சென்னை:
உங்கள் தெருவில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால், கொசு மருந்து புகை அடிக்க ‘1913’ என்ற எண்ணில் அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கொசு உற்பத்தியும் அதிகரித்துவிட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழை தொடங்குவதற்கு முன்பும், தொடங்கிய பின்னரும் கொசுக்களை ஒழிக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொசுக்களை ஒழிக்க உதவியாக கொசு மருந்து புகை அடிப்பதற்கு அழைப்பதற்காக இலவச தொலைபேசி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் ஜெகதீசன் கூறுகையில், "சென்னை மாநகர பகுதியில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகிய இடங்களில் கொசுப்புகை அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
490 கைத்தெளிப்பான்கள் மூலம் கொசுப்புழு கொல்லிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கால்வாய் ஓரம் மற்றும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் ஏழை மக்களை கொசுத்தொல்லையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.90 லட்சம் கொசுவலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகள் 3,200 சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறு வட்டத்திற்கும் அனைத்து கொசு தடுப்பு பணிகளையும் செய்ய ஒரு மலேரியா தொழிலாளி வீதம் 3,200 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்களை பரப்பும் அனாபிலிஸ் மற்றும் ஈ.டி.சி. கொசுக்களை ஒழிக்க வீடுகளில் உள்ள 83,126 மேல்நிலைத்தொட்டிகள், 51,204 கிணறுகள், 13,622 கீழ்நிலைத் தொட்டிகளில் வாரம் ஒருமுறை கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதுவரை 75 டன் உபயோகமற்ற பொருட்கள் மற்றும் 100 டன் பழைய டயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாலை நேரங்களில் குடிசைப்பகுதிகள் மற்றும் தெருக்களில் 52 வாகனங்கள் மூலமும், கையில் எடுத்துச் சென்று புகை அடிக்கும் 306 சிறிய எந்திரங்கள் மூலமும் கொசு மருந்து புகை அடிக்கும் பணி நடந்து வருகிறது.
தங்களது தெருக்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்தால், அந்த பகுதிகளில் புகை அடிக்க சென்னை மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணான ‘1913’ என்ற எண்ணில் அழைக்கலாம். ஆன்-லைன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் (97899-51111) தெரிவிக்கலாம். அந்த பகுதிகளில் புகை அடிக்கும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.
நடவடிக்கை எடுக்க தவறினால், உயர் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சென்றுவிடும். இதனால் பெரும்பாலான புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். இதுவரை 17,398 புகார்கள் பெறப்பட்டு, 17,397 புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன" என்றார்.
Thanks to VIKATAN