Wednesday, October 9, 2013

மீன் பண்ணைக்கான கட்டுமானம்



நாற்றங்கால் குளங்கள்: தரமான மீன் குஞ்சுகளே மீன் உற்பத்தியினை அதிகப்
படுத்தும். ஆதலால் நாற்றங்கால் அமைப்பு ஒரு பண்ணைக்கு மிகவும் அவசியமாகும்.
இந்த நாற்றங்கால்கள் சிறியனவாகவும் ஆழம் குறைந்தனவாகவும் அடிக்கடி நீர்
மாற்றம் செய்வதற்கு ஏற்றதாகவும் அமைத்திடல் வேண்டும். பொதுவாக நாற்றங்கால்கள்
200-600 ச.மீ. வரையுள்ள குளங்களாக அமைக்கப் படலாம். இக்குளங்கள் பொதுவாக 1.0 -
1.5 மீட்டர் ஆழமுள்ள நீரினை தேக்கி வைக்கக்கூடியதாக உள்ளது. நீரின் அளவு
குறைவாக உள்ளதால் கரைப்பகுதி மிகுந்து அகன்று இருக்கத்தேவையில்லை. கரையின்
உட்சாய்வு மற்றும் வெளிச்சாய்வு 2:1 என்ற விகிதத்தில் அமைக்கலாம்.
வளர்ப்புக் குளங்கள்:ஒரு மீன் பண்ணையில் வளர்ப்புக்குளங்கள் நாற்றங்கால்
குளங்களைவிட பெரியவையாக இருத்தல் வேண்டும். இத்தகைய குளங்களை பொதுவாக 0.06 -
0.10 எக்டர் பரப்புடையதாக அமைத்தல் நல்லதாகும். இவைகளை 1.5 - 2 மீட்டர்
ஆழமுள்ள செவ்வக குளங்களாக அமைக்கலாம். இதன் கரைகளின் உட்சாய்வு மற்றும்
வெளிச்சாய்வு ஆகியவை 2:1 என்ற விகிதத்தில் அமைக்கலாம். அறுவடை காலத்திலும்
அவசர வேளைகளிலும் குளத்து நீரினை விரைவாக உள்ளேற்ற மற்றும் வெளியேற்றத்தக்க
வகையில் வடிகால் வசதி அமைய வேண்டும்.
இருப்புக்குளங்கள்: இருப்புக்குளங்கள் நீர்த்தேக்கப் பரப்பு அதிகமாக
இருக்குமாதலால் இக்குளங்கள் பண்ணையின் அளவினைப் பொறுத்து 0.2 - 2.0 எக்டேர்
வரை அமைக்கலாம். பொதுவாக 1.5 - 2.5 மீ ஆழமுள்ள 0.4 - 0.5 எக்டர் அளவுள்ள
குளங்களை அமைக்கலாம். குளங்கள் அமைக்கும்போது அவ்விடம் மிகவும் தாழ்வாக
இருந்தால் மேலும் அவ்விடத்தை அகன்று தோன்றி குளம் அமைப்பது பலவகைகளில்
இடையூறாக அமையும். அத்தகைய இடங்களில் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மண் எடுத்து
கரை அமைத்து அந்நிலத்தின் மட்டத்திலேயே குளம் அமைத்திடலாம். இதனால் முழுமையான
வடிகாலுக்கு வாய்ப்பு அளிக்கும். இவை கரை அமைப்புக்குளங்கள் எனக்கூறப்படும்.
பகுதி மட்டும் தோண்டப்பட்ட குளம்: நிலத்தின் மட்டமானது ஓரளவு உயரமாக இருப்பின்
அதனை ஆழமாக தோண்டினால் நீரை வடிக்கும் வாய்ப்பினை இழக்கும். எனவே குளத்தினை
ஓரளவிற்கு மட்டும் தோண்டி கரையை அமைத்து நீரைத் தேக்கிடலாம்.
முழுவதும் தோண்டப்பட்ட குளம்: நிலமானது மேடாக இருக்குமாயின் அவ்விடத்தை குளம்
அமைக்க தேவையான ஆழத்திற்கு தகுந்த வடிகால் மட்டம் கொடுத்து கரையை
அமைத்திடலாம். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படும் குளங்களின்
அடிப்பகுதி அதிக நீர்க்கசிவு உடைய மண்ணைக் கொண்டு இருப்பின் அதனை மாற்றி
களிமண் மற்றும் பிற மண்களைக் கலந்து நீர்க்கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும். குளத்தின் அடிமட்டத்தில் இடப்படும் மண் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த
மண்ணாகவோ அல்லது முழுவதுமாக களிமண் மற்றும் வண்டல்மண் நிறைந்த மண்ணாகவோ
இருந்திடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீன் உற்பத்தியின்போது அதன்
வளர்ச்சிக்கு நீரில் கலந்துள்ள தாவர மற்றும் விலங்கின நுண்ணுயிர்கள்
வளர்வதற்கு ஊக்குவிப்பது பெரும்பாலும் மண்ணின் தன்மையாகவே அமைவதால் குளத்தின்
அடிப்பகுதியில் இடப்படும் மண் தாதுக்கள் மற்றும் சத்துள்ள மண்ணாக இருப்பது
அவசியம்.
மீன் பண்ணைகள் அமைக்கும்போது நாற்றங்கால் குளங்களைச் சுற்றியும் தவளை,
நீர்நாய் மற்றும் பாம்பு ஆகியவை நீரினுள் புகாமல் இருக்க வலைவேலி அமைப்பது மிக
அவசியம். பண்ணைக்கு நீர்வரத்து ஆறு போன்ற இயற்கை நீர்நிலைகளிலிருந்து
பெறப்பட்டாலும் அவசரத் தேவைக்கு பண்ணைக்கென ஒரு ஆழ்குழாய் கிணறு அமைப்பது
நல்லது. அதே சமயம் இயற்கை நீர்நிலைகளில் இருந்து நீரினை எடுத்திடும்போது
(செடிமென்டேஷன் டேங்க்) அமைப்பது நல்ல பயனைத் தரும். பண்ணைக் குளங்களின்
கரைகளில் அக்கரைகள் சரிந்துவிடாமல் இருந்திட பெரிய அளவிலான மரங்களை
வளர்க்கலாம். மீன் வளர்ப்புக் குளங்களுக்கென அமைக்கப்படும் நீர் உட்புகும்
கால்வாய்களின் இணைப்பினையும், நீர் வெளியேற்றும் கால்வாய்களின் இணைப்பினையும்
பண்ணையின் இரு பக்கங்களிலும் தனித்தனியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது
நல்லது.
நன்னீர் மீன்வளர்ப்பில் ஈடுபட்டு பொருளீட்ட விரும்புவோர் மேற்சொன்ன வழிமுறைகளை
தவறாது பின்பற்றி பண்ணைக் குளங்களை அமைத்திட்டால் நிறைந்த லாபம் பெறுவர்
என்பது உறுதி.
பா.கணேசன், வெ.பழனிச்சாமி, வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி.

No comments:

Post a Comment