Wednesday, March 28, 2018

USB bacteria களின் அதிசய செய்தி





உயிர்ப் பதிவு!

பயணம் செய்வதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நானே காரை நெடுந்தூரம் ஓட்டிச் செல்வதென்றால்… ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மாலை நேரம், வாகனங்கள் குறைந்த நெடுஞ்சாலையில், இரைச்சல்கள் இல்லாத தனிமைச் சூழலில் காரோட்டிச் செல்வது யாருக்குத்தான் பிடிக்காது..? டாஷ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் வாசனை அட்டையிலிருந்து கிளம்பிவரும் மெல்லிய வாசனையுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு மிகையொலியுடன் ஒலிக்க, அதை உரக்கப் பாடியபடி பயணம் செய்வது சொர்க்கம். பாடும்போது, என் குரல் அண்டங்காக்காய் கத்துவதுபோல இருந்தாலும், ரஹ்மானின் இசையிலிருந்து வரும் கிதார் கம்பிகளின் அதிர்வுகளும், வழியும் பியானோ பின்னொலியும், அதிரும் தாளமும், பிரபலப் பாடகியாகவே என்னை நினைக்க வைத்துவிடும்.

ஒவ்வொரு முறையும் நான் காரில் ஏறுவதற்குக் கதவைத் திறக்கும்போது, ‚இந்தச் சுகமான அனுபவத்தை ரசிக்கப் போகின்றேன்‘ என்ற நினைவுடனே காரில் நுழைந்து இயக்க ஆரம்பிப்பேன். ஆனால்… எங்கே அந்த யூஎஸ்பி பதிவுத் தகடு (USB Stick)? வழக்கமாக இந்தக் கைப்பையில்தானே வைத்திருப்பேன்..? வீட்டில் இருக்கும்போது அதைப் பயன்படுத்தினேனல்லவா, மீண்டும் கைப்பையினுள் வைத்தேனா..? எல்லாப் பெண்களும் வைத்திருப்பது போலவே, நானும் ஒரு பெரிய கைப்பையை வைத்திருக்கிறேன். பெண்களின் கைப்பைகளில், இந்த உலகத்தில் அவர்களுக்குத் தேவையான பணப்பை, அழகு சாதனங்கள், திறப்புகள், கைபேசி, பேனா, சீப்பு, கிளிப், பர்ஃப்யூம், அது இது என்று எல்லாமே இருக்கும். கை வைத்துத் தேடத் தேட, எல்லாவற்றையும் வழங்கும் காமதேனு அது. ஆனால், அவசரத்தில் நீங்கள் எதைத் தேடுவீர்களோ, அது அங்கே இருக்காது. எத்தனை தேடினாலும் உங்கள் கைகளில் கிடைக்காது. இன்று நான் தேடிக்கொண்டிருக்கும் யூஎஸ்பி பதிவுதத் தகடுபோல. எதுவும் இல்லாமல் காரில் பயணம் செய்ய முடியும் என்னால், பாடல் இல்லாமல்…. ம்ஹூம், முடியவே முடியாது. தினமும் கார், வீடு என்று யூஎஸ்பி பதிவுத் தகட்டை அங்குமிங்கும் கொண்டு செல்வதைவிட, சொந்தமாகப் பதிவுதத் தகட்டையே நாம் கொண்டு செல்வது நல்லதில்லையா..? சொந்தமான பதிவுத் தகடென்று நான் சொல்வது எந்தவொரு எலெக்ட்ரானிக் சாதனத்தையும் அல்ல. ஒரு யூஎஸ்பி பதிவுத் தகடுபோல, நம் உடலினில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்..? அதுவும் உயிர்வாழும் பதிவுத் தகடாக அது இருந்தால் எப்படி இருக்கும்..? ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் கட்டுரை சொல்லப் போவது அதைத்தான். உயிருள்ள யூஎஸ்பி பதிவுத் தகடொன்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
நமது உடலில் இருக்கும் அனைத்து திசுக்களையும் (Cells) விடப் பத்து மடங்குகள் அதிகமான பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிரிகளும் நம் உடம்பில் வாழ்கின்றன. கிட்டத்தட்ட, 3.9X10^13 அளவில் பிற நுண்ணுயிரிகள் நம் உடம்புக்குக்கு உள்ளேயும், உடம்பின் வெளி மேற்பரப்பிலும் வாழ்கின்றன. இவை ஒரே மாதிரியான உயிரிகள் அல்ல. வெவ்வேறு விதங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அவற்றிற்கெனத் தனித்தனித் தொழிற்பாடுகள் இருக்கின்றன. பாக்டீயாக்கள் (Bacteria) என்றாலே கெட்டவைதான் என்று பெரும்பாண்மையான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கூற்று உண்மையானதல்ல. நம் உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்டீரியாக்களில் பெரும்பாண்மையானவை நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானவை. நம் உடலின் ஒரு பகுதியாகவே அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அவை இல்லாவிட்டால் நாம் உயிர் பிழைப்பதே கஷ்டமானது.

