Monday, March 9, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசுபற்றி…… (3)

உங்கள் வீட்டுச் சமையலறையில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சாம்பார்ப் பொடியென்று பலவகையில் சமையலுக்குத் தேவையான பொருட்களைப் பொடியாக்கி, பாட்டிலிலோ, அதற்கான பாத்திரத்திலோ அடைத்து வைத்திருப்பீர்கள். அதில் ஏதாவதொரு பொடியைக் கரண்டியால் சிறிதளவு எடுத்து, உங்கள் உள்ளங் கையில் போடுங்கள். இப்போது என்ன நடக்கும்? பொடி அப்படியே உங்கள் கையில் இருக்குமல்லவா? சரி, கொஞ்சம் தண்ணீரைக் கரண்டியால் எடுத்து உங்கள் உள்ளங் கையில் விடுங்கள். இப்போது என்ன நடக்கும்? அதுவும் உங்கள் கையிலேயே இருக்கும்? இதுபோல, நீங்கள் எதையெடுத்து உங்கள் கையில் விட்டாலும், அது கையிலேயே இருக்கும். ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம். உங்கள் சமையலறையில், ஒரு பாட்டிலில் நியூட்ரீனோகள் நிறைந்திருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நியூட்ரீனோக்களை உங்கள் கண்ணால் காணக் கூடியதாக இருக்கிறது என்றும் அதே பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். பாட்டிலிலிருக்கும் நியூட்ரீனோக்களில் ஒரு கரண்டியை எடுத்து இப்போ உங்கள் உள்ளங்கையில் போடுங்கள். இப்போ என்ன நடக்கும்? நீங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உங்கள் கைகளை ஊடுருவிக்கொண்டு, நியூட்ரீனோக்கள் எல்லாம் கீழே விழுந்துவிடும். இது விந்தையாக இருக்கும். இதை உங்களால் கற்பனை செய்யக் கூடியதாக இருக்கிறதா? ஒளியென்பது போட்டானாக இருக்கும்போது, அதனால்கூட நம் உடலை ஊடுருவ முடியவில்லை. ஒளி மட்டுமல்ல, ஒலியாலும் ஊடுருவ முடியவில்லை (ஊடுருவக் கூடிய சில கதிர்கள் இருக்கின்றன என்பது வேறு). நம் உடலின் செல்களிலிருக்கும் அணுக்களுக்கிடையே காணப்படும் அந்த மிகநுண்ணிய இடைவெளியினூடாக ஊடுருவிச் செல்லக் கூடிய நுண்துகள்கள்தான் நியூட்ரீனோக்கள்.

