Friday, February 8, 2013

ஜேக்கப் இறந்தது பலரையும் உலுக்கி இருக்கலாம்




மருத்துவர் சிவராமன்:-

தமிழ்ப் பாரம்பரிய சமையல் கலையை ஒரு தவம்போல் நேசித்த செஃப் ஜேக்கப் இறந்தது பலரையும் உலுக்கி இருக்கலாம். அதில், எல்லோரையும் அதிர்ச்சி அடையவைத்தது அவருடைய வயது... 38. தன் உடலைக் கச்சிதமாகக் கவனித்துக்கொண்டவர்தான் ஜேக்கப். ஆனாலும், எப்படி மாரடைப்பு? வேலையை அளவுக்கு அதிகமாக அவர் நேசித்ததே அவருக்கு எமன் ஆயிற்று என்கிறார்கள் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.

உலகெங்கும் இப்போது 30-40 வயதில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது சகஜமாகிவிட்டது. அலங்காரப் பதவிகளாலும், சம்பள உயர்வுகளாலும் எல்லோரையும் போட்டியாளர்களாக்கி ஓடவைக்கிறது முதலாளித்துவம். வேலை... வேலை என்று ஓடுகிறோம் மூச்சுத் திணற. ஒரு கட்டத்தில் குடும்பத்தையே கவனிக்க முடியாத சூழலை வேலை ஏற்படுத்தும்போது, மன அழுத்தமும் நெருக்கடிகளும் சூழ்கின்றன. மூச்சுத் திணறலோடு மூச்சடைப்பும் சேரும்போது கதை முடிந்துவிடுகிறது. ஒரே ஓர் உண்மையை மனதில் வையுங்கள் தோழர்களே... வாழ்வதற்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை இல்லை!

தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஒவ்வொரு சீஸனில் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் சமயம், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம் என்கிறது சித்த மருத்துவ மலை வாகட நூல்கள். நியூஸிலாந்தில் உள்ள மனுக்கா தேன், உலகப் பிரசித்தியான தேன். 100 கிராம் 3,000 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படும் இந்தத் தேன் எங்கள் நாட்டின் அமிழ்தம் என்கிறது அந்த அரசு.

எல்லாம் சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?

ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி அதாவது 10 கிராம் தேன் எடுத்துக்கொள்ளலாம். தனியாகவும் சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லியோடோ, இஞ்சியோடோ இணைத்தும் சாப்பிடலாம். ஆனால், தண்ணீரில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமானவை அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வெப்ப நிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைக்கும். மற்றபடி, தேன் அற்புதம்!

'சரி, எனக்கு சர்க்கரை வியாதி... நான் தேன் சாப்பிடலாமா?’ என்று கேட்பீர்கள் என்றால், வேண்டாம். கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பினும், அதன் இனிப்பு அளவான கிளைசமிக் லோட் சில வகை தேனில் அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே, சர்க்கரை நோய்க்காரர்களுக்கு ஒரு செய்தி. தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ... எதுவாக இருந்தாலும் சரி... சர்க்கரை வியாதி வந்தால், கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இனிப்பு என்றாலே, தேனும் பனை வெல்லமும்தான் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சின்ன வயதில் இருந்தே சொல்லி வளருங் கள்!

No comments:

Post a Comment