Wednesday, April 29, 2015

சைனஸ்' என்றால் என்ன?


நமது மூக்கைச் சுற்றி நான்கு காற்று அறைகள் உண்டு. இந்த காற்று அறைகளே 'சைனஸ்'. கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில், இந்த காற்று அறைகள் உள்ளன. இவை, சுவாசிக்கும் காற்றை சரியான வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. 

2 'சைனசைடிஸ்' நோயின் அறிகுறிகள் என்ன?
கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, தலை குனிந்தால் தாங்க முடியாத தலைவலி இருக்கும். ஒவ்வாமையும் இருந்தால், காலையில் எழுந்தவுடன், தொடர்ச்சியான தும்மல் இருக்கும்.

3 'சைனசைடிஸ்' பிரச்னை எப்படி வருகிறது?
மூக்கில், 'சைனஸ்' பகுதி இணையும் இடத்தில், காற்று இல்லாமல், சளி சேர்ந்து தடை ஏற்பட்டு, 'சைனசைடிஸ்' வருகிறது. அதுமட்டுமல்ல, மூக்கு துவாரத்தை பிரிக்கும் எலும்பு, வளைவாக இருப்பதாலும், 'சைனஸ்' பகுதிக்கு அருகிலுள்ள எலும்பு மற்றும் சதைகளின் முறையற்ற வளர்ச்சியாலும், காற்றுக்கு பதில் சளி சேர்ந்து 'சைனஸ்' வருகிறது.

4 மேற்சொன்ன காரணங்கள் தவிர வேறு என்ன காரணங்கள் உள்ளன?
'சைனஸ்' பகுதியில் ஒரு திரவம் சுரந்து, மூக்கிலுள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த திரவம், சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரப்படுத்தி, 'சைனஸ்' பகுதிக்கு அனுப்புகிறது. 'சைனஸ்' பகுதியில் ஏதேனும் பிரச்னை எற்பட்டால், திரவம் காற்று பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாகவும் 'சைனஸ்' வரும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வாமை காரணமாகவும் வரும்.

5 'மூக்கில் ஏற்படும் ஒவ்வாமைக்கு எளிய தீர்வு என்ன?
படுக்கை, தலையணை உறை போன்றவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். நூல், பஞ்சுத் துகள்கள் போன்றவற்றின் அருகே இருப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை சாயம் பூசப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

6 'சைனஸ்' பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர் அறிவுரையின்படி மாத்திரைகள் அல்லது 'ஸ்டீராய்டு' கலந்த சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட காலத்துக்கு, 'ஸ்டீராய்டு' கலந்த 'ஸ்ப்ரே' பயன்படுத்தலாம். 50 மைக்ரோ மில்லிகிராம் மட்டுமே கலந்து, 'ஸ்டீராய்டு' மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதும் வராது.

7 ஒவ்வாமையால் ஏற்படும் 'சைனசைடிஸ்' பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தீர்வாகுமா?
மருந்து, மாத்திரைகளில் குணமாகவில்லை எனில், 'எண்டோஸ்கோப்பி' சிகிச்சை மூலமாக, 'சைனஸ்' பகுதியில் வளர்ந்திருக்கும் சதைகள் அகற்றப்படும். எலும்பு பகுதி, தசை பகுதியில் பிரச்னை என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

8 மூக்கில் ஒவ்வாமை இருந்தால் தும்மல் வருமா?
ஒவ்வாமை தோல் பரிசோதனை மூலம், தும்மல் எதனால் வருகிறது என, தெரிந்து கொள்ளலாம். ஒவ்வாமை பொருட்களில், தவிர்க்க முடிந்தவற்றை தவிர்த்துவிட்டு, மற்றவற்றுக்கு தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம். இதற்கு 'இமுனோதெரபி' என்று பெயர்.

9 மூக்கில் ரத்தம் வருவதற்கு காரணம் என்ன?
மூக்கின் 'லிட்டில்ஸ்' பகுதியில் இருந்து தான்,
ரத்தம் கொட்டும். குழந்தைகள், மூக்கினுள் அன்னிய பொருட்களை விட்டு விளையாடுவதாலும், பெரியவர்களுக்கு மூக்கில் அடிபடுவது, ஜலதோஷம், மூக்குச் சளி, நீர்கோர்ப்பு சதை, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற காரணங்களாலும், மூக்கில் ரத்தம் வரும்.

10 மூக்கில் சதை வளர்வது என்றால் என்ன?
மூக்கில், 'சைனசைடிஸ்' மற்றும் ஒவ்வாமை இருப்போரின், 'சைனஸ்' அறைகளில் உள்ள சதை, மூக்கு துவாரத்தின் வெளியேயும், பின்புறத்திலும் வளர்ச்சியடையும். இது, 'பாலிப்' எனப்படும். இந்த நோயின் ஆரம்ப காலம் என்றால், மருத்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். நோய் தீவிரம் அடைந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.

- கோ.சங்கர நாராயணன்
பேராசிரியர், காது மூக்கு தொண்டை பிரிவு
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,
சென்னை.
94444 68277
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24701&ncat=11

No comments:

Post a Comment