Wednesday, July 29, 2015

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 4



இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act).

 Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.

உதாரணத்துக்கு ஒன்று:

அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம்.

ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது, அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.

மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும். அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட்.


இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட். இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட். இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள். இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள்.

மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும். அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள். மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம். ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல. மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது. இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது. ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள்.

இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?.. காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி.. தொடரும்.. (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/2008/07/02-the-hyde-act-misreading-or-misleading.html

No comments:

Post a Comment