Sunday, March 5, 2017

HYDROCARBON - ஹைட்ரோகார்பன்




ஹைட்ரோகார்பன் என்பது ஒருவகைப் பொருளை மட்டும் குறிப்பது அல்ல. அது பல பொருட்களுக்கான பொதுச்சொல். ரொம்பச் சுலபமாகச் சொன்னால், ஹைட்ரஜனும் (H), கார்பனும் (C) இணைந்து தோன்றும் கூட்டுப்பொருள். இங்கு பொருள் என்பது வாயுவையும் அப்பப்போ திரவத்தையும் குறிக்கின்றது.

இன்று தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனைப் பலர் வில்லத்தன்மை கொண்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் அது ரோஜா அரவிந்தசாமியா, போகன் அரவிந்தசாமியா, இல்லை தனியொருவன் அரவிந்தசாமியா என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. அதைத் தீர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதற்கான சிறு விளக்கம் இது. ஹை.கா நல்லதா, கெட்டதா என்பதையும், அதன் அரசியலையும் நான் இங்கு பேசப்போவதில்லை.

ஹை.கா என்றால் தனியொரு பொருள் இல்லையென்று மேலே கூறினேன். ஹைட்ரஜனும், கார்பனும் பல விதங்களில், பல படிநிலைகளில் ஒன்று சேர்கின்றன. அப்படி விதவிதமாக அவை ஒன்று சேரும்போது, வெவ்வேறு மூலக்கூறுகள் தோன்றுகின்றன. அவை எல்லாமே ஹை.கார்பன்கள்தான். சொல்லப் போனால், ஆயிரக்கணக்கான ஹை.கா இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மீதேன். தமிழ்நாட்டில் மீதேன் எடுக்கும் திட்டம், ஹை.கா எடுக்கும் திட்டம் என வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலுள்ள உள்ளடி அரசியல்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இங்கு பேசமுடியாது.

கார்பன் என்பது ஆறு எலெக்ட்ரான்களைக் கொண்ட ஒரு தனிமம். அதில் நான்கு எலெக்ட்ரான்களை யாருடனாவது பகிர்ந்துகொண்டு பதவிசா குடும்பம் நடத்த நினைக்கும். ஹைட்ரஜன் காதலியை அதற்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால், தன் நான்கு கரங்களையும் கொண்டு நான்கு ஹைட்ரஜன்களை அணைத்துக் கொள்ளும். ஹை.கா இல் ரொம்ப எளிமையான மூலகம், ஒரு கார்பனையும், நான்கு ஹைட்ரஜனையும் கொண்ட மூலக்கூறுதான்.

இதன் பெயர்தான் மீதேன் (Methane - CH4).

ஒரு கார்பன், மூன்று ஹைட்ரஜன்களையும் நான்காவதாக வேறொரு கார்பனையும் கூட்டுச் சேர்ந்து கொள்வதும் உண்டு. அப்போது மேலதிகமாக இரண்டு ஹைட்ரஜன்களும் அவற்றுடன் சேர்கின்றன. அப்படி இரண்டு கார்பன்களுடன் ஆறு ஹைட்ரஜன்கள் ஒன்று சேந்து உருவாவதை ஈதேன் (Ethane - C2H6) என்பார்கள். இதுபோல படிப்படியாக ஒரு கார்பனும், இரண்டு ஹைட்ரஜன்களும் தொடர்ச்சியாகச் சேர்ந்துகொண்டு புதிய மூலகங்களை உருவாக்குகின்றன அவை புரொபேன் (Propane - C3H8), பூடேன் (Butane - C4H10), பெண்டேன் (Pentane - C5H12), ஹெக்ஸ்டேன் (Hexane - C6H14) என்று வரிசையாகப் போய்க்கொண்டேயிருக்கும். இவையனைத்தும் கார்பனின் நான்கு எலெக்ட்ரான்களையும் தனித்தனி ஒற்றை இணைப்புகளாகக் கொண்டவை. இந்தவகை ஒற்றை இணைப்பு ஹை.கார்பன்களை அல்கேன் (Alkane) என்று வகைப்படுத்துகிறார்கள். அத்துடன் இவை சாட்சுரேட்டட் (Saturated) ஹைட்ரோ கார்பன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

கார்பன்கள் தனித்தனி ஒற்றை இணைப்புகளுடன் (Single Bond) இல்லாமல், இரட்டை இணைப்புகளுடனும் (Double Bond), மூன்று இணைப்புகளுடனும் (Triple Bond) தங்களுக்குள் சேர்ந்துகொள்கின்றன. இரட்டை இணைப்புடன் உருவாகும் ஹை.கார்பன்கள் அல்கீன் (Alkene) என்றும், மூன்று இணைப்புகளுடன் உள்ளவை அல்கைன் (Alkyne) என்றும் அழைக்கப்படுகின்றன. அத்துடன், சைக்ளோ அல்கேன் (Cycloalkane), அல்கடீன் (Alkadiene) என்னும் தொகுதிகளும் உண்டு. இவற்றை அன்சாட்சுரேட்டட் ஹைட்ரோகார்பன்கள் (Unsaturated) என்கிறார்கள்.


இவையெல்லாமே ஹைட்ரோ கார்பன்கள்தான்.


பொதுவாக ஹை.கா என்றால் மக்கிப்போகும், உக்கிப்போகும் கழிவுப்பொருட்களிலிருந்து உருவாகும் வாயுக்கள். உயிரினங்கள், மரங்கள் ஆகியவை நிலத்தில் புதைந்து அவைகள் சிதைவதால் உருவாகுபவை.
 
எத்தனையோ ஹைட்ரோ கார்பன்கள் இயற்கையில் கிடைக்க, அவற்றின் விளக்கங்கள் இல்லாமல் பொதுவாக ஹை.கா திட்டம் என்பதும், மீதேன் திட்டம் என்று சொல்வதும் எதையோ நமக்கு உணர்த்தவே செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஹை.கார்பனின் உபயோகங்களும், பயன்பாட்டு பெறுநிலையும் நல்லவையே! ஆனால் அவற்றை எப்படிப் பெறப்போகிறோம் என்பதில் தெளிவான விளக்கம் கிடைக்க வேண்டும்.

இரகசிய திட்டங்கள் போல நடைமுறைக்கு கொண்டுவந்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் அரசியல் ஏன் நடைபெறுகிறது என்றே புரியவில்லை.

Thanks
-ராஜ்சிவா-