Saturday, February 2, 2013

தமிழா என் மனக்குறையை உன்னிடம் சொல்கிறேன்






அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்போன தமிழா என் மனக்குறையை உன்னிடம் சொல்கிறேன், மனதில் பதியவைக்காவிட்டாலும் பரவில்லை, ஒருமுறையாவது படித்துவிடு போதும். நம் பெற்றோர் செய்த தவறை நாம் மீண்டும் செய்யவேண்டாம், நமது பெற்றோர் செய்ததவறு அவர்கள் காலத்தில் அவர்களுக்கே தெரியாமல் செய்துவிட்டார்கள். ஆனால் நாமும் இவளவு படித்த பின்பும் உலகை புரிந்து வைத்த பின்பும் நாம் செய்வது மிகப்பெரிய தவறே. நமது பெற்றோர்கள் செய்த தவறை நாம் மீண்டும் செய்யகூடாது என்ற காரணத்தினால்தான் நம்மை முடிந்த அளவுக்கு படிக்கவைத்தார்கள். நமக்கு பகுத்து ஆராயும் திறனை வளர்த்தார்கள். ஆனால் அவர்களின் தவறை விட நாம் மிக கேவலமான தவறை செய்கின்றோம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போடுகிறோம், அப்படி என்ன தவறு அவர்கள் (நம் பெற்றோர்கள்) செய்தார்கள், நாம் என்ன தவறை செய்தோம் என்று கேட்கிறீர்களா? இப்படி கேட்க நினைத்தால் நீங்கள் பகுத்து ஆராயும் திறன் உடையவர் தான், உங்கள் தவறை நீங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்வீர்கள்

சரி விசயத்திற்கு வருவோம், நம்மை விட நம் பெற்றோர்கள் (ஏன் அவர்களின் பெற்றோர்களும் தான்) புரட்சியாளர்கள் தான், ஆனால் நாம் தான் நாகரிகம் என்ற பெயரில் மாற்றானின் நாகரீகத்திற்கு அடிமையாகி உள்ளோம். ஆம், என் தந்தையின் தாத்தா பெயர் காளியப்ப.........(சாதிப் பெயர்), எனது தாத்தா பெயர் நல்லப்ப.......(சாதிப் பெயர்), ஆனால் எனது தந்தையின் பெயர் சுப்பிரமணியம் இதில் சாதியின் பெயர் இல்லை. காரணம் தெரியாது. ஆனால் இது பாராட்ட கூடிய விசயமே, பிறகு என் தந்தை எனக்கு மோகன்குமார் என்ற பெயரை வைத்தார். அவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த பெயர் வடமொழி பெயர் என்று. ஆனால் எனது பெயரில் ஏனோ ஜாதியை சேர்க்கவில்லை (இந்த நூற்றாண்டில் இந்தியாவிலேயே சாதிபெயரை பெயருடன் சேர்க்காமல் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம் - காரணம் தமிழன் மேம்பட்டுவிட்டான்). நானும் கூட என் பெயரை நினைத்து பலநாட்கள் பெருமைப்பட்டு கொண்டேன். நல்ல நாகரீகப்பெயர் என்று (Modern Name). இப்போது எனக்கு சில கேள்விகள் எழுந்துள்ளது, நான் ஏன் மாற்றானின் மொழிகொண்ட பெயரை வைத்துகொள்ள வேண்டும்? அப்படி என்ன என் மொழி கீழான மொழியா? என்மொழிக்கு தனித்துவம் கிடையாதா? என் மொழியில் பெயர் வைத்தால் எனக்கு சமூகத்தில் மரியாதையை கிடைக்காதா? இல்லை என் மொழியில் நல்ல தமிழ் பெயர்கள் அரிதா?

உலகில் எங்காவது மற்ற மொழிக்காரன் தமிழ் பெயரை தனக்கு வைத்துள்ளானா? தனது வாரிசுகளுக்கு வைத்துள்ளனா? வைத்தால் என்ன தவறு? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை, அவன் தனது தாய் மொழியை மதிக்கிறான், நேசிக்கிறான். அவன் மொழியை விட சிறந்த மொழி வேறொன்றும் இல்லை என நினைக்கிறான். (மேலும் மற்றுமொரு முக்கியமான ஒரு விஷத்தை கவனியுங்கள், வடநாட்டான் நம்மை விட பிந்தங்கியுள்ளான், ஆம், அவன் தனது பெயரில் ஜாதி பெயரைக்கொண்டுள்ளான் நாம் அவனை விட மேம்பட்டுள்ளோம் இப்படிபட்டவனுக்கே மொழிப்பற்று இருக்கும் பொழுது நமக்கு வேணாமா?) இப்போதுள்ள இளைஞர்கள் (youths) தனது வாரிசுகளுக்கு மாடர்ன் நேம் (Modern Name) என்ற பெயரில் வாயில் உச்சரிக்க இயலாத வடமொழி பெயர்களை வைக்கிறார்கள். தனது பெயரையும் (அரைகுறை தமிழ் பெயரையும்) நியுமராலாஜி (Numerology) என்று சொல்லிக்கொண்டு கண்ட கண்ட மொழியில் வாயில் நுழையாதபடி மாற்றிகொள்கிறார்கள். அரைகுறை ஆடைகள் மட்டும் கலாசார சீர்கேடு அல்ல இதுபோன்ற மொழி புறக்கணிப்பும் கலாசார சீர்கேடுதான். இப்படிப்பட்ட கலாசார சீர்கேட்டை தமிழன் மட்டுமே மிக முனைப்புடன் ஆர்வமாக செய்கிறான். காரணம் தமிழின் தனித்துவத்தை அவன் தெளிவுற தெரிந்திருக்கவில்லை.


எண்ணியல் அறிஞர்களே (Numerologist) நீங்களும் திருந்துங்கள், நீங்களும் உங்களை அணுகுபவர்களுக்கு ஏன் நல்ல தமிழ் பெயரை பரிந்துரை செய்யகூடாது?, உங்களது தொழில் தர்மம் ( Business Ethics) ஒத்துக்கொள்ளதோ? தமிழ் பெயர் வைக்க சொன்னால் உங்கள் எண்ணியல் பலனளிக்காதோ? நீங்களும் தமிழன் தானே? வடநாட்டானிடம் எதாவது கடமைப்பட்டு இருகிறீர்களா? ஏன் இப்படி உங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்கிறீர்கள்? தாய் மொழித்துரோகம் தாய்க்கு துரோகம் செய்வது போன்றது.

No comments:

Post a Comment