Wednesday, October 2, 2013

வெற்றி அனுபவம்

வயலில் நெல்நாற்றுகள் நிறைந்திருக்க, அருகிலேயே சிறுகுட்டையில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அதையொட்டி, நாட்டுக்கோழிகள் நலமாக வளர்கின்றன.
எங்கே என்கிறீர்களா? மதுரை குலமங்கலம் பகுதியில் விவசாயி கிருஷ்ணனின் வயலில் தான், ஒருங்கிணைந்த பண்ணையம் நடக்கிறது.
நெல்லில் சாதனை படைத்து, 2012 - 13 தேசிய அளவில் மகேந்திரா அவார்டு வாங்கியுள்ளேன்.பண்ணை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், கிருஷ்ணன். நான்கரை ஏக்கரில் நெல்விவசாயம் செய்கிறேன். வெறுமனே விவசாயத்தை நம்பி வாழமுடியாது. மழை இருந்தால் செழிக்கும். இல்லாவிட்டால் வயிற்றில் அடிக்கும். எனவே, விவசாயத்தோடு இணைந்த சிறுதொழில்களை செய்ய நினைத்தேன். 15 சென்ட் நிலத்தை, பள்ளம் தோண்டி சிறுகுட்டையாக்கினேன். கட்லா, ரோகு, கண்ணாடி கெண்டை குஞ்சுகளை, தலா ரூ.2க்கு வாங்கி விட்டால், 3 மாதத்தில் அரைகிலோ அளவு வளர்ந்து விடும். கிலோ ரூ.160 வரைக்கும் விற்பேன். 500 குஞ்சுகள் என்றாலும், ரூ.15ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்புக்கு, 50 சதவீத மானியத்தில் கடனும், இலவச பயிற்சி தரப்படுகிறது. மதுரையில் என்னைப் போல், 35 பேர் திருப்பரங்குன்றத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி பல்கலையில் ஐந்து நாட்கள் பயிற்சி பெற்றோம். கொட்டகை அமைக்க, நாட்டுக்கோழி குஞ்சுகள், தீவனம் வாங்க ரூ.ஒருலட்சத்து 17ஆயிரம் ஆனது. இதில் 25 சதவீதத்தை தமிழக அரசும், 25 சதவீதத்தை நபார்டும் மானியமாக தருகிறது.
ஈரோட்டில் உள்ள அரசு பதிவு பெற்ற, குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து, 21 நாட்களான 250 குஞ்சுகளை வாங்கினேன். ஒரு குஞ்சின் விலை ரூ.61. 90 நாட்கள் வளர்த்தால், ஒன்றே கால் கிலோ முதல் ஒன்றரை கிலோ எடையளவு அதிகரிக்கும். கிலோ ரூ.200க்கு விற்கலாம். இன்னும் 25நாட்களில் கோழிகள் விற்பனைக்கு தயாராகி விடும். ஐ.எஸ்.ஐ., முத்திரை இடப்பட்ட தீவனத்துடன், முட்டைகோஸ், கேரட், கீரை வகைகளை தீவனமாக தருகிறேன்.
குலமங்கலத்தில் கால்நடை மருந்தகம் மூலம், கோழிகளுக்கு இலவச தடுப்பூசி, பராமரிப்பு கிடைக்கிறது. பிராய்லர் கோழிகளைப் போலின்றி, ஆண்டுமுழுவதும் நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம். குளிர் காலத்தில் மண்பானையில் அடுப்புக்கரி மூட்டி சூடேற்றி, வெப்பத்தை உண்டாக்கலாம். ஏற்கனவே 5000 காடை குஞ்சுகள் வாங்கி வளர்த்தேன். அதில் ரூ.20ஆயிரம் வரை லாபம் கிடைத்தது. தேன்கூடு வைத்து தேனீக்களை வளர்த்தேன். ஆறுமாதமாக தேன் கிடைக்கிறது.
கொட்டகைக்குள் நெல் உமி, மரத்தூள், ரம்பத்தூளை படுக்கை போல் தயாரித்துள்ளேன். கோழி களின் எச்சம் இதில் படியும். அவ்வப்போது கிளறி விடுவதால், ஈரம் காய்ந்து விடும். இதன்மூலம் கோழிகளுக்கு வரும் 50 சதவீத நோய்களை தடுத்துவிடலாம். மாதத் திற்கு ஒருமுறை உமி, மரத்தூள் படுக்கையை அகற்றி, புதிதாக தயார் செய்வேன். கோழி எச்சத்துடன் கூடிய உமி, மரத்தூள் சிறந்த இயற்கை உரம். இதை எடுத்து, நெல், தென்னைக்கு உரமாகத் தருகிறேன். மண்புழு உரமும் தயாரிக்கிறேன்.
விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல், உபதொழில்களையும் கூடவே செய்தால், வறட்சியின் போதும், நம்மை வாழவைக்கும் என்றார்.
கிருஷ்ணன்: 89737 37379.

No comments:

Post a Comment