தீதும் நன்றும் பிறர் தர வாரா!
LIFE WITH GOD IS ENDLESS HOPE;
LIFE WITHOUT GOD IS HOPELESS END
எண்ணங்களின் வலிமை
'யத் பாவம் - தத் பவதி' நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்கிறது வேதம்.
மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம்
இன்னான் எனப்படுஞ் செயல்.
ஒருவரின் உணர்ச்சி, மனத்தை பொறுத்து அமையும் என்கிறார் வள்ளுவர்.
நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் நமது எண்ணங்களே காரணங்களாகின்றன. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகும். நமது மனம் எண்ணங்களை உருவாக்கும் தொழிற்சாலை போன்றதாகும். இதில் நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் என மாறி மாறி தோன்றி கொண்டேயிருக்கும். இன்றைய மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாளில் நம்முடைய மனதில் தோராயமாக 40000 எண்ணங்கள் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலும் உபயோகமற்ற மற்றும் எதிர்மறை எண்ணங்ளாகவே இருக்கின்றன என்று கூறுகின்றனர். மேலும் நம்மிடம் தோன்றும் எண்ணங்களை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால் நாம் அவற்றால் பாதிக்கப்படுவோம். ஒரு நல்ல விளைநிலத்தில் எந்த விதமான செயலையும் செய்யாமல் விட்டு விட்டோமானால் அந்த விளை நிலத்தில் அனைத்து விதமான செடிகளும் முளைத்து விடும். மேலும் தீய உயிரினங்கள் வாழும் இடமாகவும் அது திகழும். அது போல நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகளை (எண்ணங்களை) விதைக்காமல் இருந்தாலோ அல்லது அதன் போக்கில் விட்டு விட்டாலோ அது நமது வாழ்க்கையை சீரழிக்கும் பாதைக்கு நம் மனம் கூட்டி சென்று விடும்.
நமது மனதின் குணத்தை நமது முன்னோர்கள் குரங்கு புத்தியுடன் ஒப்பிட்டார்கள். நீங்கள் குரங்கு எவ்வாறு மனிதனிடம் பிடிபடுகிறது என்பதை அறிவீர்களா? ஒரு நீண்ட கழுத்துள்ள மண் குவளையை ஒரு இடத்தில் பதிய வைத்து அதன் உள் பழங்களை வைத்து விடுவார்கள். குரங்கின் கை ஆனது உள்ளே சென்று பழத்தை பற்றி கொண்டு வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அதனால் அதன் கையை வெளியே எடுக்காதவாறு குவளையின் வாய் பகுதி தடுக்கும். குரங்கானது பழத்தின் மீது உள்ள பற்றினை விடாமல் முயற்சி செய்து பார்த்து கையை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே அமர்ந்து விடும். ஆனால் அது தன்னுடைய கையை பழத்தின் மீது இருந்து எடுத்து விட்டால் அது அந்த குவளையிடமிருந்து விடுபட்டு சென்று விடலாம் .
ஆனால் அதன் புத்தியானது பிடித்ததை விடாமல் பற்றி கொண்டதிலேயே இருக்கும். சில நேரங்களில் அப்படியே இருந்து உணவின்றி அது இறந்து போகும். இது போல தான் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை ஆராயாமல் உடனடியாக செயல்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் பிரச்சனையில் சிக்கி நம்மை நாம் இழந்து விடுகிறோம்.
இன்று நாம் காணும் அனைத்து பொருட்களுமே என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு மனிதனின் மனதில் உதிர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். இன்றைய சமுதாயத்தில் நிலவும் அனைத்து சூழ்நிலைக்கும்; காரணம் மனிதனின் மனதில் எழும் எண்ணங்களின் செயல்பாடுகளே என்பதை மறுக்க முடியாது. ஆகவே எண்ணங்களின் வலிமையை கொண்டு நாம் ஆக்கபூர்வமான காரியங்களையும் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் காரியங்களையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.
நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிடலாம். எப்படி நாம் கடலின் அலைகளை கடந்து உள்ளே சென்றோமானால் கடலின் அமைதியை காண்கிறோம் .மேலும் அதன் உள்ளே முழ்கி சென்றால் விலைமதிப்பிலாத முத்து மற்றும் பவளம் போன்ற விலையுர்ந்த பொருட்களை நம்மால் கண்டு எடுக்க முடியுமோ, அது போல் நாம் நமது மனதின் உள்ளே சென்று ஆழ் மனதின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் நாம் விரும்பியது அனைத்தும் நம்மால் அடையமுடியும்.
நம்முடைய எண்ணங்களை பொறுத்து நம் உடலை சுற்றி ஒளி வட்டம் உள்ளது. இதனை ஆரா என்று அழைப்பார்கள் இது அனைத்து மனிதர்களிடமும் உண்டு. நாம் சந்திக்கும் மனிதர்களின் உடலில் இருந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை நம் உடலானது பெற்று அதன் மூலமும் நம் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக ஆன்மீக பெரியோர்களை நாம் சந்திக்கும் போது நம் மனம் மிகவும் சாந்தியடைகிறது. சில சுயநலப்போக்கு கொண்ட மனிதர்களை சந்திக்கும் போது நமது மனம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவை அனைத்துமே அவர்களிடமிருந்து வெளிப்படும் எண்ண அதிர்வினால் தான்.
நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்.
1. ஆலய வழிப்பாடு செய்தல்.
2. வேதம் ஓதுதல் .
3.சத்சங்களில் நாம் இணைந்திருத்தல்.
4. இறைவன் நாமத்தை, மூலமந்திரத்தை
தொடர்ந்து ஜபித்தல்.
5. சாத்வீக உணவுகளை உட்கொண்டு,
சாத்வீக உணர்வு உள்ளவர்களிடம் பழகுதல்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்களால் நாம் நமது நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு தீக்குச்சி போன்றது நாம் அதனை புத்தி என்னும் தீப்பெட்டியால் உரசும் போது அது தீப்பற்றி கொள்கிறது. அந்த தீயை நாம் நல்லவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் தீயவற்றுக்கும் பயன் படுத்த முடியும். முறையாக பயன்படுத்த தவறினால் நம்மையே அந்த தீ அழித்து விடும். ஆகவே நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம் . அதன் மூலம் நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்துவோம்.
No comments:
Post a Comment