Saturday, March 21, 2015

Flight Mode விமானப் பயணத்தின் போது


விமானப் பயணத்தின் போது நம்முடைய மின்னணுச்சாதனங்களான, அலைபேசி (Cell Phone), மடிக்கணிணி (Laptop), கைக்கணிணி (Tablet) போன்றவற்றை அணைத்து (Switch Off) வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவது எதற்காக?
பொதுவாக, மின்னணுச் சாதனங்கள் ரேடியோ அலைகளை வெளியிடும். அவைகள் விமானத்தின் வானவூர்தி மின்னணுவியல் (Aviation) செயல்பாட்டில் குறுக்கிடக்கூடும். விமானத் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பு கொள்ளும் அலைவரிசைகளைப் போன்றே, பயணிகளின் மின்னணுச் சாதனங்கள் எவற்றினுடைய அலைவரிசையும் ஒத்துப்போகுமேயானால், அது விமானிக்குத் தவறான தகவல்களைத் தரவோ அல்லது வேறு குளறுபடிகளை ஏற்படுத்தவோ கூடும். இது விமானத்தைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு இடையூறாக இருக்கும்.
ஆனால், இப்பொழுதெல்லாம் சில விமானச் சேவைகள் பயணிகளுக்கு இலவசமாக wi-fi வசதி செய்து கொடுத்திருக்கின்றார்கள். ஆக, விமானம் மேலெழும்பும்போதும்(Take Off), தரையிறங்கும்(Landing)பொழுதேனும் மட்டும் மின்னணுச் சாதனங்களை அணைத்து வைத்து விடுவது நல்லது.
திறனலைபேசி (Smart Phone)யில்தான் நான் விளையாட்டுக்கள் விளையாடுவேன், அதனால் அதனை அணைத்து வைக்க முடியாது என்பவர்கள், உங்கள் மின்னணுச்சாதனங்களில் Airplane Mode என்று ஒரு வசதி இருக்கும். அதைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வசதி என்ன செய்யும்?
<>அலைபேசிக் கோபுரங்களைத் (Cell Phone Towers) தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொள்ளும்.
<>Wi-Fi வருடலை (Scan) நிறுத்திக் கொள்ளும்.
<>Bluetooth வருடலை (scan) நிறுத்திக் கொள்ளும்.
<>புவியிடங்காட்டு (Global Positioning System) அமைப்புச் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும்.
இவற்றின் மூலம் ரேடியோ அலைகள் வெளிப்படுவது கட்டுப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம், அவற்றின் பயன்பாடுகள் தேவையற்ற நிலையில் அவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதால் மின்னணுச் சாதனங்களில் மின்கலன் ஆற்றலும் (Battery Charge) சேமிக்கப்படுகின்றது. ஆம், அந்தப் பணிகளுக்கெல்லாம் மின்கல ஆற்றல் பெருமளவில் தேவைப்படும்.
சாலைப்பயணத்தின் போது கூட, அலைபேசியானது, அலைபேசிக் கோபுரத்தைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்து கொண்டே இருக்கும். மீளிக் கோபுரம் (Repeater) இருக்கும் தொலைவைப் பொறுத்தும் மின்கலன் திறன் கூடவோ குறையவோ பயன்படுத்தப்படும்.
பயணத்தின் போது, ஒரு அலைபேசிக் கோபுரத்தில் இருந்து அடுத்த அலைபேசிக் கோபுரத்திற்கு தொடர்பு மாற்றப்படும் இடைவெளியில், அலைபேசி தவித்துப் போனது போல இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள அதிகளவில் அலைபேசித் திறனைப் பயன்படுத்தும். அச்சமயத்திலும், மின்கலன் திறன் அதிகளவில் பயன்படுத்தப்படும்.
மின்கலன் திறனைச் சேமிக்க வேண்டுமென்றால் அவற்றை அணைத்துதான் வைக்க வேண்டும். ஆனால், அது அறிவுடைமை அல்ல. ஏனெனில், பயணத்தின் போது அவசர அழைப்புகள் வரக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு சாதனங்கள் என்றால் முக்கியமானதைத் தவிர்த்து மற்றவற்றை அணைத்து வைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment