Sunday, June 29, 2014

சோழ தேசத்தில் பயணிப்போம்...

தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது.

கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "விஜயலாயச் சோழன்" என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற அரசர்களின் காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கடல் கடந்து கப்பல் படை உதவியுடன் கடாரம் வரை சென்று கொடி நாட்டினார்கள்.
'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' என்ற கீதை வரிகளுக்கேற்ப மூன்றாம் ராஜ ராஜன் காலத்தில் சுந்தர பாண்டியன் படை எடுப்பினால் தஞ்சை செந்தழலுக்கு இரையாக்கப்பட்டது. சோழ நகரங்கள் ஒவ்வொன்றும் மண்மேடாக்கப்பட்டது, அங்கு இருந்த மாடமாளிகைகள் ஒவ்வொன்றும் இடித்து நொறுக்கப்பட்பட்டது.அவற்றிலுள்ள தூண்கள் எல்லாம் உடைத்துப் பொடியாக்கப்பட்பட்டது.சோழ தேசத்தையே தரைமட்டமாக்கிய பின், கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான் சுந்தர பாண்டியன்.
காவிரி பாய்ந்து வயல்களெல்லாம் பச்சை பசேலென இருந்த தஞ்சை இனி எதற்கும் பயன்படாது என்ற நிலைக்கு வந்தது. பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344) என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.
பாழ்பட்டுக்கிடந்த தஞ்சை நகரை திருத்தி அங்கு "சாமந்த நாராயண விண்ணகரம்" என்ற பெருமாள் கோயிலை நிறுவி , அந்த கோயிலுக்கு "சாமந்த நாராயண குளம்" என்ற குளம் ஒன்றை வெட்டி, அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவிக்கிறான் "சாமந்தன்". அப்படி அவன் தோற்றுவித்த குடியுருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் வளர்ந்துள்ளது.
அழிந்த தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த கோயில் "கீழ வாசல்" பகுதியில் "கீழை நரசிம்மர்" என்ற பெயரில் இன்றும் உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளமும் உள்ளது. தஞ்சை செல்லும் போது பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணியுங்கள். ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

No comments:

Post a Comment