Friday, July 15, 2016

'பேலியோ டயட்' (Paleo diet)

'கீட்டோஜெனிக் டயட்' (Ketogenic diet)', 'லோ கார்ப் டயட்' (Low Carb Diet), 'ஹை ஃபாட் டயட்' (High Fat Diet), 'ஹை புரொட்டீன் டயட் (High Protein diet)' என்னும் உணவுப் பழக்க முறைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா....? பரவாயில்லை. 'பேலியோ டயட்' (Paleo diet) என்பதை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'முன்னோரின் உணவுமுறை' என்று அழகிய தமிழில் சொல்லப்படும், 'பேலியோ' உணவுமுறையைத் தமிழ் மக்களுக்கு, திரு.செல்வன் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதை அறிமுகப்படுத்திய திரு.செல்வன் அவர்கள், தன்னை முன்னோர்களுடன் தொடர்புபடுத்தும் ஒரு அடையாளமாகத் தன்னை 'நியாண்டர் செல்வன்' என்னும் பெயரில் வெளிப்படுத்தியிருக்கிறார். நியாண்டர் செல்வன் தமிழர்களுக்குச் செய்திருப்பதை, ஒரு மாபெரும் உதவியாகவும், சேவையாகவுமே நான் கருதுகிறேன்.

நான் லேசில் ஒருவரைப் பாராட்டிவிட மாட்டேன். ஒருவர் சொல்வதை பெரும்பாலும் உடன் நம்பிவிட மாட்டேன். ஒருவர் ஒன்றைச் சொல்லும்போது, அதை அப்போது ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக் கொள்வேனேயொழிய, பின்னர் அவர்கூறியதைப் பல விதங்களில் ஆராய்வேன். அப்படிப்பட்ட நான், முதன்முறையாக ஒருவரை மனதாரப் பாராட்டுவேனாகில், அது நியாண்டர் செல்வனாகத்தான் இருக்கும். இதில் முக்கியமானது, நியாண்டர் செல்வன் என்றால் யாரென்றே எனக்குத் தெரியாது என்பதுதான். முன்னர் பின்னர் அவரைப் பார்த்ததேயில்லை. அவரில் பட்ட காற்றுக்கூட என்னில் பட்டதில்லை. அப்படியிருக்க அவரை நான் ஏன் பாராட்ட வேண்டும்? காரணம் ஒன்றேயொன்றுதான். 'பேலியோ'. இதுதாண்டி அவர்பற்றி எதுவும் தெரியாதவன்.

நியாண்டர் செல்வன் தமிழர்களிடையே அறிமுகப்படுத்திய 'பேலியோ' என்னும் சொல் சிலரின் அடிவயிற்றில் பேதியைக் கரைக்கிறதோ என்ற அச்சம்தான், இன்று இதை என்னை எழுத வைத்திருக்கிறது. "அதுசரி, இதற்கு நீங்கள் ஏன் பதட்டப்பட வேண்டும்?" என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அதற்கும் நியாயமான காரணம் ஒன்றிருக்கிறது. பல வருடங்கள் நான் அனுபவித்த வலிகள், வேதனைகள், உடல் எடை ஆகியவற்றிலிருந்து இந்தப் பேலியோ உணவு முறையால் விடுதலைபெற்ற ஒரு வாழும் உதாரணம் நான். 

'பேலியோ' என்ற பெயருடன் நடைமுறைக்கு வந்திருக்கும் ஒரு அருமையான உணவுப்பழக்க முறை, ஏன் சிலரால் கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. எப்பொருளையும் யார் யார் வாய்க் கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது? இதில் நான் கவலைப்படுவதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. எழுத்துத் துறையில் இருக்கும் என் நண்பர்களில் சிலர், இந்தப் பேலியோ எதிர்ப்புக் குரலைச் சன்னமான கேலிக்குரலில் எழுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், நிச்சயம் அவர்கள் இதை ஒரு நகைச்சுவைக் கலாய்த்தலுக்காக மட்டும்தான் செய்திருப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. காரணம், அவர்கள் எழுத்துத் துறையில் அனுபவமும், எதையும் விரிவாக ஆராயும் மனநிலையும் கொண்டவர்கள். அதனால், நிச்சயம் பேலியோவைத் தப்பாக அவர்கள் சொல்லிவிடவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இங்கு எழுதுவது அவர்களுக்கானதல்ல. 

