Sunday, November 23, 2014

சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றுதான் நடராஜரின் திருவுருவம்


முழுமுதற்கடவுளான சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றுதான் நடராஜரின் திருவுருவம். கலைகளில் சிறந்த பரதக்கலையின் அற்புதமான சொரூபம்தான் நடராஜர் திருவுருவம்.

நடராஜரின் ஆனந்த தாண்டவக் கோலம் பார்க்கப் பரவசம் தரும் அற்புத திருவுருவம். இதன் அழகைக் காண விரும்பாதவர்களே உலகில் இல்லை எனலாம். மேலைநாட்டினர் இந்தியா வந்தால் வாங்கும் முதல் பொருட்களில் ஒன்று நடராஜர் விக்ரகம்தான். உலகின் பெரும்பாலான வீடுகளில் இவரைக் காணலாம்.

கோவில் என்றால் நடராஜர் நடனமிடும் தில்லையம்பதிதான். உலகம் தோன்றிய நாள் முதல் அடியவர்பொருட்டு ஆனந்த தாண்டவம் ஆடி சிதம்பரத்தில் அருளுகிறார் நடராஜர்.

விண்வெளியில் சுற்றிச் சுழலும் எண்ணற்ற அண்டகோளங்களை ஒரு லயத்தோடு கூடிய இசைவாக அசையச் செய்யும் மாபெரும் சக்தியே இறைவன். அணுவுக்குள் அணுவாக, அத்தனைக்கும் அப்பாலும் நின்று அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆற்றலே இயற்கை. அதுவே சிவம். அந்த சிவமெனும் எல்லையில்லா பரம்பொருள் தன்னுள் சக்தியை இணைத்து ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களைச் செய்தவண்ணம் பிரபஞ்சத்தை இயக்கிவருகிறார்.

நவீன உபகரணங்கள் மூலம் அணுவின் உள்துகள் நடனமிடும் அற்புதக் காட்சியை படம்பிடித்து, அது அப்படியே நடராஜர் நடனத்துடன் ஒத்துவருவதைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்; மெய்சிலிர்த்தனர். அணுவுக்குள் நடராஜர் வடிவம் இயங்கிக்கொண்டிருப்பதை நிரூபித்துள்ளனர்.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞ்ஞான நடனமே சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும்போது நம் உடல் சிலிர்க்கிறது