'டூரின் ஷ்ரௌட்' (Shroud of Turin) என்று சொல்லப்படும் 'டூரின் துணி' உண்மையானதுதான் என்பதற்கும், போலியானதுதான் என்பதற்கும் இரண்டுபக்கத் தரப்பிலிருந்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் பலவிதமாகச் சொல்லப்பட்டன. அது இயேசுநாதர் மரித்தபோது மூடிச் சுற்றிக்கட்டப்பட்ட துணிதான் என்று சொல்பவர்கள், அந்தத் துணியில் பதிந்திருக்கும் உருவத்தின் அமைப்பையும், இரத்தத் திட்டுகள் காணப்பட்ட விதங்கள். பைபிளில் அதைப் பற்றிச் சொல்லப்பட்ட குறிப்பு, அதன் பழமை ஆகிவற்றையும் சுட்டிக்காட்டி, 'இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?' என்று கேட்கிறார்கள். அத்துடன், அதில் காணப்படும் இரத்தம் மனித இரத்தம் என்று நிறுவப்பட்டதையும், உருவம் எதிர்மறை விம்பமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், ஊதா கடந்த ஒளியைச் (Ultraviolet Light) செலுத்திப் பார்த்தபோது வரையப்பட்ட உருவம் தெரியாமல் போனதையும், வேறுசில ஆச்சரியமான தன்மைகளையும் ஆதாரமாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், 'இந்தத் துணியில் உருவங்கள் தோன்றியது அறிவியலே வளராத பல நூற்றாண்டுகளுக்கு முன்னர். இன்றைய காலங்களிலென்றால் இது போன்ற ஒன்றை அறிவியல் சாத்தியங்களைக்கொண்டு நம்மால் உருவாக்க முடியும். அந்தக் காலங்களில் யாரால் இதை உருவாக்கியிருக்க முடியும்?' என்று எதிர்க் கேள்வியும் கேட்கிறார்கள்.
ஆனால், டூரின் துணி போலியானது என்று மறுப்பவர்களோ, மேலே இவர்கள் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொண்டாலும், அவை ஒவ்வொன்றிலுமுள்ள தவறுகளைத் தர்க்க ரீதியாகச் சுட்டிக்காட்டி மறுக்கிறார்கள். அறிவியல் வளராத அந்தக்காலத்தில் இதை எப்படி வரைந்திருப்பார்களென்று அச்சு அசலாக வரைந்தும் காட்டினார்கள். அதில் முக்கியமானவர்களாக, 'எமிலி க்ரெய்க்கும்', 'லூயிஜி கார்லாசெல்லியும்' கருதப்படுகிறார்கள். ஆனாலும், 'இந்தளவுக்குச் சிந்தித்து இப்படியொரு உருவத்தை வரையும் திறமை கொண்டவர் அந்தக் காலங்களில் யார் இருந்திருக்க முடியும்?' என்ற ஆச்சரியமான கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்திருந்தாலும், எதிர்மறை விம்பமாகத் துணியில் வரைந்ததும், ஊதாகடந்த ஒளியில் தெரியாத ஏதோவொன்றைப் பயன்படுத்தி அதை வரைந்ததும், 'ஆச்சரியமான மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும்' என்ற முடிவுக்குக் கொண்டுவந்தது. அப்படிப்பட்ட மனிதர் எவராவது கடந்தகால வரலாற்றில் வாழ்ந்தாரா என்று பார்த்தபோது, ஒரேயொருவர்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வந்தார். அவரைத்தவிர இதைச் செய்வதற்கு வேறு யாராலும் இயலாதென்றும் முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் அப்படியொரு முடிவுக்கு வந்ததற்கு நிறையவே காரணங்களும் இருந்தன. அவர்தான் மர்மங்களுக்கும், வியப்புகளுக்குமுரிய மாபெரும் திறமைசாலியான 'லியர்னாடோ டா வின்சி' (Leonardo Da Vinci).
இந்த இடத்தில் நான் டூரின் துணியின் மர்மத்திலிருந்து சற்று விலகிச் செல்ல வேண்டியுள்ளது. டூரின் துணிக்கும், லியர்னாடோ டா வின்சிக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்பதைப் பார்ப்பதற்கு, நாம் டா வின்சி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறையவே உண்டு. அவற்றை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே டூரின் துணிக்கும் அவருக்கும் எப்படித் தொடர்பு இருக்கலாமென்ற முடிவுக்கு நாமும் வரலாம். லியர்னாடோ டா வின்சியைப் பற்றி எழுதும்போது அவரின் பெயரை டாவின்சி.. டாவின்சி.. என்றே அனைவரும் எழுதுவது வழக்கம். ஆனால், டாவின்சி (Davinci) என்று சேர்த்து எழுதுவது தவறு. டா வின்சி (Da Vinci) என்று பிரித்துத்தான் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக, 'டா வின்சி' என்பது அவரது பெயரல்ல. இத்தாலி நாட்டிலிருக்கும் 'ஃபுளோரென்ஸ்' (Florence) மாநகரத்தில் அமைந்த ஒரு சிறு நகரத்தின் பெயர்தான் 'வின்சி' (Vinci). Da Vinci என்றால், 'வின்சியிலிருந்து' என்று அர்த்தமாகும். அதாவது வின்சியிலிருந்து வந்த லியர்னாடோ என்பதே 'லியர்னாடோ டா வின்சி' என்பதன் முழு அர்த்தம். வின்சி நகரத்தில் வாழ்ந்து வந்த சட்டத்தரணியான பியரோ டா வின்சி (Piero da Vinci) என்பவருக்கும், கத்தரினா என்பவருக்கும் பிறந்தவர்தான் லியர்னாடோ. மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு நாளில்தான் இவர் பிறந்தார். அதாவது ஏப்ரல் 15ம் தேதி 1452ம் ஆண்டு இவர் பிறந்தார். அதே ஏப்ரல் 15ம் தேதிதான் ராஜ்சிவாவும் பிறந்தார் என்பதால் லியர்னாடோ டா வின்சிக்கு மேலும் ஒரு சிறப்புக் கூடியதென்று வைத்துக் கொள்ளுங்களேன்.
"டா வின்சி பற்றித் தெரிந்துகொள்ள அப்படி என்னதான் இருக்கிறது? மொனோலிசா ஓவியத்தை வரைந்த மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஓவியர் அவர். அதைத்தாண்டி வேறுசில ஓவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இதற்குமேல் ஒரு ஓவியரைப் பற்றி என்னதான் தெரிந்து கொள்ள முடியும்?" என்று நீங்கள் கேட்டால், வரலாற்றின் தகவல்களை அறியும் தேவைகளை மிகமிகக் குறைவாகப் பெற்றவராக நீங்கள் இருக்கிறீர்களென்று அர்த்தம். 20ம் 21ம் நூற்றாண்டுகளில் ஆச்சரியப்படும்வகையில் புத்திஜீவிகள், கல்வி மேதைகள், இயற்பியல்/கணித மேதைகள், கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகளென எத்தனையோ பேர் பூமியில் வாழ்ந்துவிட்டனர், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், லியர்னாடோ இவர்களெல்லாரையும் விடச் சிறப்பானவர். நாம் அறிந்த 'சுப்பர்மான்' (Superman) பறப்பார், பலசாலியாக இருப்பார், எல்லாம் செய்வார். அவையெலாமே புனைவுகளாக நம்முன் இருப்பவை. ஆனால் நிஜமாக வாழ்ந்த ஒரு சுப்பர்மான் என்றால் அது லியர்னாடோதான். இவர் பறக்கவோ, பலசாலியாக இருக்க மாட்டார். அதையெல்லாம் தாண்டிப் பல திறமைகளைக் கொண்டவர். இதைச் சும்மா பேச்சுக்காகச் சொல்கிறேனென்று நினைத்து விடாதீர்கள். இவர்போலப் பல்துறைகளில் திறமை வாய்ந்த ஒரு மனிதன் இதுவரை பிறக்கவில்லையென்றுதான் சொல்கின்றனர். இவர் கைவைக்காத துறைகளே இல்லையென்று சொல்லலாம். அனைத்துத் துறைகளிலும் இவர் மிகத்திறமை வாய்ந்தவராகவே காணப்பட்டிருக்கிறார். இவர் என்னென்ன துறைகளில் திறமை வாய்ந்தவராக இருந்தார் என்று தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.
