Tuesday, November 25, 2014

சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும் (பகுதி 1)




சுயபால் விரும்பிகளின் (Homosexualist) ஈடுபாடுகளை அடிப்படையாக வைத்து, சமீபத்தில் மிகப்பெரியதொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நமது கலாசார வாழ்க்கை முறையை, இந்த சுயபால் விரும்பிகளின் நடைமுறை சீரழிக்குமெனக் கருதி, 'இந்த நடவடிக்கைகள் மிகவும் தவறானவை' என்னும் எதிர்ப்புக் குரல்கள் உரக்கக் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரம் 'இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம். அதில் தலையிட நமக்கென்ன உரிமையிருக்கிறது?' என்ற ஆதரவான குரல்களும், எதிக் குரல்களுக்கு  நிகராகவே ஒலித்துக் கொண்டிருக்கிறன. இந்த இரண்டு எதிர் எதிர் குரல்களையும் உற்றுக் கவனிக்கும் போது, இரு சாராருமே இந்தப் பிரச்சனையை மேலோட்டமான ஒரு பார்வையிலேயே அணுகுகிறார்களோ என்ற சந்தேகம்தான் நமக்கு உருவாகிறது. காத்திரமான அடிப்படைத் தகவல்கள் எவற்றையும் ஆராயாமல் கருத்துச் சொல்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. இந்த நிலையில், ஏதோ ஒரு பக்கம் சார்ந்தோ அல்லது தனி விருப்பு சார்ந்தோ நானும் இங்கே என் கருத்துகளைச் சொல்லிவிட முடியாது. மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை இது. இதை மிகத்தெளிவான, தனித்தன்மையுள்ள, அறிவியல் சார்ந்ததொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியுமென்று நினைக்கிறேன். அதனால், அந்த ஆராய்ச்சிக்குள் உங்களையும் அழைத்துக் கொண்டு, நானும் நுழையலாம் என்று விரும்புகின்றேன். அப்படி நுழைவதற்கு முன்னர் ராஜ்சிவாவாகிய எனக்கு, நேரடியாகவே நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.  

பல வருடங்களுக்கு முன்னர் இது நடந்தது. ஜேர்மனியில் என் வாழ்கையை ஆரம்பித்த காலகட்டங்களில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் பணிகளுக்கென தனியான ஒரு அறை எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் இயல்பாகப் பழகக் கூடிய என்னை, அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் நன்றாகப் பிடித்துக் கொண்டது. சகதொழிலாளர்கள் சகஜமாகவே என்னுடன் பழகுவார்கள். அனைவரும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள். என் அறைக் கதவை திறந்தால் நீண்டிருக்கும் பெரிய ஹாலில் பாரிய இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அவற்றை இயக்கும் அனைவரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். ஜேர்மன் நாட்டினர் இனத்துவேசம் நிறைந்தவர்கள் என்னும் ஒரு பேச்சு உலகெங்கும் பரவலாகவே இருந்து வருகிறது. அப்படி இனத்துவேசத்துடன் சிலர் இருப்பதென்னவோ உண்மைதானென்றாலும், அவர்கள் வெகு சொற்பமான தொகையினர்தான். நம்மிடையே காணப்படும் மதத் துவேசம், ஜாதித் துவேசங்களுடன் ஒப்பிடும் போது, இவர்கள் ஒன்றுமேயில்லை எனலாம். என்னுடன் பணிபுரிந்த அனைவரும் என்னுடன் அன்புடன் பழகுவதற்கு என் வேற்று நிறமும் ஒரு காரணம். ஆபிரிக்கர்கள் போல ரொம்பக் கறுப்புமில்லாமல், அவர்களைப் போல வெள்ளையுமில்லாமல், அவர்கள் விரும்பி உண்ணும் சாக்லேட் நிறத்துடன் இலங்கையிலிருந்து பலர் ஜேர்மனிக்கு அந்தக் காலகட்டங்களில்தான் குடியேறியிருந்தோம். துருக்கியர் தவிர்ந்து வேறு நாட்டவர்கள் ஜேர்மனிக்கு வந்திருக்காத காலம் அது.

உடன் பணிபுரிபவர்கள் அப்பப்போ கிடைக்கும் காபி இடைவேளைகளில் என் அறையை நோக்கி வந்து என்னுடன் காப்பியருந்திச் செல்வார்கள். இதற்கேற்றாற் போல, எனது அறைக்கு அருகிலேயே காப்பி உருவாக்கும் தானியங்கி இயந்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. என்னுடைய அறைக்கு வந்து காபி குடித்துப் பேசிச் செல்லும் நண்பர்களில் 'மார்ட்டின்' என்னும் ஜேர்மனியனும் இருந்தான். ஆறடிக்குக் குறையாத வளர்ச்சியும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் உடல்வாகும் கொண்டவன் மார்ட்டின். ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிக் கச்சிதமாக, கட்டுமஸ்தாக இருப்பான். அவன் கண்ணசைவில் மயங்குவதற்கு பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய உருவமைப்பு கொண்டவன். நான் அந்தக் தொழிற்சாலையில் சேர்ந்த சில வாரங்களிலேயே, மார்ட்டினின், 'அடுத்தவருக்கு உதவும் இயல்பு' பற்றி கேள்விப்பட்டிருந்தேன். தொழிற்சாலையில் யாருக்கு என்ன நடந்தாலும் முன்னுக்கு நின்று உதவிசெய்யும் பண்புடையவன் அவன். ஒருமுறை, இயந்திர விபத்தில் சிக்கி சக தொழிலாளி ஒருவன் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால், தூக்கி உதவி செய்யப் பலர் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் (எய்ட்ஸ் பயம்), மார்ட்டின் அவனை அவதானமாகத் தூக்கி, முதலுதவிகள் அளித்து அம்புலன்ஸ் வண்டி வரும்வரை அருகிலிருந்து பாதுகாத்தான். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், 'மார்ட்டின் ஒரு அற்புதமான மனிதன்'. ஒருநாள் காலை என் அறைக்கு வந்த மார்ட்டின், 'சிவா, கொஞ்சம் பொறு நான் காப்பி எடுத்து வருகிறேன்' என்று சொல்லிச் சென்றான். சென்றவன் ஐந்து நிமிடத்துக்கு மேலாகியும் வரவில்லை. அப்போது மேலதிகாரியிடமிருந்து, 'தன்னை வந்து சந்திக்கும்படி' எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என் மேலதிகாரியின் அறைக்கு, காபி இயந்திரத்தைத் தாண்டித்தான் நான் செல்ல வேண்டும். சரி அப்படியே மார்ட்டினிடம், 'காபியை என் அறையில் வைத்து விடு' என்று சொல்லிச் செல்லலாம் என்று புறப்பட்டேன். காபி இயந்திரம் இருக்குமிடத்தை அண்மிக்கும் போது, மார்ட்டின் காபி இயந்திரம் மறைக்கும் இடத்தில் எனக்கு முதுகைக் காட்டியபடி யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். 'அட! இவன் இங்கிருக்கிறானே!' என்று நினைத்து அவனருகில் சென்றேன். அப்போதுதான் மார்ட்டின் யாரையோ கட்டியணைத்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. நான் வருவதைக் கண்ட அவர்கள், முத்தமிட்டபடியே சற்றுத் தலையைத் திருப்பி என்னைப் பார்க்க, நானும் அவர்களை முழுமையாக பார்க்கக் கூடியதாக இருந்தது. 

அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் என் உடம்பு பதறலுடன் தூக்கிப் போட்டது. கைகால்களில் ஒரு இனம் புரியாத நடுக்கம் பற்றிக் கொள்ள, சற்று முன்னர் சாப்பிட்ட காலைச் சாப்பாடு குமட்டிக் கொண்டு வாய்க்கு வருவது போல ஜாலம் காட்டியது. அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து எனது அறைக்குள் ஓடிச் சென்றேன். என் வாழ்நாழில் அப்படி ஒரு அருவெறுப்பான காட்சியை அன்றுதான் கண்டேன். மார்ட்டின் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஒரு இளைஞனை. என் பக்கம் அவர்கள் முத்தமிட்டபடி திரும்பும் போது, மார்ட்டினும், அந்த இளைஞனும் வாயில் வாயை வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் அவர்கள் நாக்கு சுழன்றபடி வெளியே வந்த காட்சியை என்னால் பல நட்கள் மறக்க முடியாமல் இருந்தது. அப்படியொரு அதிர்ச்சியை, அதுவும் மார்ட்டினைப் போல அழகான ஒரு ஆண்மகனிடமிருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை. இலங்கையில் கட்டுப்பாடான கலாச்சாரத்தில் வளர்ந்துவிட்டுத் திடீரென ஜேர்மனிக்கு வந்து, சில மாதங்களில் இப்படியொரு காட்சியை கண்ணுக்கு முன்னால், அதுவும் என்னுடன் பழகியவ ஒருவன் மூலமாகக் கண்டது அதிர்ச்சியாக இருந்தது. மேலதிகாரி என்னை அழைத்ததைக் கூட நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே என்னுடைய இருக்கையில் பல நிமிடங்கள் இருந்துவிட்டேன். திடீரென அறைக் கதவு திறந்து கொண்டது. மார்ட்டின் கையில் காபியுடன், அதே கனிவான, நட்பான சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் என் முகமோ மூன்று லாரிகள் ஒன்றாக மோதியது போல, பல கோணங்களாக மாறி, இருண்டு கிடந்தது. "சாரி சிவா, என் காதலர் திடீரென என்னைப் பார்க்க வந்துவிட்டார். அவரது கம்பெனியின் பணி நிமித்தமாக மூன்று நாட்கள் பேர்லின் சென்றுவிட்டு இன்று காலைதான் திரும்பினார். வந்தவுடன் என்னிடம் வீட்டுச் சாவியைப் பெற்றுச் செல்ல வந்தார். அதனால்தான் காபி லேட்டாகிவிட்டது". எதுவுமே நடக்காதது போல சொல்லிக் கொண்டிருந்தான். 'எனக்கு முன்னால் முத்தமிட்டது தவறு' என்று சொல்லி என்னிடம் பேச்சுக்காவது ஒரு மன்னிப்பைக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். ஊஹூம்.... மார்ட்டின் அப்படி ஒரு விசயம் நடக்கவே இல்லை என்பது போலச் சென்றுவிட்டான். 

நான் விரும்பிச் சுவைக்கும் காபி, தன் மணத்தைப் பரப்பியபடி மேசையில் இருந்தது. ஆனால், அதைத் தொடவே அருவெறுப்படைந்தேன். என்னால் நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை. ஆண்களையே விரும்பும் ஒரு காமுகனுடனா நான் இவ்வளவு நாட்களும் சிரித்துப் பேசியிருந்திருக்கிறேன் என்று நினைக்க எனக்கே அழுகை வந்தது. என்னுடன் பேசும் போதெல்லாம் என்ன என்ன என விதமான கெட்ட நினைப்பில் இவன் என்னைப் பார்த்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். அடிபட்ட பறவை போல அறைக்கு வெளியே செல்லாமல் அப்படியே இருந்தேன். இந்த நினைப்புகள் எல்லாம் எனக்குள் சிரிப்பையும் வரவைக்கத் தவறவில்லை. சற்று நேரத்தில் ஜோஹான் என்னும் இன்னுமொரு நண்பன் அறைக்குள் வந்தான். இவனும் என்னுடன் மிக நன்றாக பழகக் கூடிய ஒரு நண்பன். அறைக்குள் வந்து என் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ பிரச்சனை என்பதைக் கண்டு கொண்டான். "என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" என்று கேட்ட ஜோஹானிடம், தயக்கத்துடன் நான் கண்ட காட்சியைச் சொல்ல ஆரம்பித்தேன். "அது வந்து...., காபி மெசினுக்கு அருகில் மார்ட்டின் இன்னுமொரு ஆணைக் கட்டியணைத்து முத்தமிட்டபடி இருப்பதைக் கண்டேன்" என்று நான் ஆரம்பிக்கும் போதே, "ஆமா! அந்த்ரே வந்திருந்தானே. நானும் கண்டேன். அவன்தான் மாட்டினின் காதலன். சொல்லப் போனால், அவர்கள் இருவரும் கணவன் மனைவிகள். அந்த்ரே ரொம்ப நல்ல பையன். நீ கட்டாயம் அவனுடன் பேச வேண்டும். அவன் அடிக்கடி இங்கு வருவான். ஆமா..! நீ என்னவோ சொல்ல வந்தாயே! என்ன நடந்தது?" என்று கேட்டான். மார்ட்டினிடம் இருந்த அலட்சியத்தை விட இவனிடமிருந்த அலட்சியம் அதிகமாயிருந்தது. "அடப்பாவிகளா! இரண்டு ஆண்கள் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது உங்களுக்குப் பிரச்சனை இல்லையா?" என்று வெளியே கேட்காமல் மனதுக்குள் அலறினேன். "இல்லை.... அவர்கள் இப்படி முத்தமிடுவது பிரச்சனை இல்லையா?" பலகீனமான குரலில் கேட்டேன். "அவர்கள் இருவரும் முத்தமிடுவதில் நமக்கென்ன பிரச்சனை சிவா?" என்று எதிர்க் கேள்வி கேட்டான் ஜோஹான். பின்னர் இது எனக்கு பழக்கமில்லாத ஒன்று என்பதைப் புரிந்து கொண்டவனாக, "என் மனைவியை நான் முத்தமிடுவதற்கு யாருடைய அனுமதியையும் நான் பெறவேண்டியதுமில்லை. அப்படி முத்தமிடுவது ஒரு பெரிய விசயமுமில்லை. அதுபோல அவர்கள் இருவரும் கணவன் மனைவிகளாக முத்தமிடுவதால் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையல்லவா அது!" எனக்கு புரிய வைக்க முயன்றான் ஜோஹான்.

அன்றும் அதற்குப் பின் சில காலங்களுக்கும் மார்ட்டினின் இந்தச் செய்கையை ஏற்க முடியாதவனாகவே கழித்தேன். மார்ட்டினுடன் பழகுவதில் கூட எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் என் எந்தச் செயற்பாட்டிலும் நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. என்றாவது ஒருநாள் மார்ட்டின் என்னுடன் தப்பாக நடக்கலாம், அல்லது தப்பான கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்கலாம் என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது (இப்போதுதான் நான் உடல் பருமனாகி, ஒரு மாதிரியான உடலமைப்புடன் இருக்கிறேன். அப்போதெல்லாம் மிகவும் மெலிந்த இறுக்கமான உடல்வாகுடன் அழகாக இருந்தேன் என்றுதான் ஞாபகம்). என் எந்த எதிர்பார்ப்புகளையும் மார்ட்டின் நிறைவேற்றவேயில்லை. செக்ஸ் விசயத்தில் ஒரு பொருட்டாகவே அவன் என்னை மதிக்கவில்லை. என்னை மட்டுமில்லை, வேறு எவரையும் அவன் தப்பாகப் பார்த்ததும் இல்லை. தப்பாக நடந்து கொண்டதுமில்லை. அதே கனிவான, அன்பான மார்ட்டினாகவே கடைசிவரை இருந்தான். அதன்பின் இருபது வருடங்களுக்கு மேலாக மார்ட்டினுடன் நான் பணிபுரிந்தேன். ஜேர்மனியில் நான் வாழ்ந்த வாழ்கையும், அதன் கலாச்சார அமைப்பும், மார்ட்டினுடனான என் பணி அனுபவங்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. அந்த்ரேயையும், மார்ட்டினையும் முத்தமிடும் கோலத்தில்  பலநூறு தடவைகள் அதன் பின்னர் நான் பார்க்க நேர்ந்திருக்கிறது. அவற்றை மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளக் கூடிய அனுபவப் பக்குவம் எனக்குள் நிறைந்திருந்தது. அவை ரொம்பச் சாதாரண நிகழ்வுகள்தான் என்பதை எனக்கு அறிவுறுத்த ஜோஹான் போன்றவர்களின் உதவி தேவையிருக்கவில்லை. மார்ட்டினின் நண்பன் (காதலன்) அந்த்ரே எனக்கு நண்பனாகியதும் சில மாதங்களிலேயே நடந்தது. அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாகப் பார்க்கும் பக்குவம் என்னுள் வந்துவிட்டிருந்தது. காலப் போக்கில் மார்ட்டினிடமே, ஒருபாலீர்ப்புப் பற்றிய என் சந்தேகங்கள் அனைத்தையும் மெல்ல மெல்லக் கேட்டுத் தீர்த்தேன். அவன் கூறிய பதில்கள் எனக்குள் இருந்த முட்டாள்தனமான சிந்தனைகள் அனைத்தையும் சிதறடித்தன. 

உயிர்மைக்கு என்றோ எழுதப் போகும் 'ஒருவன்', அன்றே எனக்குள் ஒளிந்திருந்தானோ தெரியவில்லை. மார்ட்டினுடன் பேசும்போது, அனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்தேன். ஒருநாள் நேரடியாகவே அவனிடம் கேட்டேன், "மார்ட்டின், ஒரு ஆண் இன்னுமொரு ஆணை முத்தமிடுவதைப் பார்க்கும்போது எங்களுக்கு என்னவோ செய்கிறதே, அப்படி முத்தமிடும் உங்களைப் போல உள்ளவர்களுக்கு அது அருவெறுப்பாக இருப்பதிலையா?" அப்போதுதான் அவன் அந்த உறவு நிலையின் தாற்பரியங்களை முழுமையாக எனக்குப் புரிய வைத்தான். அவன் கூறியவறை அவனது வார்த்தைகளாகத் தராமல், தொகுத்த நிலையில் என் வார்த்தைகளாகவே தருகிறேன். 

