Wednesday, December 21, 2016

ஒருவர் இறந்தவுடன் அவரைப்பற்றி நல்லவற்றைமட்டும் பேசும் நமது பண்பாட்டு ரகசியத்தின் பின்னணி என்ன?

நமக்கெல்லாம் மிகப் பழக்கப்பட்ட ஒன்றுதான், கிராமத்திலோ, நகரத்திலோ, உள்நாட்டுத் தலைவரோ வெளிநாட்டுத் தலைவரோ, ஏழையோ, பணக்காரனோ ஆனால் ஒருவர் இறந்த பின்பு அவரைப்பற்றி அனைவரும் நல்ல விதமாகவே பேசுகின்றோம், அவர் செய்த நல்லவைகளையே மேற்கோள் காட்டுகின்றோம். இது இந்திய கலாச்சார பண்பாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றது அதுவும் தமிழ் சமூகம் சார்ந்த கலாச்சாரத்தில் சற்று அதிகமாகவே உண்டு என்றால் மிகையில்லை. நாம் அவருடன் நேருக்கு நேர் கருத்து வேறுபாட்டுடன் இருந்திருந்திருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரைப்பற்றி நல்லவிதமாகவே பேசுமளவுக்கு நாமெல்லாம் நம் முன்னோர்களால் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளோம். எதற்காக நம் முன்னோர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து வைத்தார்கள்?

*ஒருவர் இறந்தவுடன் என்ன நடக்கின்றது?*

ஒருவருக்கு உயிர் போய்விட்டது என்று இன்றைய மருத்துவ நியதிப்படி கூறவேண்டுமானால், இருதயம் செயல்பாட்டில் இருந்து நின்று விட்டது என்று அர்த்தம். அதேநேரத்தில்,  சித்தர்களின் கோட்பாடுகள்படி அவருக்குப் பிராணவாயு உடலின் உள்ள அணுக்களுக்குச் செல்லவில்லை என்று அர்த்தம். அப்படி பிராணன் ஒருவரின் உடலில் உள்ள அணுக்களுக்குச் செல்ல முடியவில்லையென்றால் அவருடைய தூய்மையான ஆத்மா அந்த உடலைவிட்டுப் பிரிந்துவிடும். அப்படிப் பிரியும்போது இறந்தவர் தன் வாழ்நாளில் *மனத்தால் நினைத்த எண்ணங்களும், சொல் மற்றும் செயல்களும் (இந்த மூன்றுமே வினைகள் அல்லது கர்மாவென்று சொல்லப்படுகின்றது) அந்த ஆத்மாவுடன் அதீத வீரியத்துடன் ஓட்டிக்கொண்டே இருக்கும் அல்லது அந்த உடலைப் பயன்படுத்த நினைக்கும், ஆனால் முடியாது.  இது அந்த இறந்தவருடைய உடல் சிதையும் வரை நடக்கும். எந்த ஒரு நவீன மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாமல், அப்படி  ஒரு உடல் சிதைய குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும், அதுவே உடலை எரித்துவிட்டால் எரிக்கும் வரை  ஆத்மா முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்த ஆத்மாவால் அந்தப் பழைய உடலைப் பயன்படுத்த முடியாது. இதைத்தான் சித்தர் சிவவாக்கியர், தமது சிவவாக்கியம் என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே! 
                                                    - சிவவாக்கியம் 48


*இறந்தவர் பற்றி நல்லவற்றையே ஏன் பேசவேண்டும்?*

தூய்மையான ஆத்மா அதனுடன் ஒட்டி இருக்கும் வினைகளைச் செயல்படுத்த ஏதோ ஒரு உடல் தேவைப்படும். அந்த ஆத்மா இறந்தவுடன் அதனுடைய பழைய உடலைப் பயன்படுத்த முடியாது என்கின்றபோது, அந்த நபர் உயிருடன் இருந்தபோது பழக்கப்பட்ட வேறொரு நபருடன் அந்த ஆத்மா தொடர்பு கொள்ளமுயலும். ஆனால், இன்னொரு உடலை அந்த ஆத்மா பயன்படுத்தவேண்டுமானால் அந்த ஆத்மா பற்றி வேறொருவர் மனத்தாலாவது நினைக்கவேண்டும். ஏனெனில் *ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள ஒரே வாசல் மனம்தான்.* உயிரோடிருக்கும் ஒருவர் இறந்தவர் பற்றிய என்ன மாதிரியான எண்ணங்களை மனத்தால் நினைக்கின்றாரோ அந்த நிலையில் உள்ள வினைப்பதிவுகளை அந்த இறந்தவருடைய ஆத்மா உயிரோடிருப்பவருக்குச் செலுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனதாலும், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நல்வினை தீவினை என்கின்ற இருவினைகளால் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இப்படி நம் மனம் எதில் நாட்டம் கொள்கின்றதோ அந்த அலைவரிசையில் யாரெல்லாம் தங்களின் எண்ணங்களை வைத்துள்ளார்களோ அவர்களை இந்தப் பிரபஞ்சம் இணைக்கும், அதுவே இயற்கையின் விதி. இந்த விதியின்படி, அந்த இறந்தவரின் ஆத்மா உயிரோடிருக்கும் ஒருவரது எண்ணத்தில் அதே அலைவரிசை கொண்ட தனது வினைப்பதிவுகளை கொண்டு சேர்க்கும். ஆகவே  உயிரோடிருப்பவர், இறந்தவர் பற்றி  நல்ல விதமாகப் பேசாவிட்டால் அல்லது இறந்தவர் பற்றி உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையில் பேசினாலும் உயிரோடிருப்பவரின் தீவிரமான உணர்ச்சியின் அலைவரிசையில் உள்ள இறந்தவரின் வினைகளை இறந்தவர் ஆத்மா கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்.   உயிரோடிருக்கும் ஒருவர், இறந்தவர் பற்றிய நல்ல எண்ணங்களைக்   கொண்டிருந்தாலோ அல்லது நல்ல விதமாக அவரைப்பற்றிப் பேசினாலோ அந்த ஆத்மா உயிரோடிருப்பவருக்கு உதவ ஆரம்பிக்கும். இதனால் இரண்டு மடங்கு நன்மையை உயிரோடிருப்பவர் பெறுவார்., இதனாலேயே,  நமது கலாச்சாரத்தில் ஒருவர் இறந்தபின்பு அவர் *எப்படிப்பட்டவராக இருந்தாலும்* நல்ல விதமாகவே பேசவேண்டும் என்று நம்மைப் பழக்கப்படுத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். 

ஏனெனில் மனிதனாக பிறப்பது என்பது கிடைத்தற்கரிய பிறவி, இதைத்தான் சித்தர் அவ்வைத்தாய் இப்படி குறிப்பிடுகின்றார்.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!


ஆகவே,  நல்ல எண்ணங்களோடு என்றைக்கும் நாமிருந்து நமக்கும் இந்த உலகத்திற்கும் நன்மையே செய்வோம். நடப்பதெல்லாம் நன்மைக்கே !

மீண்டும் வேறொரு சித்தர் வாழ்வியல் அறிவியல் விளக்கத்தோடு சந்திக்கும்வரை விடைபெறுகின்றோம்.

நன்றி  வணக்கம்
யோகி ராஜாபாபு

No comments:

Post a Comment