லியர்னாடோ டா வின்சி ஒரு ஓவியர். அத்துடன் அவர் ஒரு சிற்பியும்கூட. அதுமட்டுமல்ல, அவர் ஒரு கட்டட வரைபட வல்லுனர். பொறியியலாளர், விஞ்ஞானி, உடற்கூற்று அறிஞர், தாவரவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், வானிலை ஆராய்ச்சியாளர், கணிதவியலாளர், புவியியல் வல்லுனர். இவற்றுடன் இவர் ஒரு இசைமேதை, அத்துடன் ஒரு எழுத்தாளர். இதுக்கே உங்களுக்குத் தலை சுற்றுகிறதா? இவை தாண்டி இன்னும் பல திறமைகள் இவரிடம் இருந்தன. இதுவரை பூமியில் தோன்றிய சிந்தனாவாதிகளில் முதன்மையானவர் என்று கருதப்படுபவரும் இவர்தான். இவற்றிலெல்லாம் சாதாரணமான ஒருவராக அவர் இருந்திருக்கவில்லை. அனைத்திலும் மிகத்திறமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார். மொத்தத்தில் பல்துறை வித்தகர் (Polymath) அவர். 'டா வின்சி' என்று சொன்னாலே 'மோனா லிசா' (Mona Lisa) ஓவியம்தான் நமக்கு ஞாபகம் வரும். மோனா லிசா ஓவியம் வரைந்ததிலும் அவர் உலக சாதனையைத்தான் படைத்திருக்கிறார். உலகிலேயே மிகவும் பெறுமதிவாய்ந்த ஓவியமாக 'மோனா லிசா' ஓவியம் இன்றுவரை திகழ்கிறது. இந்த ஓவியம் விற்பனைக்கு இல்லாததால் அதன் இன்றைய விற்பனைப் பெறுமதி யாருக்கும் தெரியாது. ஆனால் 1962ம் ஆண்டு இந்த ஓவியத்தை நூறு மில்லியன் டாலர்களுக்குக் காப்புறுதி செய்திருந்தனர். அந்த வகையில் அதன் இன்றைய பெறுமதி ஒரு பில்லியன் டாலர்களுக்கு அதிகமாகவே இருக்கலாம் என்கிறார்கள். பிரான்ஸின் தலைநகரமான பாரிஸிலுள்ள 'லூவ்ரெ அருங்காட்சியகத்தில்' (Louvre Museum) பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது மோனா லிசா ஓவியம். ஒவ்வொரு வருடமும் ஆறு மில்லியன் மக்கள் இதை லூவ்ரெ அருங்காட்சியத்தில் கண்டுகளிக்கின்றனர். 'ஒரு ஓவியம் ஏன் இந்தளவுக்கு அதிமுக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?' என்று பார்த்தால் லியர்னாடோ டா வின்சியின் அசத்தலான திறமை அங்கு ஒளிந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது. ஆனால், அதற்குக் காரணம் அவரின் திறமை மட்டுமல்ல, அந்த ஓவியத்தில் அவர் ஒளித்து வைத்திருக்கும் மர்மமும்தான் என்று சொல்கிறார்கள்.
உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் எதுவெனப் பார்த்தால் அது டா வின்சியின் ஓவியமாக இருக்காது. இதுவரை உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம், இரண்டு ஆண்கள் ஒரு மேசையிலிருந்து சீட்டு விளையாட்டு விளையாடுவதுபோல உள்ள 'The Card Players' என்னும் ஓவியம்தான். இதைப் 'பௌல் செஷன்னெ' (Paul Cezanne) என்னும் ஓவியர் 'Post Impressionism' வகையில் வரைந்திருப்பார். இது இன்றைய நிலையில் 258 மில்லியன் டாலர்கள் பெறுமதியானது. ஆனால் டா வின்சியின் ஓவியங்கள் எதுவும் பொதுவெளியில் விற்பனைக்கு வருவதேயில்லை. அதனால் அவை உலகில் பெறுமதிவாய்ந்த ஓவியங்களாக மட்டும் கணிக்கப்படுகின்றன. உலகின் இரண்டாவது பெறுமதிவாய்ந்த ஓவியமும் டா வின்சியின் ஓவியம்தான். 'கடைசி இரவு உணவு' (The Last Supper) என்று சொல்லப்படும் இயேசுநாதர் தனது சீடர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்வதான ஓவியம் அது. அந்த ஓவியம் இத்தாலியின் மிலான் நகரில் உள்ள மரியா கோவிலின் (Santa Maria della Grazie, Milan-Italy) சுவரில் வரையப்பட்டிருக்கிறது. அதனால் அந்த ஓவியத்தை யாரும் வாங்க முடியாது. அதை எந்த அருங்காட்சியகத்திலும் கொண்டுசென்று வைக்கவும் முடியாது. அதனால் அது வரையப்பட்டிருக்கும் இடமே ஒரு அருங்காட்சியகம்போல இருக்கின்றது. உலகில் அதிகளவு விவாதங்களின் பேசுபடுபொருளாக்கப்பட்ட ஒரு ஓவியமது. அந்த ஓவியமும், தன்னுள்ளே பல இரகசியங்களையும், மர்மங்களையும் அடக்கியிருக்கின்றன என்கிறார்கள். டா வின்சி தனது ஓவியங்களில் பல இரகசியச் செய்திகளைக் குறியீடுகளாகவும், அடையாளங்களாகவும், மறைபொருட்களாகவும் மறைத்து வைத்தே வரைந்திருக்கிறார் என்னும் சந்தேகங்கள் உலகில் பலருக்கும் உண்டு. இவற்றை இனங்கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதிகளைச் செலவளித்த, செலவளிக்கும் புத்திஜிவிகளும் அதிகம் உண்டு.
மேலே சொல்லப்பட்ட டா வின்சியின் இரண்டு ஓவியங்களையும் ஒரு சிலரைத்தவிர உலகில் உள்ள மக்களனைவரும் மிகச்சமீப காலம்வரை புராதன ஓவியங்களென்ற வகையிலேயே பார்த்து வந்தனர். ஆனால் 'டான் பிரௌன்' (Dan Brown) என்ற எழுத்தாளர் எழுதிய 'The Da Vinci Code' என்னும் நாவல் வெளிவந்த பின்னர், இந்த ஓவியங்களை மக்கள் பார்க்கும் தன்மையையே மாறிவிட்டது எனலாம். டான் பிரௌன் எழுதிய நான்காவது நாவல்தான் இந்த 'டா வின்சி கோட்' என்பது. நாவல் வெளிவந்ததும் மதபீடங்களினாலும், மத நம்பிக்கையாளர்களாலும் பலமாக எதிர்ப்புக்குள்ளாகியது. பலவிதமாக அது விமர்சனம் செய்யப்பட்டது. இந்த விமர்சனங்களும், எதிர்ப்புக்களுமே நாவலை 'பெஸ்ட் செல்லர்' என்னும் தரத்துக்குக் கொண்டு சென்றது. போதாதற்கு, நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் உலகின் நாடுகள் அனைத்திலும் பரவலாக அந்தத் திரைபடத்தை வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று எதிர்ப்புக்குரல் எழுந்தது. வழமைபோல அதுவே அந்தப் படத்திற்கான விளம்பரமுமாகியது. உலகமெங்கும் வசூலை அள்ளிக் குவித்த படமாக அது மாறியது. ஒரு பக்கம் நாவலாகவும், மறுபக்கம் திரைப்படமாகவும் வெளிவந்த 'டா வின்சி கோட்' பெரும்பான்மை மக்களுக்கு டா வின்சியின் ஓவியங்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஓவியங்களில் ஏதோ இருக்கின்றன என்று நம்பவைத்தது.
