Monday, January 19, 2015

THE THEORY of EVERYTHING


வாழும் உலக மகா விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்கிங் ஏன் தனது காதல் மனைவியை பிரிந்தார் என்பதே ‘தி தியேரி ஆஃப் எவ்ரிதிங்’ படத்தின் கதை. ஸ்டீபனின் மனைவி எழுதிய ’மை லைஃப் வித் ஸ்டீபன்’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 


1963, இளைஞர்கள் பார்ட்டி, அங்கே ஸ்டீபன் ஹாவ்கிங்கை சந்திக்கிறார் ஜேன் வைல்டி. இருவரும் அறிவியல் சார்ந்து பேசி பொழுதைக் கழிக்கின்றனர். முதல் பார்வையிலேயே ஜேனிடம் காதல் வயப்படுகிறார் ஸ்டீபன். ஸ்டீபனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாக இருவரையும் நெருங்கச் செய்கிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை செய்து வருகிறார் ஸ்டீபன். பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு காணும் ஸ்டீபன், ப்ளாக் ஹோல் தேற்றத்துக்கு விரிவுரையைக் கண்டறிந்துவிட்டு மகிழ்ச்சியில் ஓடிவரும்போது கால் இடறி கீழே விழுகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், 'உனக்கு மோட்டார் நியூரான் நோய் இருக்கிறது. உனது நடை, அசைவுகள், பேச்சு, என அனைத்தும் சிறிது காலத்தில் முடங்கும்' எனக் கூறுகிறார். மனமுடைந்து ஓர் அறைக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார் ஸ்டீபன். அவரைத் தேடி வந்து, 'உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்' என, தனது காதலை உணர்த்துகிறார் ஜேன். ஸ்டீபனின் அப்பாவே தனது மகனின் நிலையைச் சொல்லி 'நீ வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்' எனக் கூற... 'அவரை நான் காதலிக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்வதுதான் முறை' எனக் கூறுகிறார் ஜேன்.
 

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம், குழந்தை என மாறிய ஸ்டீபனின் உடலும் காலப்போக்கில் சக்கர நாற்கலிக்கு மாறுகிறது. இருப்பினும் நேரத்துக்கு இவர் கண்டறிந்த தேற்றம், உலக அளவில் புத்தகமாக வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. பேச்சில்லாத ஸ்டீபன், தான் டைப் செய்யும் வார்த்தைகளை குரலாக மாற்றி ஒலிக்கும் கணினியின் துணையுடன் வாழப் பழகுகிறார். இப்படி போகும் ஸ்டீபன் வாழ்க்கையில் உற்ற துணையாக இருக்கும் ஜேன், ஒரு கட்டத்தில் சற்றே மன உளைச்சலுக்கு ஆட்பட, ஒரு தேவாலய இசைப் பள்ளியில் சேர்கிறார். அங்கே ஜோனாதன் என்பவருடன் நட்பும் நெருக்கமும் உண்டாகிறது. ஜோனாதன் கிட்டத்தட்ட ஸ்டீபனின் குடும்ப உறுப்பினராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் ஜோனாதன் - ஜேன் நட்பு, ஜேனின் அம்மாவுக்கே சந்தேகத்தைக் கிளப்புகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட ஸ்டீபன், தானே சென்று ஜோனாதனை நட்போடு அழைக்கிறார்.


அமெரிக்காவில் நேர்முகப் பேட்டிக்குச் செல்லும் ஸ்டீபன், ஜேனை வர வேண்டாம் எனவும், தனது உதவியாளரான பெண்ணையே அழைத்துபோகிறேன் எனக் கூற, உடைந்து போகிறார் ஜேன். அப்போதுதான் ஸ்டீபன் ஒரு முக்கிய முடிவும் எடுக்கிறார். அது என்ன முடிவு என்பதுதான் க்ளைமாக்ஸ்!
ஸ்டீபன் ஹாவ்கிங்காக எட்டி ரெட்மேயினி, தன் அபார நடிப்பால் அப்பட்டமாக ஸ்டீபனை முன்நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு நிலையிலும் வசனங்கள் இல்லாமல் உணர்வுகளிலேயே கண்களைக் குளமாக்கிவிடுகிறார். தன்னை உதாசீனப்படுத்தும் தறுவாயில் ஒரு புன்னகையை உதிர்த்து எட்டி ரெட்மேயினி கொடுக்கும் பார்வை நம்  மனதையே உலுக்குகிறது. ஏற்கெனவே ஏகப்பட்ட விருதுகளை இந்த படத்துக்காகப் பெற்றுவிட்ட எட்டிக்கு, அகாடமி விருதில் சிறந்த நடிப்புக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளது.

'என்ன ஒரு காதல்...  ஒரு பெண் தனது கணவனை இவ்வளவு தாங்குவாளா?' என எண்ணச் செய்கிறது ஜேனாக நடித்த ஃபெலிசிட்டி ஜோன்சின் நடிப்பு. ஜோனாதனாக சார்லி கோக்ஸ், ஸ்டீபனின் நர்ஸாக மேக்சின் பியாகே என ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கதைக்கேற்ப நடிப்பை சரியாக வெளிபடுத்தியுள்ளனர்.

ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது சவாலான விஷயம். அவ்வளவு தத்ரூபமாக ஒவ்வொரு சீனையும் செதுக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் மார்ஷ். முக்கியமாக 60-களின் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளார். ஸ்டீபன் - ஜேனின் குழந்தைகள்தான் பல சீன்களில் மிஸ்ஸிங்.


இப்போதுவரை அவர்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பதிய மறந்துவிட்டார் இயக்குநர். அந்த இடம்தான் சற்றே தடுமாற்றம்.

வசனங்கள் குறைவான உணர்வுமிக்க படத்தில் பின்னணி இசைக்குத்தான் வேலை அதிகம். ஜோஹன் ஜோஹன்சனின் பின்னணி இசையில் படத்தின் காட்சிகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. 60-களின் காலம், சூழல், என அப்போதைய காலத்துக்கே நம்மை இழுத்து செல்கிறது பிநோய்ட் டெல்ஹொம்மியின் கேமரா.

இவ்வளவு நேசித்த ஜேன் – ஸ்டீபன் தம்பதியினர் ஏன் பிரிந்து வேறு வேறு கல்யாணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் என்ற கேள்விக்கு சரியான பதில் கொடுத்துள்ளது இந்தப் படம்.

மொத்தத்தில் உண்மைக் காதல் என்பது இருவரும் இணைந்து இருப்பதில் மட்டுமல்ல... உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு பிரிதலிலும் இருக்கிறது என காதலுக்கே புது தேற்றம் சொல்கிறது இந்த ‘தி தியேரி ஆஃப் எவ்ரிதிங்’ படம். 

No comments:

Post a Comment