Monday, March 9, 2015

ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பிரபஞ்சம் உண்டு


என் பல கட்டுரைகளில் அழுத்தமாக நான் ஒரு கருத்தைச் சொல்லி வந்திருக்கிறேன். அது, "நாம் பார்க்கும் எதுவுமே உண்மை கிடையாது" என்பதுதான். இதையே குறிப்பாக வேறுவிதமாகவும் சொல்லியிருக்கிறேன். அதாவது, "நான் பார்க்கும் உலகத்தை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் பார்க்கும் உலகமே வேறு. நான் பார்க்கும் உலகம் வேறு. இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும் ஒன்றல்ல. நாம் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் உலகங்கள் வெவ்வேறானவை". இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, "திரிஷாவும், திவ்யாவும்" என்னும் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தேன்.
ஒருவருக்கு திரிஷா, அவரின் காதலி திவ்யாவாகத் தெரிவார். அதைக்கேட்டு மற்றவர்கள் நகைச்சுவையாகச் சிரிப்பார்களென்று கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதை அறிவியல் காரணங்களுடன் அலசியுமிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்த பலர் திரிஷா, திவ்யா என்னும் பெயர்களிலிருந்த ஒற்றுமைத் தேர்வைத்தான் ரசித்தார்களேயொழிய, அறிவியலைத் தவறவிட்டுவிட்டார்கள்.
ஆனால், சமீபத்தில் ஒரு மேற்குலகப் பெண் பிரபலம் வெள்ளையும், தங்கநிறமும் சேர்ந்த ஆடையை அணிந்துகொண்டு, தன் சினேகிதியிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவள் அந்த உடையை நீலமும், கருப்பும் என்று சொன்னது, இப்போது பெரிதாகி உலகமெங்கும் பரவி, அந்த உடை வெள்ளையும், தங்கமுமா? அல்லது நீலமும் கருப்புமா என்ற விவாதம் ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது வெளியே வந்து ஒரு வாரமாகிவிட்டாலும், பரபரப்புக் கொஞ்சம் அடங்கியதும் இதுபற்றி எழுதலாமென்று காத்திருந்தேன்.
அந்த உடையைப் பார்க்காதவர்கள் முதலில் அதைப் பாருங்கள். உங்கள் வீட்டிலேயே கணவன் ஒரு மாதிரியும், மனைவி ஒரு மாதிரியும் சொல்வீர்கள். என் வீட்டில் அது நடந்தது.
மீண்டும் சொல்கிறேன். நான் பார்க்கும் உலகு மட்டுமல்ல இந்தப் பேரண்டமே, என் மூளை எனக்கென உருவாக்கியது. அதுபோல, ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பிரபஞ்சம் உண்டு. அந்த அந்தப் பிரபஞ்சங்களியே நாம் நம் பேஸ்புக் நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் மூளை சிந்திப்பதை நிறுத்தும்போது, நம்மால் உருவகிக்கப்பட்ட பிரபஞ்சமும், பேஸ்புக்கும் இல்லாது போய்விடும்.
இப்போது நான் சொல்வது பிலாசஃபியா, அறிவியலா என்றெல்லாம் நீங்கள் சிந்திக்கக் கூடாது. படிச்சிட்டு உங்க உங்க வேலைகளைப் பார்க்கப் போயிடனும். சொல்லிட்டேன்.
-ராஜ்சிவா-

No comments:

Post a Comment