'உண்மையிலேயே 'டா வின்சி' தனது ஓவியங்களில் மர்மக் குறியீடுகளை ஒளித்து வைத்துத்தான் வரைந்தாரா?' என்று பார்த்தால், ஆமென்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் டா வின்சியின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு மர்மத்தை வெளிப்படுத்துவது போலவே அமைந்திருக்கின்றன. ஓவியங்கள் மட்டுமல்ல, அவரால் உருவாக்கப்பட்ட அனைத்துமே மர்மங்களைக் கொண்டவையென்றே நம்ப வேண்டியிருக்கிறது. அவையே 'டூரின் துணியில்கூட இவர்தான் வரைந்திருப்பார்' என்னும் சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் டா வின்சி பற்றிய மர்மங்களைத் தொடர்ச்சியாக நாம் பார்க்கப் போகின்றோம். அவை நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தையே கொடுக்கும். "டூரின் துணிபற்றிச் சொல்வதென்றுவிட்டு இவர் டா வின்சி பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறாரே" என்று கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் அறிந்தேயிருகாத பல மர்மங்கள் மெல்ல மெல்ல வெளிவருவதை நீங்களே அவதானிப்பீர்கள். டா வின்சி பற்றி முழுமையாகச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னர், டூரின் துணியை டா வின்சிதான் உருவாக்கியிருப்பார் என்ற சந்தேக முடிச்சு எங்கே போடப்பட்டது என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்.
லியர்னாடோ டா வின்சி தன் படைப்புகள் அனைத்தையும், தினமும் குறிப்பேடுகளில் குறித்துக்கொண்டு வரும் பழக்கமுள்ளவர். அந்த வகையில் அவர் மொத்தமாக 13000 பக்கங்களைக் கொண்ட குறிப்புப் புத்தகங்களை உருவாக்கியிருந்தார். அவை அனைத்திலும், அவரது கண்டுபிடிப்புகள், அவர் வரைந்த ஓவியங்கள்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அவர்குறித்து வைத்திருந்த எழுத்துகளில் பெரியதொரு ஆச்சரியம் காணப்பட்டது. ஆரம்பத்தில் அந்தக் குறிப்புகளைக் கண்டெடுத்தவர்கள், அவற்றைப் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அது என்ன விதமான எழுத்து என்றே தெரியவில்லை. ஆனால் போகப் போக அவை என்னவிதமாக எழுதப்பட்டிருந்தன என்று புரிந்தது. தனது குறிப்புகள் அனைத்தையும் டா வின்சி கண்ணாடியொன்றில் தெரியும் எதிர்மறை விம்பம்போல எழுதியிருந்தார். அவரது 13000 பக்கங்களில் பெரும்பான்மையானவை எதிர்மறை விம்ப எழுத்தாகவே காணப்பட்டன. அதாவது அவர் எழுதியவற்றை நீங்கள் ஒரு நிலைக்கண்ணாடிக்கு முன்னால் கொண்டுசென்று பிடித்தால், அதில் தெரியும் விம்பம்தான் நமது சாதாரண எழுத்துப்போலக் காணப்படும். வழக்கமாக வலது கைப் பழக்கமுள்ள நாம் ஒரு காகிதத்தில் எழுதும்போது, இடமிருந்து வலமாக எழுதிக்கொண்டு வருவோம். ஆனால் டா வின்சியோ இடது கைப் பழக்கமுள்ளவர். அதனால் அவர் வலமிருந்து இடமாகக் கண்ணாடி விம்பம் போன்ற எழுத்தை எழுதி வந்திருக்கிறார். இது எவ்வளவு கடுமையானது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படியே எழுதியெழுதி அவருக்குப் பழக்கமாகியதோ என்னவோ, அவர் எழுதிய அனைத்துமே கண்ணாடி விம்ப எழுத்துக்களாகவேயிருந்தன. 