Monday, August 19, 2013

எனக்கு தெரியும் போது எல்லாம் என்னை விட்டு போனது ஏன் ?

எனக்குத் தெரியாது


நான் படித்த படிப்பே என் குடும்பத்திடம் இருந்து என்னை பிரிக்கும் என எனக்குத் தெரியாது.
டி.வி . எஸ் வண்டி என் ஊருக்கு வந்த போதும் , மாட்டு வண்டி மறைந்த போதும் ஒரு காலத்தில் அதையே காரணம் காட்டி என் நிலத்தை பறித்து மீத்தேன் எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நல்ல தரையில் செருப்பில்லாமல் நடந்த போது வல்லரசு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினால் நல்ல தரை என்பதே இல்லாமல் போய் விடும் என்பது எனக்குத் தெரியாது.
நல்ல தண்ணீரை பானையில் வைத்து பெரிய சொம்பில் வயிறு முட்டக் குடித்த போது இதை காசு குடுத்து இனி வாங்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது.
நாமிருவர் நமக்கு ஏன் ஒருவர் என இந்தியா என் இனத்தின் மக்கள் தொகையை திட்டமிட்டு குறைத்த போது அடுத்த மாநிலத்தில் இருந்து திட்டமிட்டு குடியேற்றம் செய்யத் தான் என்பது எனக்குத் தெரியாது.
என் வயலில் காலாற நடந்து எங்கோ தொலை தூர வாழ்வில் முன்னேற கனவு கண்ட போது எந்த முன்னேற்றத்தின் எல்லையே என் வயலில் காலாற நடப்பது தான் என்பது எனக்குத் தெரியாது.
காலையில் இருந்து மாலை வரை குறைந்தது பத்து பழங்களும் எட்டு தானியங்களும் உண்ட போது நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரன் என்பது எனக்குத் தெரியாது.
சனிக்கிழமை எண்ணை தேய்த்துக் குளித்து , அன்றைக்கே உரித்த ஆட்டுக் கறியை உண்டு கண் சொல்லிக் கிடந்த போது நான் தான் ராஜா என்பது எனக்குத் தெரியாது.
ஆங்கிலத்தில் படித்தால் வேலை வாய்ப்பு என்ற நிலை என் சொந்த நாட்டில் வந்த போது இனி நான் நிரந்தர அடிமையாவேன் என்பது எனக்குத் தெரியாது.
# எனக்கு தெரியும் போது எல்லாம் என்னை விட்டு போனது ஏன் ?

No comments:

Post a Comment