Sunday, December 4, 2016

அறிவியல் பார்வையில் ராஜ்சிவா வின் வணக்கங்கள்



கழுத்தில் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அறுவை சிறிதோ, பெரிதோ நலமாக இருக்கிறேன். கவலைப்பட எதுவுமில்லை. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உங்கள் அன்றாட வாழ்க்கையின் நிகழ்விகளில் சிறு துரும்பைக்கூட இந்தப் பக்கமோ அந்தப்பக்கமோ மாற்றி வைத்துவிடப் போவதில்லை. எந்தவொரு ஐநூறு ரூபாய் நோட்டையும் மாற்றித் தரப்போவதுமில்லை. அதனால், அதில் சுவாரஷ்யமான செய்தி எதுவுமில்லை. ஆனால், நான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதால் ஆச்சரியமான தகவலொன்றைத் தெரிந்து கொண்டேன். தகவல் என்று வந்துவிட்டால், 'நான் சும்மாவே இருப்பதில்லை' என்று உங்களுக்குத்தான் தெரியுமே! 

ஆபரேசன் முடிந்த மறுதினம், நான் இருந்த அறைக்கு பிசியோதெரப்பிஸ்ட் ஒருவர் வந்தார். ஆபரேசன் செய்யப்பட்ட என் கழுத்தின் முள்ளந்தண்டுகள் பலமடைவதற்கும், தலையின் பின் பகுதியிலமைந்த, ‘மெடுல்லா ஒப்லாங்கட்டாவுக்குச்’ (Medulla Oblongatta) செல்லும் அனைத்து நரம்புகளும் மீட்டப்படுவதற்கும், பயிற்சியொன்றைத் தினமும் நான் செய்துவர வேண்டும் என்று கூறி, அதை எனக்குச் சொல்லித் தரப்போவதாகவும சொன்னார். இந்த ஒப்லாங்கட்டாவை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆம்! அதேதான். "என்னாச்சு......?".

அந்த பிசியோதெரப்பிஸ்ட் ஐந்துவிதமான பயிற்சிகளைச் சொல்லித் தந்துவிட்டு, ஆறாவதாக, அந்த முக்கியமான பயிற்சியைச் சொல்லித்தர ஆரம்பித்தார். "இதுதான் சமீபத்தில் மிகச்சிறந்த பயிற்சியாக ஜேர்மனில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் செய்ய வேண்டும். அத்துடன் காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்யவேண்டும்“ என்றும் சொல்லி வைத்தார்.

“கண்களை மூடி, ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கச் சொன்னார். இரண்டு கைகளையும் நெஞ்சின் இரு பக்கத்திற்கும் நன்றாக நீட்டச் சொன்னார். தோள்கள் நிமிர்ந்த நிலையில் இருக்க, முழங்கைகளை மெல்ல மடித்து இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரச் சொன்னார். விரல்கள் நிமிர்ந்த நிலையில், உள்ளங் கைகளை ஒன்றுடன் ஒன்று முட்டும்படி இறுக்கமாய் அழுத்தி வைத்திருக்கச் சொன்னார். "உங்களால் இப்போது தோள்கள், கைகள். பின்கழுத்துப் போன்ற பகுதிகளில் ஒரு இறுக்கத்தை உணர முடிகிறதா?" எனக் கேட்டார். நானும், "ஆம்!" என்றேன். "இப்படி இருக்கும் போது உங்கள் கைத்தசைகள் கொடுக்கும் அழுத்தத்தால், நரம்புகள் மீட்டப்பட்டு, முள்ளந்தண்டு ஆரோக்கியமாவதோடு, ஞாபகசக்தியும் நெருடப்படுகிறது” என்றார்.

மெதுவாக மூச்சை வெளியே விட்ட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தேன். நான் அவரையும், அவர் என்னையும் கைகூப்பி வணக்கம் செய்தபடி நின்றுகொண்டிருந்தோம்.

அவர் சொல்லித் தந்த அந்த அற்புதமான பயிற்சி வேறொன்றுமில்லை. காலம் காலமாக நாம் செய்யும் வணக்க முறைதான். 

-ராஜ்சிவா-

No comments:

Post a Comment