Saturday, December 14, 2013

Blood Match Important for couples ரத்தப் பொருத்தமும் அவசியம்


  ‘‘கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும். பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்...’’ எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.
‘‘மனைவிக்கு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், கணவனுக்கு பாசிட்டிவாகவும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அதற்கு முன் கருக்கலைப்பு நடந்திருந்தால், அடுத்து பிறக்கும் குழந்தை இரண்டாவது கருவாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு கொண்ட அம்மாவுக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தை நிச்சயம் பாதிக்கப்படும்.
முதல் கரு உருவாகும் போதே, குழந்தையின் ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப் பிரிவுக்கு எதிராக அம்மாவின் ரத்த செல்கள் கருவுக்கு எதிரான சில எதிர் உயிரிகளை (ஆன்ட்டிபாடி) உருவாக்கும். பிரசவ நேரத்தில் அம்மாவின் ரத்தமும், குழந்தையின் ரத்தமும் ஒன்றாகக் கலப்பதால், முதல் குழந்தை பிரச்னை இல்லாமல் பத்திரமாக வெளியே வந்து விடும்.
ஆனால், அம்மாவின் உடலில் உருவான எதிர் ரத்த செல்கள் எத்தனை வருடங்களானாலும் அப்படியே அழியாமலிருக்கும். அடுத்த குழந்தை உருவாகும் போது, அது உடனடியாக கருவைத் தாக்கும். குறைப்பிரசவம் நடக்கவோ, குழந்தை ரத்தசோகையால் பாதிக்கப்படவோ, ஈரல் வீக்கம் தாக்கவோ வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் ரத்த செல்கள் அழிக்கப்பட்டு, அது மூளை வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைக்கு மஞ்சள் காமாலையும் தாக்கலாம். உடல் வீங்கலாம். கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால், இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். தாய்க்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு எனத் தெரிந்தால், முதல் குழந்தை பிறந்த அல்லது முதல் கருக்கலைப்பு நிகழ்ந்த 72 மணி நேரத்துக்குள் ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட வேண்டும். அது அடுத்த குழந்தை பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும்.
திருமணமாகாத ஒரு ஆணுக்கும், திருமண வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் ஆர்.ஹெச் நெகட்டிவ் பிரிவு ரத்தம் தேவை. யாருக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற கேள்வி வந்தால், முதலில் பெண்ணுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். வேறு வழியின்றி, அவளுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தம் ஏற்றினால், அந்த நேரத்தில் அவளது உயிர் காப்பாற்றப்படலாம்.
ஆனால், பின்னாளில் அவள் கருத்தரிக்கும்போது, முன்பு ஏற்றப்பட்ட ரத்தப் பிரிவினால் கரு பாதிக்கப்படும். அதுவே ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தம் ஏற்றுவதால் எந்தப் பாதிப்பும் வந்து விடாது. திருமணப் பொருத்தங்கள் பார்க்கும் போதே, இருவரின் ரத்தப் பிரிவுகளையும் தெரிந்து கொண்டால் முதல் குழந்தை உருவாகும்போதே, அடுத்த குழந்தையைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்...’’ என்கிறார் டாக்டர் மகேஸ்வரி.

No comments:

Post a Comment