Wednesday, June 24, 2015

மரண விளிம்பு அனுபவங்கள்


 
உடலை விட்டு வெளியேறும் ஆத்மா !!!

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்
மரணத்திற்குப் பின் என்ன?

( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்ற
புத்தகத்தில் இருந்து. )

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக்குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார்.

பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

”....அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......”


1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்!!!

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்-

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் -

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் –

மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் –

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் –

சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் –

சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்-

ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)
அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள்.

சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.
மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் –

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் –

அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.
இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?
சிந்தித்துப் பாருங்களேன்.

நன்றி - திரு.N.கணேசன் , http://enganeshan.blogspot.in
ஆழ்மனதின் அற்புத சக்திகள்
பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

No comments:

Post a Comment