பேலியோவைக் கொச்சைப்படுத்தியும், கேலியும் செய்பவர்களிடத்தில் சில கேள்விகளை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன்.

"நீங்கள் எப்பொழுதாவது அதிக எடை உடலில் ஏறிக் குண்டாக இருந்திருக்கிறீர்களா?
"குண்டாக இருப்பதனால் ஏற்படும் உடல், மன வலிகளை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?"
"விழாக்களில் அல்லது நிகழ்வுகளில் பருமனான உடலுடன் கலந்து கொள்வதால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?"
"உடல் பருமனாய் இருப்பவர்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவர்களைச் சந்திக்கும்போது கேட்கும் முதல் கேள்வியே, அவர்களது உடல் எடையைப்பற்றித்தான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் உள்ளுக்குள் குறுகிப் போவதால் அடையும் மனவேதனை தெரியுமா?"
"சந்திக்கும் ஒவ்வொருவரும் தேர்ந்த டயட்டீசியன்களைப்போல, ஆளாளுக்கு உடல் மெலிவதற்கு அட்வைஸாக அள்ளி விடுவது தெரியுமா?"
"அதிகம் வேண்டாம், தற்போது பிரபலமாகியிருக்கும் 'செல்ஃபி' போட்டோக்களை அதிகமாக எடுப்பது மெலிந்த உடல்வாகுள்ளவர்களேயொழிய, குண்டானவர்கள் அல்ல என்ற புள்ளிவிவரமாவது தெரியுமா?"
போகட்டும்.

எடை அதிகரிப்பில் உள்ளவர்களைக் காண்பவர்களெல்லாம் அள்ளிவிடும் அட்வைஸ்களில் முதன்மையானது, " ஏன் இவ்வளவு சாப்பிடுகிறாய்? சாப்பாட்டைக் குறைக்கலாம்தானே!"

அடுத்தது, "இந்த உடம்பை வைத்துக்கொண்டு கொஞ்சமாவது எக்சர்ஸைஸ் பண்ணலாமே, தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர்களாவது நடக்கலாமே?" 

அட்வைஸ்கள் நல்லவைதான், தப்பில்லை. ஆனால், இவையெல்லாம் ஏதோவொரு வகையில் சாத்தியப்பட முடியவில்லையென்பதால்தானே அவர்கள் குண்டாக இருக்கிறார்கள். குண்டாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வரம் வாங்கியா வந்திருக்கிறார்கள்? உடல் இளைப்பதற்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதை ஒரு கேள்வி மூலமாவது அவர்களிடம் கேட்டுவிட்டு நல்லுரைகளை சொல்லலாமல்லவா? நானே உடல் மெலிவதற்குத் தலையால் மண்கிண்டியிருக்கிறேன். "நாளொரு தொப்பையும் பொழுதொரு கிலோவுமாக அதிகரித்ததேயொழிய, எடை சற்றும் குறையவில்லை. 

குண்டாக ஒருவன் இருப்பதற்கு உணவு அதிகம் உட்கொள்வது மட்டும் காரணம் என்று சொல்வது ரொம்பத் தப்பான கருத்து. அத்துடன், கொழுப்புத்தான் உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது என்று சொல்வது அதைவிடத் தப்பு. ஒருவன் உட்கொள்ளும் உணவு சமிபாடடையும்போது, எப்படி உடைக்கப்படுகிறது என்பதுதான் இங்கு முக்கியம். அதற்கு நாம் எதை உண்கிறோம், நம் சமிபாட்டு செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்பவற்றிற்கான தெளிவு தேவை. தவறான உணவை உண்டால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். அதிகம் உண்டால், அதிக எடை.ப்யார் இல்லையென்றார்கள்? இங்கு மாற்றப்பட வேண்டியது உண்பதையல்ல, உணவை.

