Wednesday, July 29, 2015

புத்தர் சிரித்தாலும் சிரித்தார் PART 1

நாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி... 
இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. 
எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. 
விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். 
இடம்: டெல்லி. காலை 8 மணி. பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். 
இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்.. மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா.
 மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'. மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது. இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள்.
 குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும். சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு. ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. 
ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின. வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை. 
ADVERTISEMENT இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர். 
சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா. அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. 
குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின. அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். 
இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான். அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.
 நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும். 
நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான். ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன. 
1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின. சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. 
மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது. அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. 
தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது. இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர். 
1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது). 
இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. 
இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான். 1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. 
எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம். நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன. ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி. இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது. 
மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா. அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது. 
அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 
இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது. இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார். இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். 
இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார். ஆனால்.... 1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்.. மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள். அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.
 நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை. பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது. இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம். 
அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்.... தொடரும்.. 
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/2008/06/26-what-does-indo-us-nuclear-deal-mean.html

No comments:

Post a Comment