'இவர் ஏன் இப்படி எழுதிக்கொண்டு வந்தார்?' என்ற கேள்விக்கு, அவர் தனது எழுத்துகளையும், குறிப்புகளையும் மிகமிக இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார் என்ற காரணம்தான் பதிலாகின்றது. அவர் யாரிடமிருந்து தன் இரகசியங்களைக் காப்பாற்ற விரும்பினார் என்பதெல்லாம் சந்தேகங்கள்தான். அவரின் அரிய கண்டுபிடிப்புகளையும், யோசனைகளையும் மற்றவர்கள் திருடிவிடலாமென அவர் பயந்திருப்பாரெனச் சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ கத்தோலிக்க மதபீடத்துக்குப் பயந்தே அவர் தன் எழுத்துகளை இப்படி மறைத்து எழுதினாரென்று சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்று உண்மையாகவிருக்கலாம். ஆனால், அவர் கத்தோலிக்க மதபீடங்களுக்குப் பயந்துதான் இதைச் செய்தாரென நாம் எடுத்துக் கொண்டால், அவர்களிடமிருந்து எதை மறைக்க அவர் இப்படியெல்லாம் செய்தாரென்ற கேள்வி எழுகிறது. ஒரு சில பக்கங்களைப் பொழுதுபோக்காக எதிர்மறை விம்பமாகக் குறித்திருந்தால் பெரிதாக அலட்ட்டிக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், இவர் பெரும்பான்மையானவற்றை அப்படி எழுதி வைத்திருப்பதுதான் குழப்பதைக் கொடுக்கிறது. எது எப்படியோ இப்படிக் கண்ணாடி விம்ப எழுத்துகளை இவர் எழுதுவதை வழமையாகக் கொண்டிருந்தது வேறொரு விசயத்தில் சந்தேக வித்தைப் போட்டதென்னவோ உண்மை.
"டா வின்சி எதிர்மறை விம்பமாக எழுதியது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்களை ஏற்படுத்தியதா?" இப்போது இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். டூரின் துணியில் காணப்பட்ட உருவமும் எதிர்மறை விம்பமாகவே வரையப்பட்டதை நாம் முன்னர் அவதானித்திருந்தோமல்லவா? அதுபோலச் சித்திரத்திலும் எதிர்மறை விம்பத்தை உருவாக்கும் யோசனை இவருக்கேன் இருந்திருக்கக் கூடாது? அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்குமே இப்படி எதிர்மறையாக எழுதுவதோ, வரைவதோ பழக்கமேயில்லாத நிலையில் 'டா வின்சி' மட்டும் அப்படியொரு விசயத்தைச் செய்திருக்கிறார். அதனால் அவரே டூரின் துணிக்கும் காரணமாக இருக்கலாமல்லவா? "அதெப்படி, அவரின் ஏனைய ஓவியங்களெல்லாம் நேராகத்தானே அவரால் வரையப்பட்டிருக்கின்றன. அவர் ஏன் டூரின் துணியை மட்டும் எதிர்மறை விம்பமாக வரைய வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வியில் நியாயமும் இருக்கிறது. ஆனால், ஒரு பேச்சுக்கு இப்படி நடந்திருக்கலாமாவெனப் பாருங்கள்.