தைராய்ட், நிம்மதியற்ற தூக்கம், ஸ்லீப் அப்னியா (Sleep apnea) போன்று பலவகை நோய்களின் தாக்கத்தால், ஒருவரின் எடை அதிகரித்துக்கொண்டே போகும். எடை அதிகரிக்கும்போது, ஒருவரின் BMI அளவும் அதிகரிப்பதினால், மேலும் மேலும் தான் உட்கொள்ளும் உணவை அதிகரித்துக்கொண்டே போவார். இதுவொரு சங்கிலித் தொடர்ச்சி போன்றது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க உட்கொள்ளும் உணவும் அதிகரித்து மேன்மேலும் உடல் குறுக்காக வளரும். உடல் எடை அதிகரிப்பு என்பது, வளர்பிறை மட்டும்தான்.

'ஏன் இவர்கள் ஸ்போர்ட்ஸ், எக்சர்ஸைஸ் ஏதாவது செய்யலாம்தானே?' என்ற கேள்விகளுக்கான பதிலாக, அவர்களிடம் ஏதோவொன்று இருக்கும். அதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணம் தேடி எங்கும் போகத் தேவையில்லை. என்னையே எடுத்துக் கொள்ளலாம். 'ரூமட்டாய்ட் ஆத்திரட்டீஸ்' (Rheumatoid Arthritis) என்னும் மூட்டுகளில் கொடுமையான வலிகளை ஏற்படுத்தும் நோய் எனக்குண்டு. மூட்டுகளை அளவுக்கு அதிகமாக அசைப்பதால், அங்கு 'இன்ஃபிளமேசன்' (Inflammation) ஏற்பட்டு, மூட்டுகள் வீக்கமடைந்து வலி உருவாகும். அப்படி ஏற்படும் வலி, லாரியொன்று அடித்துவிட்டுச் சென்றதற்கு ஒப்பாக இருக்கும். அந்த மூட்டுச் சார்ந்த பகுதிகளில் நரம்புகள் வெட்டிவெட்டி இழுக்கும். அந்த வலி வரும்போது, தோய்த்துப் போட்ட துணிபோல ஆகிவிடுவேன் நான். எந்த மூட்டுகளுக்கும் ஒரு அளவுக்குமேல் வேலை கொடுக்க முடியாது. கொடுத்தால் போச்சு. வலி மாத்திரைகள் மற்றும் உயர் அளவு 'கார்ட்டிசோன்' (Cortison) மாத்திரையாக அல்லது ஊசியாகக் கொடுப்பதே வலி நீக்கும் ஒரே வழி. ஊசியென்றால், எந்த மூட்டில் வீக்கம் இருக்கிறதோ அங்கே நேரடியாக ஊசியைச் செலுத்துவது. கைவிரல்கள் அல்லது மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டால், அந்த மூட்டெலும்புக்குள் ஊசியைச் செலுத்தி, காரில் கியர் போடுவது போல ஊசியைத் திருப்புவார் டாக்டர். கடவுள் ஒருதரம் கீழே இறங்கிவந்து கண்ணைச் சிமிட்டிவிட்டுச் செல்வார். நான் கடவுளைக் கும்பிடாததற்குத் தண்டனையாம். கொடுமையென்று ஒன்று உண்டென்றால், இதுவே அதன் தலைவன். மகாக்கொடுமை. கையில் வரும் வலியைவிட ஊசிவலி எவ்வளவோ மேல். ஒரேயொரு தடவை நெஞ்சின் நடுவே மார்புக்கூட்டில் இந்த வலி எனக்கு ஏற்பட்டது. மூச்சுவிடவே முடியவில்லை. சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் வலியுடன் இறங்கியது. நண்பனொருவனின் உதவியுடன் ஹாஸ்பிட்டல் சென்று பார்வையாளர் பகுதியில் வைத்து நெஞ்சில் ஒரு ஊசி. 'பச்சக்', அவ்வளவுதான். வலி போயேபோச்சு.

பின்னர், இதில்கூட நான் ஒரு துரதிர்ஷ்டசாலியாகினேன். எனக்கு 'கிளௌகோமா' (Glaucoma) என்னும் கண்ணில் ஏற்படும் உயர் அழுத்த நோய்க்காக, கார்ட்டிசோன் மாத்திரைகள் பயன்படுத்த முடியாமல் போனது. இப்போ நான் என்ன செய்ய முடியும்? கார்ட்ஸ் (Playing Cards) விளையாட்டில் கார்ட்டுகளைக் கலைப்பதனாலேயே விரல்கள் வீங்கிவிடும் எனக்கு. நான் எந்த ஸ்போர்ட்ஸ் அல்லது எக்சர்ஸைஸ் செய்ய முடியும் சொல்லுங்கள்? வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், பொம்மைபோல அமர்ந்திருப்பேன். விளைவு உடல் எடை அதிகரிப்பு. இதுபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.

பேலியோ என்பது எடையிழப்பு க்கு மட்டுமான ஒரு உணவுப்பழக்க முறையல்ல. அதன் பயன்கள் எண்ணிக்கையற்றவை. ஒருபதிவின் மூலம் அவற்றைச் சொல்ல முடியாது. அதைச் சொல்வதற்கு நியாண்டர் செல்வன் இருக்கிறார். பேலியோ நன்மைகளில் எடையிழப்பும் ஒன்று. நாம் மாற்றவே முடியாது என நம்பிக்கொண்டிருகும் பல நோய்களிலிருந்து சற்றே விலகி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு வழிசெய்து தருவது அது. 

ஒரு மாதத்தில் நீங்கள் ஆரோக்கியமான வழியில், 'டயட்' என்ற பெயரில் பட்டினி கிடக்காமல், வயிறு நிறைய உணைவை உண்டு, குறைந்தது 3 கிலோவை எடையைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? சந்தைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படும் ஏதேதோ பதார்த்தங்களை உண்கிறீர்கள், குடிக்கிறீர்கள். அதனால் ஆயிரக்கணக்கான பணத்தை தண்ணீராகக் கொட்டுகிறீர்கள். இவை எவையுமில்லாமல், உங்கள் உணவுப்பழக்கத்தால் மட்டும் எடையை இழக்கச் செய்வது நல்லது அல்லவா? இதை ஏன் பழிப்புக்குள்ளாக்குகிறீர்கள்?  உங்களால் இந்த உணவுப்பழக்க முறையைக் கையாள முடியவில்லையா? விடுங்கள். செய்பவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். 

தவிர்க்க முடியாத ஏதோவொரு காரணத்தினால், உங்களால் தொடர முடியாத ஒரு உணவு முறையை, தப்பென்று கேலி செய்வதில் என்ன நியாயம் இருக்கு சொல்லுங்கள்?

உடலால் எந்த வேலையும் செய்யாமல், பட்டினி இருக்காமல், திருப்தியான அளவு உணவை உண்டு, கலோரிகள் கணக்குப் பார்க்காமல், அதிக இறைச்சி, அதிக கொழுப்பு, அதிக முட்டைகள் என்று தினமும் உட்கொண்டு, உடல் எடையையும் குறைப்பதோடு, சிலபல நோய்களிலிருந்து விடுதலை கொடுப்பதற்குப் பெயர்தான் 'பேலியோ'.

நாளைய அறிவியலில் இதைவிடச் சிறந்த வேறொரு முறை வரலாம். அப்படி வருவதுதான் அறிவியலின் தன்மையும்கூட. அப்போது இதற்கான மாற்று ஏற்படலாம். ஆனால், இன்றிருக்கும் முறைகளில் சிறந்ததும், வலியதும் பேலியோதான்.

நியாண்டர் செல்வனுக்கு என் நன்றிகள்.

-ராஜ்சிவா-

No comments:

Post a Comment