Wednesday, July 29, 2015

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 3



-ஏ.கே.கான் இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.

இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின). இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான்.

 இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான்
High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான். இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார்.

 இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங். இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர். இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான்.


மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல்.

அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங். ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது.

 பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார். மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர். இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன்.

 அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை. இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள். இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர். நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம். மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர். இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான்.


இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை. இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு. ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது.

 இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங். புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி.

இது என்னாது?.


எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'. ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ். இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது.

 தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது. இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும். மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம். (இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது) இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும்.

அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும். மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை. அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம். எல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது? காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'.. இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/2008/07/01-what-does-indo-us-nuclear-deal-mean-part-3.html

No comments:

Post a Comment