பாக்டீரியா என்றால் பாக்டீரியாதானே என்றுதான் நினைத்துக்கொள்கிறோம். பாக்டீரியாக்களிலேயே ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. இவை நம் தோலிலும், மூக்கிலும், வாயிலும், கழிவுறுப்புகளிலும், வயிற்றுக்குள்ளும் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. உங்கள் இடது காதின் பின்மடலில் மட்டும் 2363 விதமான பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? உங்கள் முழங்கையில் 3632 வகையான பாக்டீரியாக்கள் கோடி கோடியாக வாழ்கின்றன. மிக அதிகமான விதங்களில் பாக்டீரியாக்கள் வயிற்றின் செரிமானத் தொகுதியிலேயே வசிக்கின்றன. அவற்றின் சுரப்புகள் உணவுச் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவை மட்டுமில்லாமல், வைட்டமின்களையும், கொழுப்பு அமிலங்களையும் (Short Chain Fatty Acids) அவை சுரக்கின்றன. தவறான உணவை உண்பதும், நோய்த் தொற்றுகளும், மன அழுத்தங்களும், மருந்துகள்/மாத்திரைகளின் பக்கவிளைவுகளும், இந்த நன்மை செய்யும் பாக்டீயாக்களை அழிக்கும் காரணிகளாகின்றன. இந்த பாக்டீரியா வகைகளில் முக்கியமான ஒன்றுதான் ஈகோலி (Eschericia coli) என்னும் பாக்டீரியா. பாக்டீரியாக்கள், நம் வயிற்றினுள் வாழ்ந்துகொண்டு, கெட்ட நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இதைப்பற்றி பின்னர் நான் விரிவாக எழுதுகிறேன். ஆனால் இப்போது, பார்க்க இருக்கும் சம்பவத்துக்கு வரலாம்.

ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சேத் ஷிப்மான் (Seth Shipman) என்பவரின் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த ஆண்டு (2017) ஒரு ஆச்சரியமான ஆராய்ச்சியைச் செய்தனர். செய்தது மட்டும் இல்லாமல், அதில் பெரும்பகுதி வெற்றியும் கண்டனர். நாம் ஒரு கணணி வன்தகட்டிலோ (Hard disc), யூஎஸ்பி தகட்டிலோ தரவுகளைச் (Data) சேகரிப்பதுபோல, உயிர் வாழும் பாக்டீரியாக்களில் சேகரிக்க முயற்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முதல் படியாக, ஈகோலி பாக்டீரியாவின் டிஎன்ஏ யினுள் GIF இயங்கு படமொன்றைப் பதிவுசெய்து சேகரித்தார்கள். ஒரு பந்தயக் குதிரை ஓடுவது போன்ற இயங்கு படம். அவர்களின் இந்த முயற்சி உலகமே வியக்குமளவிற்கு வெற்றி பெற்றது. மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் (gene & editing system CRISPR) மூலமாகவே இந்த ஆராய்ச்சியைச் செய்து முடித்தார்கள்.

நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை, வைரஸ் கிருமிகள் தாக்கும்போது, பாக்டீரியாக்கள் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும். வைரஸ்களை நடுவே பிளந்து, அவற்றின் மரபணுப் பதிவுகளில் (DNA), தங்களின் மரபணுப் பதிவுகளைப் பாக்டீரியாக்கள் பதிவு செய்துவிடுகின்றன. அதாவது, காப்பி பேஸ்ட் செய்வது போல. இதனால், வைரஸ்களின் மரபணுக்கள், பாக்டீரியாக்களின் பகுதிகள் போல ஆகிவிடுகின்றன. இது, வைரஸ்களின் படையெடுப்பின் தீவிரத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பை நம் உடல் இதனால் இலகுவாகக் கைக்கொள்கின்றது. வைரஸ்களின் தாக்குதல் செயல்பாடுகளை செய்தியாகத் தாங்கிய அவற்றின் மரபணுக்களில், அச்செய்திகள் நீக்கப்பட்டு, வேறு வகையான தீமையற்ற செய்திகள் பதிவாகின்றன. பாக்டீரியாக்களின் இந்தப் பதிவுசெய்யும் செயல்முறையை வைத்துக்கொண்டே, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியுமாகியது.

இதுவரை இந்த ஆராய்ச்சி மூலமாக, சிறியளவு பிக்செல் (Pixels) கொண்ட கருப்பு வெள்ளை இயங்கு படமொன்றையே (GIF) ஈகோலி பாக்டீரியாக்களில் பதிவு செய்திருக்கிறார்கள். 36X26 பிக்செல்கள் படமாக அது இருந்தது. இவற்றின் அளவு படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும். இந்த ஆராய்ச்சி வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில், ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் பத்தாம் பகுதியை நம் தோல்களில் பதிவுசெய்து நாம் பார்க்கப் போகும் நிலைக்கான வாய்ப்புகள் மிகஅதிகமாகவே இருக்கிறது.

நன்றி 

யாலு சிவா

No comments:

Post a Comment