இயேசுநாதரின் கல்லறைத் துணியென்று, ஒரு துணி டூரினிலிருந்து சிலரின் கைகளில் கிடைக்கின்றது. அவர்களுக்கு அது இயேசுநாதருடையதுதானென்று நிரூபிப்பதில் சிக்கலேற்படுகின்றது. அதனால் அவர்கள் லியர்னாடோ டா வின்சியின் உதவியை நாடுகின்றர். முன்னர் வெரோனிக்காவின் முக்காட்டில் இயேசுநாதரின் முகம் பதிந்த சம்பவம் அவர்களின் மனதில் நிழலாடுகின்றது. அதனால் அது போன்று ஒரு உருவத்தை டா வின்சி வரைந்து தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றனர். அப்போது இயேசுவின் முகம் மற்றும் உடல் அனைத்தும் அந்தத் துணியில் எப்படி ஏற்பட்டதென்ற காரணத்தைக் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அந்தத் துணியைச் சுற்றுவதற்கு முன்னரே இயேசுநாதர் இறந்துவிட்டிருந்தார். அதாவது அவர் மரணித்த பின்னர்தான் அந்தத் துணி அவரின் மேல் சுற்றிக் கட்டப்பட்டது. அத்துடன், அந்தத் துணியைக் கட்டுவதற்கு முன்னர், இயேசுநாதரின் முகத்தை வேறொரு சிறிய சதுரத் துணியொன்றினால் மூடியிருந்தார்கள். ஆனால், அந்தத் துணியில் அவரின் முகம் பதிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அந்தச் சதுரத் துணிக்கும் மேலே சுற்றிக் கட்டிய டூரின் துணியில் உருவம் வர வேண்டும். அதற்குரிய காரணமும் சொல்லப்பட வேண்டும். அதனால், 'டா வின்சி' இப்படிச் சிந்தித்தார். அதாவது, இயேசுநாதர் மரணித்த பின்னர் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தாரல்லவா? அப்படி அவர் உயிர்த்தெழும்போது, அவரது பரிசுத்தமான உயிர் அவரது உடலினுள் புகுந்து கொள்ளுமல்லவா? இயேசுநாதர் உயிர்த்தெழும்போது அவரது உயிர் அவரது உடலினுள் புகுந்து கொண்ட சமயத்தில் அந்த உருவம் டூரின் துணியில் பதிவாகியிருக்கிறது. ஒளிமிகுந்த அவரது பிரகாசமான உயிர் உடலினுள் புகும்போது புகைப்படம் பிடித்ததுபோல உருவம் அந்தத் துணியில் பதிந்தது. அதன்படி டா வின்சி அந்தத் துணியில் இயேசுநாதரின் உருவத்தை எதிர்மறை விம்பமாக வரைந்து கொடுத்தார். எல்லாமே சரியாகப் பொருந்துகிறது அல்லவா? இவையெல்லாம் என் கருத்துகளல்ல. டா வின்சிதான் இந்தத் துணியில் வரைந்தார் என்று சொல்பவர்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும் கருத்துகள் இவை.
இப்போது நமக்கு, "இந்த அளவுக்குச் சிந்திப்பதற்கு டா வின்சியால் நவீன அறிவியலைப் புரிந்துகொண்டிருக்க முடியுமா?" என்ற கேள்வி எழலாம். ஆனால் டா வின்சிக்கு நவீன அறிவியலில் எவையெவை தெரிந்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்தால் இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கவே மாட்டீர்கள். அவற்றை அறிந்தால் திகைத்தே போவீர்கள். அதன்பின்னர் அவர்தான் இப்படியெல்லாம் சிந்தித்து வரைந்திருப்பாரென்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பிப்பிர்கள்.
அப்படி என்ன நவீன அறிவியலை டா வின்சி புரிந்து வைத்திருந்தார் என்பதை அடுத்த பகுதியில் நாம் விரிவாகப் பார்க்கலாம். அத்துடன் டா வின்சியின் தொடர்ச்சியாக மிரட்டும் மர்மங்களையும் பார்க்கலாம்.
(தொடரும்)
- ராஜ்சிவா -
No comments:
Post a Comment