‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) படத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விண்வெளியி அலையும் நம் எதிர்காலச் சந்ததியினரின் கதை அது. அதில், வரும் விண்கலத்தில் பயணம் செய்துகொண்டு இருப்பவர்கள், ஒரு குழாய் போன்ற வடிவமுள்ள ஒரு பகுதிக்குச் சென்று, ‘டெலிபோர்ட்டேசன்’ (Teleportation) மூலமாக வேறு இடத்துக்குச் செல்வார்கள். நவீன இயற்பியலில் 'டெலிபோர்ட்டேசன்', சாத்தியமான ஒன்றுதான். இந்தச் சாத்தியங்களை, அணுத்துகள்களில் பரிசோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளார்கள். ஃபோட்டான் துகள்களை, டெலிபோர்ட்டேசன் மூலமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், ஒரு முழுமையான பொருளையோ அல்லது மனிதனையோ அப்படி அனுப்புவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதிலும், ஒரு மனிதனை முழுமையாக, ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்துக்கு அனுப்புவதென்பதை இப்போதுள்ள அறிவியலின்படி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ‘ஃபாக்ஸ்’ (Fax) இயந்திரம் மூலமாக, ஒரு காகிதத்தில் உள்ளவற்றை மின்செய்தியாகக் கடத்தி, இன்னுமொரு இடத்தில் பெறுவதுபோல, டெலிபோர்ட்டேசன் மூலமாக மனிதனையும் அனுப்புவது என்பது சிக்கலான ஒரு விசயம் (ஃபாக்ஸ் இயந்திரத்தை, புரிய வேண்டுமென்பதற்காக ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்).
மனிதனை டெலிபோர்ட்டேசனில் அனுப்ப வேண்டுமாயின், அவன் மூளையிலுள்ள எண்ணங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். மனிதன் அணுத்துகளால் ஆக்கப்பட்டிருப்பதால், அவனை அனுப்புவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவனது எண்ணங்கள், அணுத்துகள்கள் கிடையாது. அவற்றைப் படியெடுக்கும் முறையும் இங்கு அவசியமானது.
ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு அனுப்பப்படும் மனிதனின் ஞாபகங்கள் இல்லாவிட்டால், அவனை அதே நபர் என்று சொல்ல முடியாதல்லவா? இது அறிவியலில் சிக்கலான பிரச்சனையாகவே இப்போது பார்க்கப்படுகிறது.
இன்றிருக்கும் சூழ்நிலையில் சாத்தியமே இல்லாத இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது.
ரஷ்யா சமீபத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருகிறது. அதன்படி, ஒரு புதுத் திட்டத்தை 2.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவில் ரஷ்யா செய்ய இருக்கிறது. 'ஸ்டார் ட்ரெக்' படத்தில் வருவது போலவே ஒரு 'டெலிபோர்ட்டேசன்' கருவியை உருவாக்குவதுதான் ரஷ்யாவின் நோக்கம். இதற்கு 20 வருட கால அவகாசத்தையும் எல்லையாக முடிவு செய்திருக்கிறது.
இந்தத் திட்டம் மட்டும் நடைபெறுமானால், மனிதன் அறிவியலின் அடுத்த படிநிலைக்குச் சென்றுவிடுவான்.
-ராஜ்சிவா-
No comments:
Post a Comment