> கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது(சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.). இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அங்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் வீற்றிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் இத்தலத்தில் வழிபட்டு சென்றார். ராமன் லட்சுமணன் இங்கு வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
> திருமூலரின் ஜீவசமாதி ஸ்தலமாக உள்ளது சிதம்பரத்தில் ஆதி மூல நாதர் சன்னதி ஆகும்..அடுத்தபடியாக மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் ஆக்கியருளிய திருவாடுதுறை கோவிலில் இவருக்கு சமாதி உள்ளது ..மூன்றாவதாக திருநாரையூரில் பொல்லா பிள்ளையார் கோவில் உள்பிரகாரத்தில் இவருக்கு சமாதி உள்ளது ..படத்தில் காண்பது திருநாரையூரில் திருமுலர் சமாதி...
> அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் சிவத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார்.உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை. பிள்ளையாரே சாப்பிட்டு விட்டதாக நம்பி சொல்ல, மற்றவர்கள் அதை நம்பவில்லை.இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழனும் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பியும் பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே "இரட்டை மணிமாலை' ஆகும். மனமிரங்கிய பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் "பொள்ளாப் பிள்ளையார்' எனப்பட்டார்.
"பொள்ளா' என்றால் "செதுக்கப்படாத' என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.
> இராசராச அபய குல சேகர சோமகாராச பூபதி மன்னன் சிவனடியார்கள் சிலர் தேவாரப் பாடல்களை இசையோடு பாடுவதை கேட்டு மகிழ்ந்தார். இப் பாடல்கள் இருக்கும் இடம் தேடினார். திருநாரையூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் சிறப்பை அறிந்து அவரை சந்தித்தார். தாம் கேட்ட தேவார பாடல்களையும் எங்கு தேடியும் கிடைக்காததையும் சொல்லி தாங்கள் தான் பொல்லா பிள்ளையாரிடம் கூறி பாடல்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கேட்டார்.
நம்பியும் மன்னரும் பொல்லா பிள்ளையாருக்கு பலவகை அமுது படைத்து தேவார பாடல்கள் இருக்கும் இடத்தை காட்டவும் என்று உளமுருக வேண்டினார்கள். அமுதுண்ட பொல்லா பிள்ளையார் தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலை சுவடிகள் தில்லை நடராஜர் திருக்கோவிலில் வடமேற்கு மூலையில் ஒரு அறையில் இருக்கிறது என்றார். அங்கு சென்று பார்த்த போது அறைக்கதவை திறக்க மறுத்தனர்.
பொல்லா பிள்ளையார் அந்தணர் நால்வரையும் அங்கு எழுந்தருள செய்து தானும் தில்லை நடராஜர் திருக்கோவிலில் எழுந்தருளினார். நால்வர் எழுந்தருளியதும் தில்லைவாழ் அந்தணர்கள் கதவை திறந்தனர். அந்த அறையில் தேவார பாடல்கள் இருந்த ஓலை சுவடிகள் கரையாம் புற்றால் மூடப்பட்டு இருந்தன. மன்னரும் மனம் தளராமல் கரையானை அகற்றினார். தேவாரபாடல்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை சேகரித்தார். இவ்வாறு வரலாறு கூறப்படுகிறது.
No comments:
Post a Comment