Monday, March 9, 2015

வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன.


அறுசுவைகளில் ஒரு சுவை கசப்பு. ஆனாலும், நமது நாக்கு கசப்பினை எப்போதும் தவிர்க்கவே நினைக்கிறது.

 கசப்பே உருவான வேப்பிலைகளில் உள்ள மகத்துவங்களோ, அன்றாடம் அதைச் சாப்பிட வேண்டிய தேவையைக் கூறுகிறது. “வேப்பிலையைத் தின்பதா…ஐயோ ஆளை விடுங்கள்!” என்று ஓடுபவர்கள் கூட, சத்குரு கூறும் இந்த தகவல்களை படித்தால், உண்மையை விளங்கிக்கொள்வர்! நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும்.

இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன. விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.

காலை எழுந்தவுடன் வேம்பு! நமது ஆசிரத்தில் ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு யோகாசனப் பயிற்சியுடன் அன்பர்கள் தங்கள் நாளைத் தொடங்குகின்றனர். யோகப் பயிற்சிக்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறிய உருண்டை அரைத்த வேப்பங்கொழுந்தையும், ஒரு சிறிய உருண்டை மஞ்சளையும் சாப்பிடுகின்றனர். அதன் பிறகு யோகப் பயிற்சியை இரண்டு மணி நேரம் செய்கின்றனர்.

இந்த உருண்டைகளால் என்ன பயன்? இவை உணவுக்குழாய் முதல் தொடங்கி வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்தையும் சுத்தம் செய்து, உடலின் வெப்பத்தையும், சக்தியையும் சீராகவைக்கிறது. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

நம் ஒவ்வொருவர் உடலிலும் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய திசுக்கள் இருக்கின்றன. அவை சமூகத்தில் உள்ள குற்றவாளிகளைப் போல் உடலில் ஆங்காங்கே அமைதியாக இருக்கின்றன. அவை ஒன்றிரண்டாக இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. அவை எண்ணிக்கையில் அதிகரித்து கூட்டமாகச் சேரும்போதுதான் சமூகத்தில் நடக்கும் கலவரம் போல் புற்றுநோயாக உடலில் வெளிப்படுகின்றன.

நம் உடலில் சாதாரணமாக உள்ள திசு, உயிர் வாழ ஏற்றுக்கொள்ளும் உணவைப் போல் புற்றுநோய் திசுக்கள் நூற்றி ஐம்பது முறை அதிகமாக உணவை ஈர்த்துக்கொள்ளும். எத்தனைதான் மருத்துவம் அளித்தாலும் அவை மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்துகொண்டே இருக்கும்.

அப்போது இவற்றை அழிக்க என்ன வழி? உண்ணாவிரதம் இருப்பதுதான் நல்ல வழி! யோகாசன முறைப்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்ல பலனளிக்கும். உணவு கிடைக்காதபோது சாதாரண திசுக்கள் கொஞ்சம்தான் களைப்படையும். ஆனால் நெடுநேரம் உணவு கிடைக்காதபோது, அதிக அளவில் உணவு தேவைப்படும் புற்றுநோய் திசுக்கள் மெதுவாக மடிந்துபோகும்.

இந்த கருத்தைத்தான் இன்று ஜெர்மானியர்கள் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் யோக சாஸ்திரப்படி கூறியபோது புரியாத விஷயம், இன்று ஜெர்மானியர்கள் கூறும்போது நன்கு புலப்படுகிறது. இந்த புற்றுநோய் திசுக்கள் மிகச் சிறிய அளவில் உடலில் இருக்கும்போது அவற்றை அழிக்க விடியற்காலையில் உண்ணப்படும் வேப்ப, மஞ்சள் உருண்டைகள் மிகவும் உதவியாக உள்ளன.

இவை இந்த திசுக்களை வளரவிடாமல் தடுத்து உடலை நல்ல நிலையில் வைக்கின்றன. ஆனால் புற்றுநோய் ஏற்பட்ட பின் சாப்பிடுவதில் பயன் இல்லை. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும். அதன் பின் ஒரு மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது. வேப்பிலையின் பலன்கள் சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இதை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும்.

அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும். இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். ஏன் வேப்பங்கொழுந்து? கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்!

வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன. உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை. வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!

No comments:

Post a Comment