Saturday, May 30, 2015

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3


முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3




ஆரம்பப் பெருவெடிப்பின் பின்னர் அண்டத்தில் நடைபெற்ற காட்சிகளையெல்லாம் நம்மால் இப்போதும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்மால் மீண்டும் பார்க்க முடியும். "என்ன, அவைதான் நடந்து முடிந்து போனவையாயிற்றே! இறந்த காலத்தை நம்மால் எப்படிக் காண முடியும்?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனால் நிஜத்தில் எப்போதும் நாம், 'நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'. இறந்தகாலத்தை நோக்கி நம்மால் நகர முடிவதில்லையேயொழிய, நம் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ரொம்பக் குழம்பிப் போயிருப்பீர்கள். அதனால், இதைக் கொஞ்சம் விரிவாகவே நாம் பார்க்கலாம். உங்கள் நண்பனிடம் "உன் வெற்றுக் கண்களால் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?" என்று கேட்டுப் பாருங்கள். அவன் ஒரு குறித்த அளவுத் தூரத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்வான். அந்தப் பதில் சரியானது போலவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால், உண்மையில் நம் கண்களால் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறோம் தெரியுமா? பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையெல்லாம் நம் கண்களால் பார்க்கிறோம். சூரியன் தவிர்ந்து, நமக்கு மிக அருகாமையில் இருப்பது 'அல்பா செண்டாரி A', 'அல்பா செண்டாரி B' என்னும் இரட்டை நட்சத்திரங்கள். இவை பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதற்கு அப்புரம் 25 ஒளியாண்டுகள், ஐம்பது ஒளியாண்டுகள், நூறு ஒளியாண்டுகள் தூரத்திலெல்லாம் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள காலக்ஸிகளும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஒளியானது ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்யக் கூடியது. அப்படியென்றால், ஒளி ஒரு ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் என்பதை நாம் கணிப்பிடலாம். கணக்கிட்டு வருவது எத்தனை கிலோமீட்டர்களோ அதுவே ஒரு ஒளியாண்டுத் தூரம் ஆகும். இப்போது, பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் காலக்ஸிகள் எத்தனை கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்படியும் பார்க்கலாம். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து, ஒளி நம் கண்களை வந்தடைய வேண்டுமென்றால், நான்கு ஆண்டுகள் தேவை. அதாவது அந்த நட்சத்திரம் தெரிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரியும். தற்போது நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த நட்சத்திரம் 25 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குமானால், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 25 வருடத்துக்கு முன்னால் இருந்த நட்சத்திரத்தை. இன்று உள்ள நட்சத்திரத்தை அல்ல. அதாவது 25 வருடத்தின் முன்னரான இறந்த காலத்தையே அந்த நட்சத்திரத்தில் காண்கிறீர்கள். அப்படிப் பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள காலக்ஸியொன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பில்லியன் வருடத்துக்கு முன்னால் உள்ள இறந்த காலத்தைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த நட்சத்திரம் அங்கு இருக்கிறதா? அல்லது வெடித்துச் சிதறிவிட்டதா? என்று கூட உங்களுக்குத் தெரியாது. இப்போ புரிகிறதா, நீங்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. நமது சூரியன் கூட எட்டேகால் நிமிடங்களின் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. நாம் பார்க்கும்போது தெரியும் சூரியன், எட்டேகால் நிமிடங்களுக்கு முன்னரான சூரியன். சூரியனிலிருந்து ஒளி நம்மை வந்தடைய எட்டேகால் நிமிடங்கள் ஆகிறது. நாம் பார்க்கும் அனைத்தும் இப்படித்தான். ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் உங்கள் மனைவியைக் கூட, நானோ செக்கன்கள் இடைவெளிகளின் பின்னர்தான் பார்க்கிறீர்கள். அதே கணத்திலல்ல. நம் கண்களால் பார்ப்பவை எல்லாமே இறந்தகாலம்தான். இதன்படி பார்த்தால், மனிதன் கண்டுபிடித்த தொலைநோக்கிக் கருவிகள்தான், உலகின் முதன்முதலான 'கால இயந்திரம்' (Time Machine) என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொலைநோக்கிக் கருவிகளின் தொழில்நுட்பம் வார்தைகளால் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட தொலைநோக்கிக் கருவிகளில் சிலவற்றை விண்வெளிகளில் கூட மிதக்கவிட்டுள்ளார்கள். பூமியின் அட்மாஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் வெப்பக்கதிர்த் தடைகள் ஏதும் இல்லாமல் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவுகின்றது. இந்தத் தொலைநோக்கிக் கருவிகள்மூலம், பெருவெடிப்பிற்கு 480 மில்லியன் வருடத்தின் பின்னுள்ள 'குழந்தை அண்டத்தைப்' (Baby Universe) புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த அண்டங்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. யாருக்குத் தெரியும், பெருவெடிப்பின் கணத்தையும் மனிதன் ஒருநாள் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் பார்க்கவே முடியாது. நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். 



பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.



விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கிடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது. அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள். நான் ஆரம்பத்தில் கூறிய பலூனின் முதல் நிலை இதுதான்.




கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன. கரும்சக்திதான் அதிகமாக அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 


இன்றைய அறிவியலின்படி கரும்சக்தியும், கரும்பொளும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு மட்டுதான் நாம் வந்திருக்கின்றோம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேவ்வேறு எதிர்ச் செயல்களைச் செய்தாலும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பானவையா? அல்லது வெவ்வேறானவையா? என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்துமதத்தின் சிவனும், சக்தியும் போல இவை இரண்டும் இருப்பது என்னவோ நிஜம். இவை இரண்டும் கருமையாக இருப்பது அந்த நினைப்புக்குகான இன்னுமொரு பலம். இதனால் நான் இந்துமதத்தை இங்கு வலியுறுத்துகிறேன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். இந்தச் சக்திகள்பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த நம் அறிவுள்ள மூதாதையர்கள், இதை ஏதோ வகையில் குறித்துச் சொல்லியிருக்க, நாம் அதை இந்த விதத்தில் அர்தப்படுத்தியும் இருக்கலாம். எது எப்பிடியிருந்தாலும், கண்களுக்குத் தெரியாத இந்த இரு மாயசக்திகளும் இந்தப் பேரண்டத்தையே வழிநடத்திச் செல்கின்றன என்பதுதான் தற்போதய நிஜம். இப்பகுதியுடன் இந்த கட்டுரை முற்றுபெறுகிறது.


-ராஜ்சிவா-

No comments:

Post a Comment