Wednesday, June 3, 2015

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?



வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.


பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம்.பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. 

முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.


மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.


மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்

No comments:

Post a Comment