Saturday, November 22, 2014

நான் கேள்வி... நீங்க பதில்...

. 'எடை' என்றால் என்ன? 'நிறை' என்றால் என்ன? எடையும், நிறையும் ஒன்றுதானா?


நான் இப்போது கேட்கப் போகும் கேள்வி சிறுபிள்ளைத்தனமானதாகவே இருக்கும். ஆனால் அறிவியலில் மிக அடிப்படையானது. நீங்கள் எட்டாம் வகுப்பிலோ, ஒன்பதாம் வகுப்பிலோ இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், இன்றுவரை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பீர்களா என்பது சந்தேகம். கேள்வி என்ன என்று சொல்வதற்கு முன்னர், ஒரு சிறிய உதாரணத்துடன் ஆரம்பிக்கலாம்.
நீங்கள் பூமியில் 90 கிலோகிராம் எடை அல்லது நிறை உடைய ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். சந்திரனுக்கு நீங்கள் சென்றால், அங்கே உங்கள் எடை(அ)நிறை 15 கிலோகிராமாக இருக்கும். ஆனால் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். உங்கள் உடலுறுப்புகள் எதுவும் சிறிதாகவோ, பெரிதாகவோ மாறுவதில்லை. அங்கு மாறுவது ஒன்றேயொன்றுதான். ஈர்ப்புவிசை. சந்திரனின் ஈர்ப்புவிசை, பூமியின் ஈர்ப்புவிசையின் ஆறில் ஒரு மடங்கு. சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறில் ஒன்றாக இருப்பதால், உங்கள் எடை(அ)நிறை ஆறில் ஒன்றாகக் குறைந்து 15 கிலோகிராம் ஆகிவிடுகிறது.
இப்படி நீங்கள் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளுக்குச் செல்லும் போதும், உங்கள் எடை(அ)நிறை மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உண்மையில் நீங்கள் சிறிது கூட மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறீர்கள். உங்கள் உடலிலுள்ள அணுத்துகள்கள் அனைத்தும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன. எனவே உங்கள் எடை(அ)நிறை மாறிக்கொண்டே இருக்கிறது என்பதில் ஏதோ தவறு இருக்கிறது.
நான் மேலே எழுதும் போது எடை(அ)நிறை என்று எழுதியதே தவறு. அதில் எடை, நிறை ஆகிய இரண்டில் ஒன்றுதான் அலகாக (Unit) இடப்பட வேண்டும்.
சரி, இப்போது கேள்விக்கு வரலாம். 'எடை' என்றால் என்ன? 'நிறை' என்றால் என்ன? எடையும், நிறையும் ஒன்றுதானா? இந்தக் கேள்விகளுக்கு விளக்கத்துடன் நீங்களே பதில் சொல்லுங்கள்.
இயற்பியலில் பரீட்சயமுள்ளவர்கள் இதற்குப் பதில் சொல்வதைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். மற்றவர்கள் பதில் சொல்லுங்கள். தயவுசெய்து கூகிளை மட்டும் பார்த்துவிட்டு பதில் சொல்ல வேண்டாம்.
- ராஜ்சிவா -

==============================================================================================

ஒளி (Light) நேர்கோட்டில் பயணம் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒரு பொருளில், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் என்பதும் தெரியும். தண்ணீரிலும் திரவங்களிலும், அடர்த்தி கூடிய பதார்த்தங்களிலும் ஒளி முறிவடையும் என்றும் தெரியும்.
ஆனால், கேள்வி இதுதான்…….!
“ஒளி வளையுமா?”
நமக்கு முன்னால் ஒரு பெரிய பொருள் இருந்தால், அந்தப் பொருளுக்குப் பின்னால் இருக்கும் எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ஒளி வளைந்து செல்லக் கூடியதாக இருந்தால், நம்மால் அந்தப் பொருளுக்குப் பின்னால் இருக்கும் பொருளையும் பார்க்க முடியும். ஆனால், பார்க்க முடிவதில்லை என்பதே நிதர்சனம். இனிப் பதிலைச் சொல்லுங்கள்.
ஒளி வளைந்து செல்லுமா? என்பதற்குத் தயவு செய்து கூகிளில் பார்த்துப் பதில் சொல்லாமல், உங்கள் மனதில் தோன்றும் பதிலை மட்டும் சொல்லுங்கள். வளையுமென்றால், ஏன், எங்கே வளையும் என்றும் சொல்லுங்கள்.
பிற்குறிப்பு:
கடந்த 'நான் கேள்வி... நீங்க பதில்…(2)' இரண்டாம் பகுதியில், நான் கேட்டிருந்த கேள்விக்கு அனேகமானவர்கள் சரியான பதிலைத் தெரிவித்திருந்தனர். சந்திரனும், பூமியும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டிருக்கும் போதும், அவை ஏன் ஒட்டிக்கொள்ளவில்லை? அவை ஒட்டிக்கொள்ளாமல் தடுப்பது எது? என்று கேட்டிருந்தேன். அதற்குரிய விடை இதுதான்......!
ஏதோ ஒரு கணத்தில், பூமியைச் சந்திரன் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அதற்கு ஒரு சுழற்சி வேகம் கிடைக்கிறது. ஒரு புள்ளியை மையமாக வைத்து ஒரு பொருள் வட்டப்பாதையில் சுழன்றால், அதற்கு அந்த மையப் புள்ளியை விட்டு விலகக் கூடிய ஒரு 'மைய நீக்கு விசை' கிடைக்கும்.
பூமியை மையமாக வைத்துச் சந்திரன் சுற்றும் போதும், அதற்கு ஒரு 'மைய நீக்கு விசை' கிடைக்கும். அந்த விசையை நாம் x என்று எடுத்துக் கொண்டால், பூமியின் ஈர்ப்புவிசை எந்தத் தூரத்தில் x க்குச் சமமாக இருக்கிறதோ, அந்த இடத்திலிருந்து சந்திரன், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும். அது பூமியை நெருங்க மைய நீக்கு விசையும், விலகப் புவியின் ஈர்ப்புவிசையும் விடமாட்டாது.
- ராஜ்சிவா -