Thursday, October 29, 2015

ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள்... சாத்தியமா?



மூன்று சூரியன்கள் சாத்தியமில்லை ஆனால், சூரியனின் பிம்பங்கள் சாத்தியம். புவியில் இருந்து பார்க்கையில் அது மூன்று சூரியன்களைப் போன்று நமக்குத் தெரிவதால் அப்படிச் சொல்லிக் கொள்கிறோம்.

இது ஒரு வளிமண்டலத்து ஒளியியல் தோற்றப்பாடு (Atmospheric Phenomenon). ஆங்கிலத்தில் Sun Dog என்று சொல்வார்கள். அறிவியலில் அதனை  Parhelion என்பார்கள். பன்மையில் சொல்வதென்றால் Parhelia.

சமயங்களில் இட வலமாக இரண்டு சூரிய பிம்பங்களோடு ஒளி வட்டமும் சேர்ந்து தோன்றும். அந்த ஒளிவட்டத்தினை 22° Halo என்பார்கள். தமிழில் பரிவேடம். இது சூரியன், நிலா இரண்டைச் சுற்றியும் ஏற்படும். சூரியனைச் சுற்றிச் சற்றே பெரிய அளவில் ஏற்படும் ஒளிவட்டத்தினை அகல்வட்டம் என்று சொல்வார்கள். அப்படி அகல்வட்டம் ஏற்பட்டால் மழை பெய்யும் என்று சொல்வார்கள். அகல்வட்டம் பகல்மழை என்ற சொற்றொடர் அதனை உறுதி செய்யும்.

இந்த நிகழ்வு ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடியவை அல்ல. உலகின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரிஸ்டாட்டில் காலம் தொட்டு அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 320 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இது அவதானிக்கப்பட்டுள்ளது. வானை நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத நமக்குதான் இது ஆச்சர்யமளிக்கக்கூடும்.

இனி அறிவியல் விளக்கம். இந்நிகழ்வு சூரியன் உதிக்கும்போதோ அல்லது மறையும் போதோதான் நிகழும். அதாவது சூரியன் அடிவானத்தில் இருக்க வேண்டும். அதற்கு இணையான தளத்தில் பார்வையாளரும் இருக்க வேண்டும்.

முக்கியமாக வளிமண்டலத்தில் குருள் மேகங்களில் (Cirrus Clouds) தட்டைவடித்தில் அறுங்கோன பனிப்படிகங்கள் (Plate Shaped Hexagonal Ice Crystals) இருக்க வேண்டும்.  இந்தப் படிகங்கள் ஒரு முப்பட்டகத்தினைப் போலச் செயல்பட்டு, அதற்குள் பாயும் சூரிய ஒளியினை 22° அளவில் ஒளிவிலகள் ஏற்படச் செய்கின்றன.

இந்தப் படிகங்கள் ஒழுங்கற்று அமைந்திருந்தால் சூரியனைச் சுற்றி பரிவேடம் ஏற்படும். மாறாக, செங்குத்தாக ஒரே சீராக அமையுமானால் முச்சூரியத் தோற்றம் (Sun Dog) ஏற்படும்.

ஆக, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், அந்த அறுங்கோணப் படிகங்களில் பட்டு பிரதிபலிக்கப்பட்டு வரும் ஒளிக்கதிர்களும் நம்மை வந்து அடையும்பொழுது சூரியனுக்கு வலமும் இடமுமாக மேலும் இரண்டு சூரியன்கள் இருப்பதைப் போன்று நமக்குத் தோற்றமளிக்கும்.

படங்கள் எடுக்கப்பட்ட தளங்கள் :
http:// apollo. lsc.vsc.edu/classes/met130/notes/chapter19/graphics/sundogs_schem.jpg
http://www. islandnet .com/~see/weather/graphics/photos/sundog.gif

No comments:

Post a Comment