Sunday, November 30, 2014

RTI தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்குவது


ஒரு அலுவலகத்தில் தகவல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும், வழங்குவது (supply the information available in any material form) என்பது பொது தகவல் அலுவலரின் கடமையாகும். ஆனால் பிரிவு 2(i)-ல் வரையறை செய்யப்பட்ட பதிவுரு (Record)-ல் இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து (ஆராய்ச்சி செய்து) வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமைக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகத்தில் ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு மனுதாரார் கீழ்கண்ட கேள்விகளை சட்டத்தின் மூலமாக கேட்கிறார்
1)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள்?
2)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார்கள்?
மேலே கோரிய வினாக்களில், முதல் வினா அந்த தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சார்ந்த பொருண்மையை (Question of fact) பற்றியது. எத்தனை மாணவர்கள் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள் என்ற விபரம் தேர்வுத்துறையிடம் உள்ளதால், அதை மனுதாரரருக்கு பொது தகவல் அலுவலர் வழங்க கடமைபட்டவராவார்.
இரண்டாவது வினாவிற்கு, மனுதாரார் கேட்ட தகவல்களானது மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை அறியவேண்டும் என்றால், பொது தகவல் அலுவலர் தேர்வு எழுதிய 500 மாணவர்களின் மதிப்பெண்களையும் ஆராய்ந்து அதாவது பதிவுருகளிலிருந்து (மதிப்பபெண் பட்டியலில்) இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்பதால், இவ்வாறு தேர்ந்தெடுத்து தகவல் வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமை அல்ல.
ஆனாலும், மேல் கண்ட சூழ்நிலைகளில் மனுதாரார் கோரிய தகவல்கள் இல்லை என்று மறுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மனுதாரருக்கு ‘ஐநூறு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை மொத்தமாக ரூ.1000 கட்டணம் செலுத்தி’ பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் மனுதாரரர் கோரிய தகவல்கள் ‘மதிப்பெண் பட்டியல்’ என்ற வடிவத்தில் பதிவுருவாக பொது அதிகார அமைப்பிடம் உள்ளது. அதாவது பொது தகவல் அலுவலர், ஆராய்ச்சி செய்து தகவல்களை, ஆவணங்களில் இருந்து (மதிப்பெண் பட்டியல்) தேர்ந்தெடுத்து தரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த தகவல்கள இருக்கும் பதிவுருகளை (மதிப்பெண் பட்டியல்) வழங்க கடமைபட்டவராவார்.
ஒரு குடிமகனுக்கு எவ்வாறு ஒரு பொது தகவல் அலுவலரை ஆராய்ச்சி செய்து தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்க நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லையோ அதுபோலவே ஒரு பொது தகவல் அலுவலருக்கும் ஒரு குடிமகனை, தகவல்கள் எந்த வடிவத்தில் பொது அதிகார அமைப்பில் இருக்கின்றது என்று ஆராய்ச்சி செய்து, அதன் பின்னர், தகவல்கள் இருக்கும் வடிவத்தில் மட்டுமே தகவல்களை கேட்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லை. மேல் கண்ட உதாரணத்தில், ஐநூறு மாணவர்களின் ‘மதிப்பெண் பட்டியலை’ மனுதாரார் நேரடியாக கேட்கவில்லையென்றாலும், மனுதாரார் கேட்ட வடிவத்தில் தகவல்கள் இல்லை என தகவல்களை வழங்க மறுப்பதற்கு பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை.
ஆகவே, பொது அதிகார அமைப்பிடம், ஒரு இந்திய குடிமகன் தகவல்களை கோரும்போது, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் பொது தகவல் அலுவலர் வழங்கவேண்டும் ஆனால் தகவல்கள் பிரிவு 2(i)-ல் வரையறுக்கபட்டவைகளில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்க வேண்டியவாறு அமைந்தால், எந்த வடிவத்தில (பதிவுருக்களில்) இருந்து அந்த தகவல்கள் தேர்ந்தெடுத்து வழங்கவேண்டியது உள்ளதோ, அந்த அனைத்து பதிவுருகளையும் தகுந்த கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கவேண்டும். மாறாக, குடிமகன் கேட்கும் தகவல்கள் பொது அதிகார அமைப்பின் கைவசம் இருந்தும், குடிமகன் கேட்கும் வடிவத்தில் தகவல்கள் இல்லை என்ற காரணத்திற்காக ‘No such information is available in the office as seek by the informant under the RTI Act” என்று குடிமகனின் மனுவை நிராகரிக்க பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை. 

Thanks – Mr. Leenus advocate