Saturday, February 14, 2015

Lama- Mummy - Profesor Ganhugiyn Purevbata



இப்போது நான் சொல்லப் போகும் தகவல் உண்மையானதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நாம் போய்விட வேண்டியதில்லை. அறிவியல் தாண்டிய விதிவிலக்கான அதிசயங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கும் ஏதோவொரு வடிவில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். நிச்சயம் இருக்கும். அதைக் கணிக்குமளவுக்கு நம்மிடம் அறிவியல் வளராமல் இருக்கலாம். இந்தத் தகவலும், சாத்தியமானதா? உண்மையானதா? என்று தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமான உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிசயம்தான். அப்படி இல்லாத பட்சத்தில் தற்போது வெளிவந்த ஒரு தகவலாக மட்டும் இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதுசரி…. நான் ஏன் இவ்வளவு சுற்றிவளைத்துப் பேசுகிறேன்…..
காரணம் இருக்கிறது.
விசயம் இதுதான்………
மொங்கோலிய நாட்டின் தலைநகரான 'உளான் படோர்’ (Ulan Bator) இல், 200 வருடங்கள் பழமையான உடலொன்று (Mummy) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவொரு புத்தத் துறவியின உடல். இந்த உடலில் என்ன விசேசம் தெரியுமா?
புத்தத் துறவி பத்மாசனம் (lotus position) இட்டபடி, தியானம் செய்யும் நிலையில், அப்படியே உறைந்த உடலுடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, கால்கள் சப்பனமிட்டபடியும், கைகள் மடியில் குறுக்காக வைத்திருக்கும் நிலையிலும் அந்த உடல் காணப்படுகிறது. இதில் சொல்லப்படும் ஆச்சரியமான விசயம்தான் நான் மேலே அந்த அளவுக்கு எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது.
அந்தத் துறவி (Lama) தியான நிலையில் குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதால், அவர் இன்னும் உயிரோடு இருக்கலாமென்று பலமாகச் சந்தேகிக்கிறார்கள். இவர் உயிருடன் இருக்கலாமென்று சொல்பவர் சாதாரணமானவர் இல்லை. மொங்கோலியாவின் புத்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான Profesor Ganhugiyn Purevbata என்பவரே சொல்லியிருக்கிறார். புத்த லாமாக்கள் இப்படிப் பல காலங்களாக மூச்சையடக்கித் தியானத்தில் இருப்பது நிதர்சனமானது என்கிறார் அவர். பேராசிரியர் சொல்வது இதுதான், "Lama is sitting in the lotus position vajra, the left hand is opened, and the right hand symbolises of the preaching Sutra. This is a sign that the Lama is not dead, but is in a very deep meditation according to the ancient tradition of Buddhist lamas”.
இவர் இப்போதும் உயிருடன் இருக்கலாம் என்பதை யாரும் நம்பப் போவதில்லை. நான்கூட. ஆனால் தியானங்களின் மூலம் செய்யமுடியுமென்று காட்சிப்படுத்தப்பட்ட சில செயல்கள் இந்த அவநம்பிக்கையை தகர்த்தாலும் தகர்க்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு குகையில் இந்தப் புத்த லாமா அமர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். இவரின் உடனல் இப்போது பரிசோதனைகளுக்குட்பட்டு வருகிறது.
பிற்குறிப்பு: இதை ஒரு மூடநம்பிக்கையைப் பரப்பும் ஒரு பதிவாகப் பார்க்காமல், ஒரு தகவலாகவே பார்க்கவும்.
-ராஜ்சிவா-
நன்றி: தியாகராஜன் (B.Thiyagarajan).

No comments:

Post a Comment