Monday, January 26, 2015

Republic Day REASON

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

No comments:

Post a Comment