இப்படி நொடிக்கு நொடி ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரீனோக்கள் நம் உடம்பை ஊடுருவிச் சென்றுகொண்டேயிருக்கின்றன. நல்லவேளை நியூட்ரீனோக்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. இதுவரை மூன்று வகையான நியூட்ரீனோக்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோமென்று நான் முதல் பகுதியில் சொல்லியிருக்கிறெனல்லவா? இந்த மூன்று வகைகளையும், நியூட்ரீனோக்களின் மூன்று ‘சுவை' (Flavour) என்று சொல்வார்கள். அதாவது, எலெக்ட்ரான், மியூவான், டாவ் ஆகிய மூன்று ஃபிளேவர்களை நியூட்ரீனோக்கள் கொண்டிருக்கின்றன என்பார்கள். இதிலும் நியூட்ரீனோக்களில் ஒரு விசேசத்தன்மை உண்டு. நியூட்ரீனோக்கள் ஒரு ஃபிளேவரிலிருந்து மற்ற ஃபிளேவர்களுக்குத் தானாகவே மாறிக்கொள்கின்றன. எலெக்ட்ரான் நியூட்ரீனோ ஒன்று தன்னிச்சையாகவே டாவ் நியூட்ரீனோவாகவோ, மியூவான் நியூட்ரீனோவாகவோ மாறிக்கொள்கிறது. இதுபோலவே மற்றவையும் மாறிக்கொள்கின்றன.
இதுவரை நியூட்ரீனோவுக்கு நிறை இல்லையென்று நினைத்திருந்த விஞ்ஞானிகளுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. நிறையில்லாத எதுவும் தன்னைதான் மாற்றிக் கொள்ளவியலாது என்பது விதி. அப்படியிருக்கும்போது, நியூட்ரீனோக்கள் எப்படி தன்கள் ஃபிளேவரை மாறிக்கொள்கின்றன என்று ஆராய்ந்தார்கள். இதிலிருந்து நியூட்ரீனோக்கு நிச்சயம் நிறை இருக்கவே வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அந்த நிறையும், நியூட்ரீனோ எந்த அளவு சிறியதோ, அதேயளவு சிறியதாக இருப்பதால் நம்மால் அவதானித்துக்கொள்ள முடிவதில்லை.
நியூட்ரீனோ V என்னும் எழுத்தில் குறியீடாக குறிக்கப்படும். Ve என்பது எலெக்ட்ரான் நியூட்ரீனோவையும், Vµ மியூவான் நியூட்ரீனோவையும், Vt டாவ் நியூட்ரீனோவையும் குறிக்கின்றது (இங்கு e,µ,t ஆகிய எழுத்துக்கள் V க்குச் சற்றுக் கிழே எழுதப்படும்).
'வோல்வ்காங் பவுலி’ (Wolfgang Pauli) என்னும் ஆஸ்திரிய விஞ்ஞானி 1930ம் ஆண்டு, அணுக்கதிலிருந்து ‘பீட்டாக் கதிர்’ (ß Decay) வெளிப்பாடுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, பீட்டாக் கதிர்களுடன் இணைந்து ஏதோவொரு மாயமான ‘ஒன்று' வெளியேறுவதை அவதானித்தார். ஆனால் அது எதுவென அவரால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது எதுவெனக் கண்டுபிடிக்கக் கூடியளவுக்கான எந்தத் தன்மைகளும் அதற்கு இருக்கவில்லை. ஒன்று வெளிவருகிறது என்று மட்டும் தெரிகிறது ஆனால் என்னவென்று தெரியவில்லை. இதனாலேயே அப்படி வெளிவந்த ‘அந்த’ ஏதோவொன்றுக்கு பிசாசுத் துகளென்று (Ghost Particle) பெயரிட்டார்கள். ஆனால், பவுலி அந்தத் துகளுக்கு ‘நியூட்ரான்’ என்று பெயரிட்டார். எலெக்ட்ரானும், புரோட்டானும் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த நிலையில், நியூட்ரான் அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், மின்னேற்றமிலாத அந்தப் பிசாசை, நியூட்ரான் என்று பௌலி பெயரிட்டழைத்தார். ஆனால், அதற்கு இரண்டு வருடங்களின் பின்னர் சாட்விக் (James Chadwick) என்னும் இங்கிலாந்து விஞ்ஞானியால் இப்போது நியூட்ரான் என்று சொல்லப்படும் உண்மையான துகள் கண்டுபிடிக்கப்பட்டது. சாட்விக்கும் அதற்கு நியூட்ரான் என்றே பெயரிட்டார்.
இரண்டு துகள்களுக்கு ஒரே பெயர் இருக்க முடியாது என்பதனால், ஃபேர்மி (Enrico Fermi) என்னும் இத்தாலிய விஞ்ஞானி, பிசாசுத் துகளுக்கு 'நியூட்ரீனோ' (Neutrino) என்று பெயரிட்டார். இதற்குச் 'சிறிய ஏற்றமில்லாத் துகள்' (Little Neutral Particle) அல்லது 'சிறிய நியூட்ரான்' (Little Neutron) என்று அர்த்தமாகும்.
(தொடரும்)
-ராஜ்சிவா-

No comments:

Post a Comment