Saturday, March 21, 2015

ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர்



எவ்வுயிரையும் தன்னுயிர் போலப் போற்றி, தன் எண்ணம், தான் செய்கின்ற செயல் எதிலும் அறவழியைக் கடைப்பிடைத்து, இறையை அடைந்த ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர் ஆவர். இன்று மனிதரில் சிறு கூட்டம் பிற மனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறிச் சில வேத, ஆகமங்களைப் பொருளுணராது கற்றுத் தம்மைத் தாமே அந்தணர் என்றும், உயர்குலத்தோர் என்றும் பொய்யுரைக்கின்றனர். இவர்கள் முத்திநெறி அறவே அறியாத மூர்க்கர் கூட்டம் ஆகும். இவர்கள் சொல்லும், செயலும் படுபாதகம் ஆகும்.

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."
- ஆசான் திருமூலர் -

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. "
-ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."
-ஆசான் திருமூலர்-

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி.

நன்றி.

No comments:

Post a Comment