மார்ட்டின் சிறுவனாக இருந்து பாலுணர்வு தோன்றும் வயதை எட்டும் போது, மற்றப் பையன்கள் போல அல்லாமல் தான் வித்த்தியாசமானவன் என்பதை உணர ஆரம்பித்தான். சக நண்பர்களாக இருந்த சிறுவர்கள் பெண்களைப் பற்றிப் பேசும்போது, இவனுக்கு அதில் கலந்துகொள்ளும் நாட்டம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தது. சொல்லப் போனால் நண்பர்கள் தங்கள் நண்பிகளை முத்தமிடுவதைக் காணும்போது, ஒருவித அருவெறுப்புத்தான் இவனுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் இவனுக்குள்ளும் பாலுணர்வும், காதலுணர்வும் தோன்றத்தான் செய்தன. அவையெல்லாம் ஒரு ஆணை நோக்கித்தான் இருந்ததேயொழிய, ஒரு பெண்ணை நோக்கியல்ல. ஆண் பையன்களுடன் இருக்கும் போது, ஒருவித பரவச நிலையை தான் அடைவதை மார்ட்டின் உணரத் தொடங்கினான். மிகவும் நம்பிக்கையுள்ள சர்ச்சுக்கு செல்லும் கட்டுப்பாடான கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவன். தான் ஒரு ஆணில் கவரப்படும் நினைப்பு, தப்பு என்று தன் உணர்வுகளைக் கட்ட்டுப்படுத்தி வந்திருக்கிறான். தன் சக சிறுவர்களிடன் காதலைச் சொல்லும் துணிச்சலும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் இளைஞனாக மாறும்வரைக்கும்தான் அவனுக்குப் பிரச்சனைகளாக இருந்தன. இளைஞனாக மாறிய மார்ட்டினுக்கு, சுலபமாக ஒரு ஆண் நண்பன் கிடைத்தான். தனது இந்தச் சுயபால் விருப்ப நிலையை தன் பெற்றோர்களிடமும் மறைக்க மார்ட்டின் விரும்பவில்லை. ஒருநாள் மாலை உணவு அருந்தும் வேளை, தன் பெற்றோர்களிடம், தன் நிலையைப் புரியக் கூடிய வகையில் சொன்னான். அதைக் கேட்டவுடன் பெற்றோர்கள் முதலில் திகைத்துப் போனாலும், அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பெண்களின் பக்கம் தன்னைச் செலுத்தி மாற்றிக் கொள்ள மார்ட்டின் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறான். கௌரவமான தன் குடும்பத்துக்கும், தனக்கும் கூட, அவமானங்கள் இதனால் ஏற்படும் என்று நினைத்து, பாடசாலையின் மூலம் உருவாக்கிக் கொடுக்கப்படும் சைக்காலஜி சிகிச்சையைக் கூடச் செய்து பார்த்திருக்கிறான். அவை எதுவுமே பலனளிக்காத நிலையில்தான் தனது நிஜத்தைப் புரிந்திருக்கிறான். அந்த நிஜத்துடனே வாழவும் பழகியிருக்கிறான். மற்றவர்கள் சொல்வது போல, சுயபால் இச்சை உடையவர்கள் விரும்பி இந்த நிலையை அடைவதில்லை. இந்த நிலைக்கு அவர்கள் வரும்போது மிகவும் அவமானப்படுகிறார்கள். மற்றவர்களால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இந்த அவமானங்களையெல்லாம் வெற்றி கொண்டுதான் இந்த நிலையை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் சொல்லப் போனால், மார்ட்டின் போன்ற சுயபால் இச்சையினர் மாற்றப்பட முடியாதவர்கள். ஆனால் கொடுமை என்னவென்றால், அவர்களை மாற்றலாம், சிகிச்சை கொடுத்தால் மாறிவிடுவார்கள் என்று அடுத்தவர்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதற்குக் காரணம், Bisexuals என்று சொல்லப்படும் இருபால் விரும்பிகளையும், இவர்களையும் போட்டு அனைவரும் குழப்பிக் கொள்வதுதான். 

இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதியில்........

-ராஜ்சிவா-