது இல்லை. அவை எதுவும் அவரது உறுதியை அசைத்துக்கூடப் பார்த்தது இல்லை.



இரண்டு நாள்கள் முழுமையாக நின்று அணியைக் காப்பாற்றியிருக்கிறார். டெய்ல் எண்டர்களோடு சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைத்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறும் வெளிநாட்டு ஆடுகளங்களில் எதிரணி பௌலரை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

 அவர் அவுட்டாக வேண்டுமா என்பதையும் அவர்தான் முடிவு செய்யவேண்டும். அவரிடம் இருக்கும் உறுதி நம்மை உலுக்கிவிடும். "நம் வாழ்வில் நாம் பார்ப்பதெல்லாம் ஆக்ரோஷம் கிடையாது. உண்மையான ஆக்ரோஷத்தைக் காணவேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள்" என்றார் மேத்யூ ஹெய்டன். அப்படி ஒரு தீ அந்தக் கண்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும். அதுதான் அவர் ஜாம்பவான் ஆகக் காரணம்.
எந்தச் சூழலாக இருந்தாலும், அணிக்காக இவர் காட்டும் அர்ப்பணிப்புதான் அனைவரும் அவரை மதிக்கக் காரணம். 'முதல் பாலே விக்கெட் போயிருச்சா? நான் இருக்கேன். ஃபாரீன் சாயிலா? நான் இருக்கேன். மூணு செஷன் நிண்ணு மேட்ச டிரா பண்ணணுமா? நான் இருக்கேன். ஃபாலோ ஆன் ஆயிடுச்சா? நான் இருக்கேன். முதல் ஸ்லிப்ல நிக்கணுமா? நான் இருக்கேன். விக்கெட் கீப்பர் இல்லையா? நான் இருக்கேன். அட, ஜெயிக்க 22 பந்துக்கு 50 ரன் வேணுமா? அதுக்கும் நான் இருக்கேன்' என அணிக்குத் தேவைப்பட்டபோதெல்லாம், திணறியபோதெல்லாம் ஆக்ஸிஜனாய் இருந்தவர் டிராவிட்! "அணிக்குத் தேவை என்று கண்ணாடியின்மேல் நடக்கச் சொன்னால், டிராவிட் நிச்சயம் அணிக்காக அதைச் செய்வார்" என்றொருமுறை புகழ்ந்தார் நவ்ஜோத் சிங் சித்து. அது புகழ்ச்சியில்லை. நிதர்சனம்.



'எப்படி இந்த மனிதன் மட்டும் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்?' - இந்தக் கேள்வி கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் எழுந்திருக்கும். அதற்கான பதில் அவருக்கு மட்டுமே தெரியும். ஒரு ஐ.பி.எல் போட்டிக்குப் பின்னர் தொப்பியை வீசியெறிந்தது என்றுமே நம்மால் மறக்க முடியாது. ஏனெனில், அது அரிதிலும் அரிதான நிகழ்வு. நாம் கோபப்படும்போது, பொறுமை இழக்கும்போதெல்லாம் அவரை நினைத்தால் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். கொல்கத்தா, அடிலெய்டு போன்ற இடங்களில் அவர் ஆடிய ஆட்டத்தின் வீடியோக்களைப் பார்த்தால், இன்றும் கூட அவர் மீதான வியப்பு குறைவதில்லை. அந்த வியப்பு, பொறுமை என்ற ஆயுதத்தின் மதிப்பைப் புரிய வைக்கிறது.

கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி, கோலி என அளவு கடந்து கொண்டாடப்பட்ட வீரர்கள் அனைவரையும் மூர்க்கத்தனமாக வெறுத்தவர்களும் நம் நாட்டில் உண்டு. இவ்வளவு ஏன், கபில்தேவை விமர்சிப்பவர்களும் இங்குண்டு. ஆனால், இவரை வெறுக்கும் ஆளை இதுவரை கண்டதில்லை. வெறுத்திட முடியுமா? அளவுகடந்த திறமை, ஏராளமான சாதனைகள், குறைவில்லாத வெற்றிகள், பொருள்... அனைத்தும் சம்பாதித்தவரின் கண்களில் திமிரோ, ஆணவமோ ஒருமுறைகூட எட்டிப் பார்த்ததில்லை. அவர் அரைசதம் அடித்தால், ஹெல்மெட்டின் உயரத்தைக் கூடத் தாண்டாத மாதிரிதான் பேட்டை உயர்த்துவார். அப்படியொரு மனிதனை யாரால் வெறுக்க முடியும்?





"நான் இந்திய அணிக்காக 604 முறை விளையாடியுள்ளேன். அதில் 410 முறை அரைசதத்தைக் கடந்ததில்லை. வெற்றிகளைவிட, நான் சந்தித்த தோல்விகளே அதிகம். நான் வெற்றியாளன் என்பதைவிட, தோற்றவன்தான். அதனால், எனக்குத் தோல்விகள் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசினார் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பலகோடி பேரின் ரோல் மாடல், கிரிக்கெட் வீரர்களே கொண்டாடும் ஜாம்பவான், பத்மபூஷண்... அவர் சொன்ன வார்த்தைகள் அவை. டிராவிட்டை மொத்த உலகமும் நேசிக்கக் காரணம் இதுதான். இந்தச் சுவரின் உயரம் எவரும் அடைய முடியாதது!


Thanks for

https://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/inthas+suvaraith+takarkka+beerangikalaleye+mudiyathu+rakul+diravid+biranthanal+bathivu+happybirthdaydravid-newsid-79665717