Friday, July 17, 2015

விளையாட்டாக ஆங்கிலம் கற்க உதவும் இணையதளம்!


உங்கள் ஆங்கில அறிவை கொஞ்சம் சோதித்துப்பார்த்துக்கொள்ள நினைத்தாலும் சரி, அல்லது ஆங்கில் அறிவை மேலும் பட்டைத்தீட்டிக்கொள்ள விரும்பினாலும் சரி, நோவேர்ட் (knoword ) இணையதளம் ஏற்றதாக இருக்கும்.

இந்த இரண்டையுமே விளையாட்டாக செய்ய வைக்கிறது இந்த தளம்.உண்மையில் இந்த இணையதளமே ஒரு விளையாட்டுதான். பிரவுசரில் ஆடக்கூடிய ஆங்கிலச் சொல் விளையாட்டு! ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளுக்கான பொருளை, எந்த அளவுக்கு ஒருவர் அறிந்திருக் கிறார் என சோதிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டை கொஞ்சம் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறது நோவேர்ட் இணையதளம். முகப்பு பக்கத்தில் எப்படி விளையாட வேண்டும் எனும் வழிமுறை எளிதாக விளக்கப்பட்டுள்ளது. ஆட்டத்திற்கு தயார் என்றதும், ஒரு காலி கட்டம் திரையில் தோன்றும்.


அந்த கட்டத்தில் இடம்பெறும் வார்த்தைக்கான அகராதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அந்த வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கானசிறு குறிப்பாக வார்த்தையின் முதல் எழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.அகராதி பொருளை கொண்டு வார்த்தையை கட்டத்தில் சரியாக டைப் செய்தால் அடுத்த வார்த்தைக்கு முன்னேறலாம். தவறாக டைப் செய்தாலும் தொடர்ந்து ஆடலாம்.

 என்ன சரியாக சொன்னால் 10 புள்ளிகள். தவறு எனில் 10 புள்ளிகள் மைனஸ். அகராதி விளக்கத்தை கொண்டு வார்த்தையை கணிப்பதே சுவாரஸ்யமானதுதான் என்றால், ஒருநிமிட அவகாசத்திற்குள் இதை செய்ய வேண்டும் என்பது இன்னும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் எளிய வார்த்தைகள் போல இருக்கும், ஆனால் போகப்போக வார்த்தைகள் கடினமாகி கொண்டே இருக்கும். முதலில் இதென்ன பெரிய விளையாட்டா என்று தோன்றினாலும், திரையில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான விளக்கம், உங்களை அது என்ன சொல் என்று அல்லாட வைக்கும்.


ஆங்கில சொல் வங்கியை வளப்படுத்திக்கொள்வதற்காக அகராதியை வைத்துக்கொண்டு அர்த்தம் புரிந்து கொள்வதை விட, இப்படி சவாலான முறையில் வார்த்தைகளை கண்டுபிடிக்க முயல்வது ஆர்வத்தை அதிகமாக்கும். மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை பலரும் முயன்று பார்க்கலாம். உங்கள் ஆங்கில திறமைக்கு ஏற்ப முதலிலேயே ஆட்டத்தின் கடினத்தன்மையை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆங்கில பரிட்சயத்தை அதிகமாக்கி கொள்ள சுவாரஸ்யமான வழி மட்டும் அல்ல; இது அருமையான பயிற்சியும் கூட. உடலுக்கு மட்டும்தான் பயிற்சி அவசியமா? மூளைக்கும் பயிற்சி அவசியம், அதற்காக தான் இந்த சொல் விளையாட்டு என்கிறது கோவேர்ட் இணையதளம்.சொற்களை கணிப்பது, விரைவாக யூகிப்பது, மற்றும் துரிதமாக டைப் செய்வது என மூன்று வித பயிற்சிகளை இது சத்தியமாக்குவதாகவும் குறிப்பிடுகிறது. இணையத்தில் அலுப்பு ஏற்படும் போது முயன்று பாருங்கள், பலனுள்ளதாக இருக்கும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயலியாகவும் டவுன்லோடு செய்து விளையாடலாம்.


தமிழ் மொழிக்குக்கும் கூட இப்படி ஒரு அருமையான இணையதளத்தைஉருவாக்கலாம் என்றும் தோன்றும்.

இணையதள முகவரி:
http://knoword.org/

No comments:

Post a Comment