Thursday, April 14, 2016

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?


தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]
விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]
அனுசம் = ஆனி
பூராடம் - பூராடி = ஆடி
சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]
பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]
அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]
கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]
மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]
மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]
உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு.

முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும்

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழ் வருட பிறப்பு ஒரு கண்ணோட்டம்.

இன்று நாம் கலியுக மன்மத வருடத்தை கடந்து  கலியுக துன்முகி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5118வது வருடம். 

தமிழர்களின் ஜோதிட கணிப்புப்படி, 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் பெரும்பாலும் ஆண்டுகளை பெரிதாக கருதுவது கிடையாது. இந்த 60 வருடங்களையும் 3ஆக  பிரித்து, (20 வருடங்கள்)
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.

60 வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு.
1. பிரபவ  - (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம - (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி - (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய 
28. ஐய - (2014-15) 
29. மன்மத - (2015-16) 
30. துன்முகி (2016-17) 
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி - (2020-21)
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண - (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள 
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி - (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 
மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2  உண்டு. 
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.
 நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம்.  நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள். 
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
 கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம்  = --------
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.

கிருத யுகம் 4*432000= 17,28,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.

இவை அனைத்தும் தமிழ் புத்தாண்டின் சுருக்கமான விளக்கமே.

தமிழ் வருடப்பிறப்பு
==================
இன்று சுழல் ஆண்டுகளில் மன்மத ஆண்டு முடிந்து, துன்முகி ஆண்டு பிறக்கிறது. தொடர் ஆண்டு முறையில், கலியுக ஆண்டு 5118 பிறக்கிறது. தமிழ் வருடப்பிறப்பை பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

வருடையில் தொடங்குகிறது புது வருடம்...
=====================================
நமது வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை பன்னிரு இராசிகளாக பிரித்தனர் நம் முன்னோர். அந்த பன்னிரு இராசிகளில் முதல் இராசி மேடம். இதனை வருடை இராசி என்று சங்கத்தமிழ் நூலான பரிபாடல் கூறுகிறது. வருடையில் ஆண்டு பிறப்பதால் வருடைப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் வருடப்பிறப்பானது...

வருடப்பிறப்புக்கு என்ன செய்வது?
============================
ஆண்டின் முதல் நாளான இன்று ஒரு தாம்பூலத்தட்டில், தமிழர்களின் முக்கனிகளான மா,பலா,வாழை ஆகியவற்றுடன் வெற்றிலைப்பாக்கு, தேங்காய், பூ, பணம், அரிசி,பருப்பு ஆகியவற்றை ஒரு நிலைக்கண்ணாடியின் முன் வைத்துவிட வேண்டும்.  புத்தாண்டு அன்று இதன் முன் கண் விழிக்க வேண்டும். அப்படி செய்வதனால் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பிறகு மருந்துநீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்று பஞ்சாங்கம் படிப்பதை கேட்க வேண்டும்.

பெரியோரிடம் ஆசி வாங்கி, தான தருமங்கள் செய்ய வேண்டும்.

வீட்டில் பொங்கல் வைத்து, மாங்காய் பச்சடி, நீர்மோர்,பருப்பு வடை ஆகியவற்றை செய்து படைக்க வேண்டும்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்

கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்

புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்

இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்

நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்

1 comment: