Wednesday, January 7, 2015

LINGAM - முக லிங்கங்கள் - ஓர் அறிமுகம்



சிவாலயங்களில் கருவறையில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. சில சிவாலயங்களில், அபூர்வமாக முக லிங்கங்கள் வைத்து வழிபடப் படுகின்றன.
ஒரு முகம் கொண்ட லிங்கம் ஏக முக லிங்கம்.
இரண்டு முகம் கொண்ட லிங்கம் துவிமுக லிங்கம்.
மூன்று முகம் கொண்ட லிங்கம் திரிமுக லிங்கம்.
நான்கு முகம் கொண்ட லிங்கம் சதுர்முக லிங்கம் ( இது பிரம்ம லிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது ).
ஐந்து முகம் கொண்ட லிங்கம் பஞ்சமுக லிங்கம். ( இது சதாசிவ லிங்கம் என்றும் அழைக்கப்படும் ).
முக லிங்கங்களை வழிபடுவதனால், இம்மையில் அஷ்ட ஐஸ்வரியங்களும், மறுமையில் சிவலோக சித்தியும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
(திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் ஆலயம், நேபாளத்திலுள்ள பசுபதிநாதர் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம், எலிபெண்டா குகையில் உள்ள சிவாலயம், திரியம்பகத்திலுள்ள ஜோதிர்லிங்க சிவாலயம், ஈரோடு மகிமாலீசுவரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டேசுவரர் ஆலயம், ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள குன்றின் சாரலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க சகாய ஈசுவரர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் முக லிங்கங்கள் அமைந்துள்ளன.
ஆயிரம் முகங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம்:
குடந்தை ஸ்ரீ கும்பேசுவரர் ஆலயத்தில் சகஸ்ர லிங்கம் காணப்படுகின்றது. இந்த லிங்கம் ஆயிரம் முகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. சிவபெருமான் ஆயிரம் கரங்களையும், ஆயிரம் திருவடிகளையும், ஆயிரம் முகங்களையும் உடையவர்.
இந்த உண்மையை அப்பர் சுவாமிகள் தமது தேவாரப்பாடலில் அழகாகப் பாடுகின்றார்:
"ஆயிரம் தாமரை போலும்
ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும்
ஆயிரம் நீண்முடியானும்
ஆயிரம் பேருகந்தானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே".
கோடி லிங்கம் ( கோடீசுவரர் ) :
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழியை அடுத்த ஊரான கொட்டையூரில் உள்ள கோடீசுவரர் ஆலயத்தில் கோடிலிங்கம் அமைந்துள்ளது. இந்தச் சிவலிங்கத்தில் ஒரு கோடி சிறு முகங்கள் அமைந்துள்ளன.
சிவபெருமானின் அருளால் தோன்றிய ஒரு கோடி உருத்திரர்கள் சிவபூசை செய்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டார்கள். அவர்களின் வழிபாட்டைக் கண்டு மனம் நெகிழ்ந்த சிவபெருமான், அவர்கள் ஒவ்வொருவர் முன்னும் தனித்தனியே தரிசனம் தந்தார். பின்னர் ஒரு கோடி முகங்களைக்கொண்ட சிவலிங்கமாக அங்கே தோன்றினார். இது சிவ புராணம் கூறும் கதை.
சக்தி லிங்கம்:
காஞ்சிபுரத்தில், ஆதிபீட காமாட்சி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும் காளிகாம்பாள் கோயிலில் சக்தி லிங்கம் காணப்படுகின்றது. இந்த லிங்கத்தின் பாணப்பகுதியின் முகப்பில் அம்மன் திரு உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அவள் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றாள். அக் கரங்களில் பாசம், அங்குசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இது அபூர்வமான லிங்கமாகும்.

No comments:

Post a Comment